கருணாநிதி: ஈழத்தமிழனின் பார்வை - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, August 12, 2018

கருணாநிதி: ஈழத்தமிழனின் பார்வை

தமிழ்நாட்டின் மூத்த தலைவரின் மறைவும் அதனையொட்டிய எதிர்வினைகளும் பற்றிய பதிவு ஒன்றை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

பொதுவாக தமிழகத்தில் கட்சி வேறுபாடு இன்றி கட்சித்தலைவர்களும் பொதுமக்களும் மிகுந்த கவலையோடு, அந்த துயரநிகழ்வை பதிவுசெய்கின்றார்கள்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக, பெரும்பாலான ஈழத்தமிழர்களால் அவரது மறைவு குறித்து கவனிக்காதபோக்கு இருப்பதை காணலாம்.

இந்த துயரநிலையை சரியான விதத்தில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.

தமிழகத்தை பொறுத்தவரை, அதன் அரசியலும் வாழ்வும் கட்சி ரீதியான வேறுபாடுகளும் உள்ளக அரசியலோடு சம்பந்தப்பட்டவை. ஒரு தேர்தலில் ஒருவரை துரோகி என அழைத்துவிட்டு, அடுத்த தேர்தலில் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு அங்கு சாதாரணமானது.

ஆனால் ஈழத்தமிழர்கள் அரசியல் என்பது, உயிர்களை விதைத்து பயணப்பட்ட போராட்டம். தமிழர்களை கொல்வதற்கே என்றே பயிற்றப்பட்ட இராணுவத்தின் மத்தியில், உயிர்வாழ்தலுக்கான போராட்ட வாழ்க்கை எங்களுக்கு.

கடந்த 33 வருட ஆயுதப் போராட்டத்தில், ஒருவனால் விடப்படும் தவறும் பல உயிர்களை காவுகொண்டுவிடும். ஒருவன் செய்யவேண்டிய கடமையை செய்ய மறந்தால், அல்லது செய்ய மறுத்தால் பல உயிர்கள் பறிக்கப்பட்டுவிடும்.

எனவே ஈழத்தமிழர்கள் எல்லோருமே, தங்கள் அம்மாவை அப்பாவை தங்கையை அக்காவை தம்பியை அண்ணாவை அல்லது தங்கள் நண்பர்களை என யாரையோ ஒருவரை நிச்சயம் இழந்திருப்பார்கள். அல்லது பல்வேறு தடவைகள் இடம்பெயர்ந்திருப்பார்கள் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்திருப்பார்கள். அல்லது தங்கள் உறவுகளை பிரிந்து நாடு நாடாக அலைந்திருப்பார்கள்.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு துயரகதை இருக்கும்.

இந்த துயரகதைகள் எல்லாமே, அவர்கள் வறுமையாலோ அல்லது அவர்கள் இயலாமையாலோ ஏற்பட்டதல்ல. அனைத்துமே கொடிய அரச பயங்கரவாதத்தால் திணிக்கப்பட்டது. உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தின் பக்கங்கள் அவை.

அனைத்துக்கும் மேலாக, எங்கள் மண்ணை எங்களால் தக்கவைக்கமுடியுமா என்ற கையறுநிலையில் நிற்கின்றோம்.

இந்தப்பின்னனயில் தான், தமிழ்நாட்டின் மூத்த தலைவரான கலைஞர் கருணாநிதி மீது, ஈழத்தமிழர்கள் எத்தகைய மதிப்பை வைத்திருந்தார்கள் என்பதை தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் ஊடாக பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பெருந்தொகை பணத்தை அள்ளி வழங்கிய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களுக்கு தலைவர் எழுதிய கடிதத்தையும், அதே காலப்பகுதியில் அன்றைய முக்கிய தலைவராக இருந்த கருணாநிதி அவர்களுக்கு தலைவர் எழுதிய கடிதத்தையும் ஒப்பிட்டு பார்க்குமாறு வேண்டுகின்றேன்.

"கனம் எம்.ஜி.இராமசந்திரன்" எனத் தொடங்கும் அக்கடிதம் "மதிப்புக்குரிய ஐயா" என விரிகின்றது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கருணாநிதி அவர்களுக்கு எழுதிய கடிதமோ “எனது பெருமதிப்புக்கும் அன்பிற்குமுரிய அண்ணா அவர்களுக்கு" என விரிந்து அண்ணா அண்ணா என கடிதம் முழுதும் பரந்து கிடப்பது அந்த உன்னத உறவுநிலை தானே.

தமிழ்ப்பற்றோடு ஒலித்த அந்தக்குரல், தமிழர்களின் தலைக்குரலாக இருக்கவேண்டும் என எண்ணியது யார் தவறு?

ஆனாலும் இந்த கடிதத்தை வாசித்து கிழித்து எறிந்ததையும், தமிழர் நலனில் அக்கறையற்று இருந்ததையும், உயிர்காக்கும் மருந்துகளுக்கு கூட தடைவிதித்தவர் என எம்மக்களுக்கு சொன்னவர்கள் யார்? எமது ஈழத்தலைவர்களா? இல்லையே. இன்று கருணாநிதியின் உடலத்திற்கு அருகே அழுதுகொண்டிருக்கும் அந்த தலைவர்கள் தானே.

மரணம் என்கின்றபோது, எல்லாவற்றையும் மறந்து மாரடித்து அவர்களால் அழமுடிவதைப்போல எங்களால் முடியவில்லை. ஏனென்றால் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகள். ஒவ்வொன்றையும் தொலைத்த ஓராயிரம் கணங்கள்.

ஆனாலும் தமிழ் மொழிக்காய் உழைத்த, தமிழகத்தின் பெருமனிதனுக்காய் எங்கள் கண்மூடி மௌனிக்க வேண்டும் என ஒரு கணம் எண்ணினாலும்,

ஈனக்குரலோடு எதுவுமற்று ஐயோ எனக்கதறும் எங்கள் மக்களின் அவலக்குரல்களே கண்முன்னே விரிகின்றதே என்ன செய்ய?

எனவே எங்கள் உணர்வுகளையும் புரிந்துகொள்ளுங்கள்!


No comments:

Post a Comment

Post Bottom Ad