முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

pic

“தக்காளிக் கொய்யா…” -வேல்விழி-


என் உலகம் அலாதியானது
அங்கு கனவுகள் விரிய
கட்டளைகள் ஏதுமில்லை
விருப்புகள் நிறைய
விதண்டாவாதம் இல்லை

என் உலகம் என் வீடு
என் வீடு என் காடு

நிரை நிரையாய்
பல விதமாய்
அத்தனையும் வித்தகச்
சரித்திரச் சிற்பங்கள்

வீட்டு பின்கதவடியில்
விளாட்டு உட்பட
செல்லம்மா கறுத்தக்கொழும்பான்
பெருத்துப்போய் நிற்கும்

முசுடு பிடித்து
காயாக முன்னமே அதை
மோப்பம் பிடித்து
வட்டம் போட்டு விடுவோம்

அப்படியும் தப்பித்த
மிச்சம் மீதியை
மாமா மரமேற்றி
உலுப்பிக் கொட்ட
சாக்கை நீட்டி நாங்கள்
சாகுபடி செய்வோம்

வைக்கோலில் ஒளித்துவைத்து
ஒவ்வொரு நாளும்
கணக்குப் பார்த்து – அது
பழுத்து வருகையில் வரும்
பரவசம் இருக்கிறதே -அப்போது
வானம் கூட எங்கள்
வாசல்படியில் தான்

கிணற்றடிப் படிக்கு
இரண்டடி தள்ளி
கிளைகள் நீட்டி
நின்றது கொய்யா

அதற்கு எங்கள் பெயர்
தக்காளிக் கொய்யா
சும்மா இல்லை
எங்களை பொறுத்தவரை
அது ஒரு உலக அதிசயம்.

காரணமில்லாமல் இல்லை
ஆனால்,
சத்தியமாய் அது ஒரு
ஸ்திரத்திலும் இல்லை

சிலவேளை சின்னதாய் காய்க்கும்
சிலவேளை பெரிதாய் இருக்கும்
ஆனால் உள்ளே மட்டும்
தக்காளிச் சிவப்பாய்
பழுத்துச் சிரிக்கும்
ஒரு துண்டு என்றாலும் சுவையில்
உலகத்தையே கட்டிப்போடும்

அப்படியே பக்கத்தில் அன்னமுன்னா..
சின்னக்காயிலேயே பங்குபிரித்து
என்காய் உன்காய் என பிரித்தொதுக்கி
ஒவ்வொரு காலையும்
எழும்பிய உடனே
பவ்வியமாய் போய்- அது
பழுத்ததா எனப்பாத்து…
அப்பப்பா….
புத்தி முழுதும் அதே நினைவால்
தெப்பமாகி மிதக்கும்.

ஆனால்,
அத்தனை நாள் கனவையும்
மொத்தமாய் கூறு போட்டு
பொல்லாத புளுனியோ
கில்லாடி வௌவாலோ
பல்லாடிப் போயிருக்கும்

இனி மிஞ்சிய செங்காயை
பொறுக்கி எடுத்து
அடுக்கிய நெல்மூட்டைகளின்
அடைப்புகளில் சொருகி
அங்காலும் இங்காலும்
சிரட்டையால் மறைத்து
எலிக்கு போக்குக்காட்டி
பழுக்கவைத்து எடுக்கவேண்டும்
அதில் படிக்கலாம்
மகா அரசியல் தந்திரம்.

ஈசானி மூலையில்
இளமையாய் ஒரு பலா
படை நிரப்பி போர் போகும்
குடை மன்னன் போல
சடை பரப்பி நிற்கும்

தேனொழுகும் அதன் பழம்போல்
பூவுலகில் சுவையில்லை
நாலுவீடு தாண்டி
வாசம் கமகமக்கும்
பக்குவமாய் கயிறு கட்டி
வெட்டி பழமிறக்குவோம்

அப்பா சுளை பிரித்து
ஆளாளுக்கு கொடுக்கையில்
எப்போதும் சண்டைவரும்
எண்ணிக்கை கணக்கு வரும்
கூடவே சேர்ந்து அப்பாவின் அதட்டலும்
‘அரிசயசாய்’ வந்து விழும்

குசினிக்கு கிட்டவாய்
ஒரு கமுகஞ்சோலை
அதையொட்டி அப்பால்
ஒரு பெரிய விளாத்தி

அது ஒரு கட்டணம் செலுத்தப்படாத
குத்தகைத் தீவு
வாண்டுக் கூட்டங்களின்
வசந்தக் காடு

மாலை வேளை முழுக்க அங்கே
பாளைகளில் பவனி நடக்கும்
மருந்துக்கூட ஒரு சின்ன
பிஞ்சும் கிடையாது

‘எப்பிடிப்பா.. பிஞ்சு கசறுமே
தொண்டையை அரிக்குமே’
பெரிசுகள் வியப்பார்கள்
‘அதனால் என்ன..
உப்பும் தூளும் கொஞ்சம் கொட்டிக்கொண்டோம்’
பாளைச் சவாரியிலிருந்து
அசரீரி வரும்

இடப்பக்க வேலியோரம்
இருக்கிறது ஒரு பனங்கூடல்
வெறும் நாலைந்து பனை தான் -ஆனால்
நாளாந்தம் பழம் விழும்

அது ஒரு அட்சய பாத்திரம்
வகைவகையாய் எடுத்தெடுத்து
கொடுத்துக்கொண்டே இருக்கும்
நுங்கென்றும் கள்ளென்றும்
பழமென்றும் கிழங்கென்றும்
பனாட்டென்றும் புட்டென்றும்
இன்னபிற உணவென்றும்
ஏதோவொரு பெயரில்
எப்போதும் சமயலறையில்
உட்கார்ந்தபடி இருக்கும்

இன்னும்
முற்றம் நிறைந்த
நித்திய கல்யாணி..
வேலியோர செவ்வரத்தை…
தாத்தா வைத்த தேக்கு….
அம்மா வைத்த துளசி…

எல்லாம் நினைவிருக்கிறது
என் பட்டிக்காட்டு மனசுக்கு.
ஆனால் எப்படிக் கொடுப்பேன்
இத்தனை களிப்பையும்
‘கொம்ப்யூட்டரில்’ வாழும்
என் நகரத்து குழந்தைக்கு….?

-வேல்விழி-
13/01/2018

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்