பல்கலை மாணவர் கைது பிழையானது - மனோ கணேசன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 4, 2019

பல்கலை மாணவர் கைது பிழையானது - மனோ கணேசன்

பாதுகாப்பு சோதனை என பல்கலைக்கழகத்துக்கு உள்ளே சென்று அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, இணையத்தில் பகிரங்கமாக பகிரப்படும் ஒரு படத்தை காரணமாக காட்டி, மாணவ தலைவர்களை கைது செய்வது அதிகபிரசங்கித்தனம்.

எந்த நாட்டிலும் பல்கலைகழகம் ஒரு நாற்று மேடை. இப்போது அமைதியாக கிடக்கும் கழகத்தில், வன்முறை என்ற விதையை விதைத்தால், அது அங்கே வன்முறை பயிராகத்தான் முளைக்கும்.
இந்த அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை தரும் கூட்டமைப்பு, தமது ஆதரவுக்கு பிரதியுபகாரமாக வடக்கு மாகாணத்தின் அரசாங்க நிர்வாக, படைத்தரப்பு பொலிஸ் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மற்றும் எம்பீக்கள் கூட்டிணைந்த ஒரு பொறிமுறையை இதற்குள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
யாழ் கட்டளை தளபதி, பிராந்திய பொலிஸ் மாஅதிபர், வான்படை, கடற்படை, மாவட்ட அரசாங்க அதிபர்கள், ஆளுநர், கூட்டமைப்பு தலைமை மற்றும் எம்பீக்கள் மட்டத்தில் இது செயற்பட்டிருக்க வேண்டும். இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாக தீர்க்கப்பட்டிருக்கும். கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என இழுப்பட்டிருக்காது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இராணுவ தரப்பு கைது செய்ய, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த என, இது இவ்வளவு தூரம் நிழ்ந்திருக்க கூடாது.
பல்கலைக்கழகம்தான் எப்போதும் தீவிரவாதத்திற்கு நாற்றுமேடை. யாழ் பல்கலையில் இப்போது, நானறிய, வன்முறை சிந்தனை கிடையாது. பிரிவினை சிந்தனை கிடையாது. அவை மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. மழை விட்டாலும், தூவானம் விட்டது போல் ஆங்காங்கே எச்ச சொச்சங்கள் காணப்படத்தான் செய்யும்.
இது இளம் மாணவர் விவகாரம். இவற்றை சாணக்கியமாகத்தான் கையாள வேண்டும். ஆனால் இத்தகைய முன்யோசனையற்ற சம்பவங்கள் துளிர் விடும் ஜனநாயக சிந்தனையை கெடுத்து விடுகின்றன.
ஜேவிபி போராளிகள் என்ன, பூக்களை வைத்துக்கொண்டா சண்டை இட்டார்கள்? அவர்கள் என்ன, இந்திய படைகளுடனா சண்டை இட்டார்கள்? இன்று, தென்னிங்கையில் ஜேவிபி தலைவர் விஜேவீரவின் படங்கள் நாடு முழுக்க சுவரொட்டியாகவே ஒட்டப்பட்டு, கொண்டாடப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாவின் படங்களும் இணைய தளத்தில் அபரிதமாக தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அறையில் படம் இருந்தது என்று இதை ஒரு பெருங்குற்றமாக கருதி கைது செய்து, சிறையில் அடைத்து, மாணவர் மத்தியில் சினத்தையும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்க கூடாது.
உண்மையில், அரசாங்கத்தை அடுத்து, வடக்கின் பிரதான மக்கள் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு நண்பர்களின் குறைபாடாகவே இதை நான் கருதுகிறேன். எனது இந்த ஆரோக்கியமான விமர்சனத்தை கூட்டமைப்பு தலைமை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
இதை நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது அரசாங்கத்தின் அதிகாரபூர்வமற்ற பங்காளியாகவே இருக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் கடந்த அக்டோபர் அரசியலமைப்பு சதி முறியடிப்பு ஆகியவற்றில் பாரிய பங்களிப்பை, கூட்டமைப்பு இந்த அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் இழந்தது. இறுதியாக அவசரகால சட்டத்தையும் எதிர்க்காமல் ஏகமனதாக நிறைவேற ஆதரவளித்துள்ளது. இவை அனைத்தும் சரியே.
ஆனால் இவற்றுக்கு பிரதியுபகார விளைவாக வடக்கு மாகாணத்தின் அரசாங்க நிர்வாக, இராணுவ, பொலிஸ் ஆகியவற்றுடன் கூட்டமைப்பு தலைமை மற்றும் எம்பீக்கள் கூட்டிணைந்த ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
வடக்கில் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது அவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நியதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்போது யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்று பழைய யுத்தக்கால நியதிகள் செல்லாது. புதிய நியதிகள் உருவாக வேண்டும்.
இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாக தீர்க்கப்பட்டிருக்கும்.
கைது செய்யவா, வேண்டாமா என அவ்விடத்திலேயே தொடர்பு கொண்டு பேசி முடிவெடுத்திருக்கலாம். இது எதுவும் நடைபெற வில்லை. அதனால், கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என விவகாரம் இழுப்பட்டு விட்டது.
கைது நடைபெற்ற உடன் அங்கே சென்று கண்காணிக்கவும், நீதிமன்றத்தில் வழக்கை பேசி செயற்படவும் சட்டத்தரணிகள் உள்ளனர். இதற்கு அரசியல்வாதிகள் அவ்வளவு அவசியமில்லை.
ஆனால், ஆதரவளிக்கும் அரசுடன் கலந்து பேசி, ஒரு பொறிமுறையை உருவாக்கும் முகமாக அரசியல் தலைமை செயற்பட வேண்டும்.
எமது அரசுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. ஆனால் நீங்கள் அளிக்கும் ஆதரவை பிரயோஜனம் இல்லாமல் அளிக்க வேண்டாம். இந்த அரசில் இருந்துகொண்டே இதை நான் சொல்கிறேன்.
எனது இந்த கருத்தை எவரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மொழிப்பெயர்த்து கூறி, உங்கள் அமைச்சரே இப்படி சொல்கிறார், பாருங்கள் என கலந்துரையாடி சிரமப்பட வேண்டியதில்லை.
செவ்வாய்கிழமை அமைச்சரவையில் சுத்தமான சிங்கள மொழியில் நேரடியாக அவர்களுக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் விளங்கும் முகமாக நானே இதை கூறுவேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad