
Pathivu | Tamil Win | IBC Tamil | Vakeesam | MaatraM | Tamil Diplomat | PonguThamiL | SamaKalam
யுத்தத்தின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற இறப்புக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், அவரது தலைமையின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினாலேயே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த டிசெம்பர் மாதம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கை தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தத்தில் இறந்த- இராணுவத்தினர் மற்றும் போராளிகள் என, அனைவரையும் உள்ளடக்கியதாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அண்மைய உள்ளூராட்சித் தேர்தல்களால் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்று, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
யுத்தகாலத்தில் இடம்பெற்ற மரணங்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, வன்னியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள், சந்தேக நபர்களின் எண்ணிக்கை என்பனவற்றை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்து நேரடியாக தகவல்கள் திரட்டப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இத்தகைய கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்ட போதிலும், அது அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.