தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு பன்னிரண்டு நாட்களாக நடைபெற்ற ஊர்திப்பேரணியானது பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது நிறைவைத் தருவதாக குறிப்பிட்டு காக்கா அண்ணை வெளியிட்ட அறிக்கையில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் பற்றியும் பெருமைகொள்கின்றார். அத்தோடு, பொய்யான கதைகளை சொல்லி தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி மீது குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றார் அவர். இந்த முரண்பாடுகளின் நிலையை விளங்கிக்கொள்ளும்பொருட்டு, சில விடயங்களை தொகுப்பாக உங்கள் முன்கொண்டுவருகின்றோம்.
தியாகி திலீபன் நினைவேந்தல் என்பது கடந்த ஆண்டுகளை விட சிறப்பான முறையில் உணர்வுபூர்வமாகவே நடைபெற்றுள்ளது. நடைபெற்ற சிறு சம்பவமானது நினைவேந்தலின் மகிமையை குறைக்கப்போவதில்லை என்பது முதலாவது விடயம். ஆனால், இந்த சூழலைப் பயன்படுத்தி பலர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது குற்றசாட்டை முன்வைப்பது என்பது அதன் ஊடாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் உறுதியான அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வாய்ப்பாக பார்க்கின்றார்கள்.
தியாகி திலீபன் நினைவேந்தல் என்பது ஈழத்தமிழர்கள் முன்னெடுக்கின்ற பல நினைவேந்தல்களில் ஒன்று. நினைவேந்தல்களுக்கு அப்பால், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், நீதிக்கான போராட்டங்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் நிலஅபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் என தமிழர் தேசியத்தை நிலைப்படுத்துவதற்காக செய்யப்படவேண்டிய பல செயற்பாடுகளில் தியாகி திலீபன் நினைவேந்தலும் ஒன்று. ஆனால், யாழ்மாவட்டத்துக்குள் கூட இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்காதவர்கள் தான், இத்தகைய குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என்பது இரண்டாவது விடயம்.
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து ஈகைச்சாவடைந்தபோது 13வது அரசியல் திருத்தமே வரவில்லை என்றும், அதற்கு எதிராகவே தியாகி திலீபன் உண்ணாநோன்பிருந்தார் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னனணியின் சுகாஸ் - முதலாம் நாள் நினைவேந்தலில் - கூறியது மிகவும் தவறானது என காக்கா அண்ணை குறிப்பிடுவது மூன்றாவது விடயம். அதனாலே புதிய நினைவேந்தல் கட்டமைப்பை அவசர அவசரமாக தொடங்கவேண்டி வந்ததாக காக்கா அண்ணை கூறுகின்றார். ஒரு மூத்த போராளியாக இருந்தவர் ஊடகப் பணியும் செய்தவர் என்ற வகையில் தியாகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளின் அரசியல் பரிணாமத்தை புரிந்திருக்கவேண்டும். உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன் "நான் வானத்திலிருந்து மலரப்போகும் தமிழீழத்தை பார்ப்பேன்" என திலீபன் எந்த சந்தர்ப்பத்தில் சொல்லியிருந்தார் என்பதையோ "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாகி திலீபனின் சுதந்திரக்குரலையோ மறந்திருக்க மாட்டார் என நம்புகின்றோம்.
இங்கு முக்கியமாக அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய விடயத்தை குறிப்பிட்டு இப்பதிவை நிறைவு செய்கின்றோம். இங்கு ஒப்பீட்டளவில் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார் நினைவேந்தலை ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டியவர்களே காழ்ப்புணர்வுடன் இதனை அணுகுவதை காணமுடிகின்றது. தியாகி திலீபன் வழிநடந்த தமிழ்த்தேசிய கோரிக்கைகளை தவிர்த்து நினைவேந்தல் செய்யப்பட்டால் அதனை முன்னின்று திருத்த வேண்டியவர்கள் அதற்கு மாறாக காவடி ஆடி தேவாரம் பாடுங்கள் போதும் என்கின்றார்கள். இதற்கு என்ன காரணம்? இவர்களது உண்மையான நோக்கம் என்ன? இதனை சாதாரண மக்களிடமே விட்டுவிடுவோம். முடிவை அவர்களே தீர்மானித்து கொள்ளட்டும்.
- வேங்கைச்செல்வன் -
No comments:
Post a Comment