விகாரை அமைக்க புலிகள் எனக்கு உதவினர்! சுமணதேரர் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 2, 2019

விகாரை அமைக்க புலிகள் எனக்கு உதவினர்! சுமணதேரர்

பிரபாகரன் இருந்திருந்தால் ஹிஸ்புல்லா பல்கலைகழகம் கட்டுவாரா? விகாரை அமைக்க புலிகள் எனக்கு உதவினர்: சுமணதேரர் 'பகீர்'!

கிழக்கில் தமிழ்மக்களிற்கு சொந்தமான 400 ஏக்கர் காணியில், ஹிஸ்புல்லாஹ் திறந்தவெளி பல்கலைகழகம் அமைக்கிறார். அதை விக்னேஸ்வரனாலோ, சம்பந்தனாலோ தடுக்க முடியுமா? பிரபாகரன் இருந்திருந்தால் அந்த கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

விகாரை அமைப்பதற்கு தமக்கு விடுதலைப்புலிகள் உதவியளித்தார்கள் என்றும் பரபரப்பை கூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கும்போது-

"நான் கடந்த 30 வருடங்களாக போரை நன்கு அறிந்த பிக்கு. விடுதலைப்புலிகளின் காலத்திலேயே நான் இங்கு இருந்தேன். அப்போது வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். அங்கு சென்று விகாரைகளை சீரமைக்க புலிகளிடமிருந்து பல உதவிகளை பெற்றேன்.

அப்போது என்னை யாரும் விரல் நீட்டி பேசியதில்லை. என்னை யாரும் அச்சுறுத்தியதில்லை. தற்போதுள்ள அரசியல் தலைவர்கள்- தமிழ் தலைவர்கள் உட்பட- என் மீது பல குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள்.

போர்க்காலத்தில் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் மக்களிற்கு காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல தமிழ்மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பலமுறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். அப்போது, தமிழ்மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், இது இனத்துவேசம் என்றார்கள்.

மட்டக்களப்பின் எல்லை கிராமமான புனானையில் மூவின மக்களும் கல்வி கற்க திறந்தவெளி பல்கலைகழகம் ஒன்று, ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் காணியை, தமிழ்மக்களுக்கு வழங்காமல் எப்படி திறந்தவெளி பல்கலைகழகம் அமைக்க அரசு அனுமதித்தது?

தமிழ் மக்களின் பிரதிநிதி என கூறும் வடக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனாலும் இதை நிறுத்த முடியுமா?

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா? நாட்டில் சுபீட்சம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வர வேண்டுமா என எண்ணத் தோன்றுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad