வடக்கில் படைத்தரப்பானது கையகப்படுத்தியுள்ள பொது மக்களது காணிகளை மீள மக்களிடம் கையளிப்பதற்கு ஏற்ற வகையில் படைத் தரப்பினரது முகாம் மற்றும் படைக்கலன்களை இடமாற்றம் செய்வதற்கு தேவைப்படும் பணத்தை அரசாங்கம் வழங்குமாயின் ஆறு மாத காலத்தில் மக்களின் நிலங்களை மீள கையளிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
தெற்கில் ஜே.வி.பி யினர் போராடிய காலத்திலும் அவர்கள் தனி நாட்டினை கோரவில்லை. ஆனால் தனிநாடு கோரிய போராட்டமானது வடக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது. தற்போதும் புலம்பெயர் மக்கள் அதனை செயற்படுத்த வேண்டும் என்பதில் உற்சாகமாக உள்ளார்கள். எனவே தான் வடக்கினை தொடர்ந்து இராணுவம் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விஷேட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு செய்தியாளர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இந்நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டு வருகின்றனர். வடக்கிற்கு பல்வேறு தடவைகளில் விஜயம் செய்த ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இங்கு இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை அவதானித்து சென்றிருக்கின்றனர். இது தவிர தற்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணி ஒன்றையும் ஜனாதிபதி அமைத்துள்ளார்.
இவ்வாறு வடக்கின் அபிவிருத்திகளில் இராணுவமும் கவனம் செலுத்தி வருகின்றது. நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை இங்கு செய்து வருகின்றோம். எதிர் காலத்திலும் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இவற்றை நாம் யாரையும் ஏமாற்ற செய்யவில்லை. நாம் உண்மையாகவே இதனை செய்கின்றோம். இத்தகைய வேலைத் திட்டங்களை செய்துவிட்டு பின்னர் இதனை காண்பித்து அரசியலில் இறங்கும் எண்ணமும் எமக்கு இல்லை.
நீண்ட கால அழிவுகளில் இருந்து மீண்ட மக்களுக்கு நல்ல பொருளாதார ரீதியிலான கட்டமைப்புடன் கூடிய வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பதற்காவே நாம் இதனை மனப்பூர்வமாக செய்து வருகின்றோம். நாம் கூறுவதை கேளுங்கள். நாம் சொல்லும் சரியான விடயங்களை மக்களுக்கு சொல்லுங்கள். நாம் தவறிழைக்கும் போது அதனை செய்தியாக வெளியிடுவதற்கு நாம் தடையாக இல்லை.
வடக்கில் உள்ள மக்களும் எமது மக்களே. ஒரு முறை ஓர் செவ்வியொன்றில் இதனை நான் குறிப்பிட்டிருந்தேன். வடக்கிலுள்ள மக்களது பிரச்சினைகளை நாம் தீர்த்து வைக்க வேண்டும். எமது மனதில் வைராக்கியங்களை வைத்து செயற்படக்கூடாது என்பதை தெற்கு மக்களுக்கு ஒர் தொலைக்காட்சி செவ்வியின் போது குறிப்பிட்டேன். இராணுவமும் மனிதர்களே. நாம் சீருடையில் இருக்கின்றோம். நீங்கள் சிவிலில் இருக்கின்றீர்கள். இதுவே வித்தியாசம் என்றார்.
கேள்வி : இராணுவத்தினர் மக்களது காணிகளை மீள கையளிப்பதில் ஆரம்பத்தில் அதிகளவில் காணிகளை விடுவித்த போதும் தற்போது அதன் அளவு குறைந்துள்ளதே ? ஏன் இவ்வாறு தாமதமாகின்றது ?
பதில் : இராணுவத்தினர் மக்களின் நிலங்களை விடுவிப்பதில் நாட்டின் பாதுகாப்பினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவான பாதுகாப்பு பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீதமாகவுள்ள பகுதிகளில் அதிகளவு பாதுகாப்பு தேவை இருக்கின்றது.
இவை தவிர யாழில் தற்போது ஆவா குழு போன்ற பல குழுக்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இவை தொடர்பிலும் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தியே இந் நிலங்களை விடுவிக்க முடியும்.
கேள்வி : இராணுவம் முன்னால் போராளிகளை கண்காணிப்பதால் அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுள்ளதே ?
பதில் : முன்னால் போராளிகள் 5ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கேள்வி : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதேனும் நிலைமை யாழில் உள்ளதா ?
பதில் : மக்களிற்கு அச்சுறுத்தலான குழுக்கள் உள்ளன. இவற்றை நாம் கவனிக்காது படை முகாம்களை அகற்றினால் அவர்கள் அந்த இடங்களுக்கும் சென்று அச்சுறுத்தல் செய்வார்கள். எனவே இவற்றையும் அவதானித்து தான் நாம் எமது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி : யாழ்ப்பாணத்தில் இராணுவம் விடுவித்துள்ள காணிகள் எவ்வளவு ? இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய காணி எவ்வளவு ?
பதில் : யாழில் 25,986.67 ஏக்கர் கையகப்படுத்தப்பட நிலையில் அவற்றில் 23,078.36 ஏக்கர் நிலம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்னும் விடுவிக்கப்படாத நிலமாக 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இதில் அரச காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமான நிலமே படைத்தரப்பு வசம் உள்ளது. மேலும் விரைவில் 500 ஏக்கர் காணிகள் மீள மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
கேள்வி : அவ்வாறு விடுவிக்க தீர்மானித்துள்ள பகுதிகள் எவை ?
பதில் : இராணுவ சிறு சிறு முகாம்கள் பல வெவ்வேறு இடங்களில் உள்ள நிலையில் அவற்றை அங்கிருந்து அகற்றி தலைமையகத்திற்கு கொண்டு வந்த பின்னரே அவற்றை விடுவிக்கவுள்ளோம். எனவே தற்போது அது தொடர்பான சரியான தகவல்களை கூற முடியாதுள்ளது.
கேள்வி : குடாநாட்டில் படைத்தரப்பு வசமுள்ள மக்களது காணிகளை மீள கையளிக்க எவ்வளவு காலம் தேவை ?
பதில் : மக்களது காணிகளில் உள்ள படைகலன்களை படை முகாம்களை அகற்றி அவற்றை இடமாற்றம் செய்வதற்கு தேவைப்படும் பணத்தை அரசாங்கம் வழங்கினால் ஆறு மாத காலத்திலேயே அந் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்.
கேள்வி : அவ்வாறாயின் நீங்கள் கோரியிருக்கும் பணம் எவ்வளவு ?
பதில் : அது ஒவ்வொரு படை முகாமிற்கு ஒவ்வொரு விதமாக காணப்படும்.
கேள்வி : அப்படியாயினும் தலைமைப்பீடம் என்ற வகையில் உங்களிடம் அதன் கணக்கீடு இருக்குமல்லவா ?
பதில் : அனைத்து படை முகாம்களின் அகற்றுவதற்கான பணத்தின் தொகை பெறப்பட்டு உங்களிற்கு ஒரு சில நாட்களில் அறியத் தருகின்றேன்.
கேள்வி : தொல்லியல் ஆதாரமான யாழ்ப்பாணம் கோட்டையை இராணுவம் கையகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றதே ?
பதில் : அக் கோட்டையை முழுமையாக இராணுவத்திடம் வழங்கினால் அங்கு எமது படை முகாம்களை நகர்த்தி விட்டு பொது மக்களது காணிகளை விடுவிக்க கூடியதாக இருக்கும். இது தொடர்பாக நாம் தொல்லியல் திணைக்களத்துடன் பேசி வருகின்றோம்.
கேள்வி : வடக்கு மாகாண சபையும் யாழ்ப்பாணத்தின் சில உள்ளூராட்சி சபைகளும் யாழ்ப்பாணத்தில் இராணுவம் ஈடுபடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய போதும் நீங்கள் தொடர்ந்தும் மக்களுக்கான சிவில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றீர்களே ?
பதில் : நாம் செய்வதனை யார் கூறினாலும் நிறுத்த போவதில்லை. அது மக்களுக்கான தேவை. எனவே யார் கூறினாலும் நாம் அதனை நிறுத்த மாட்டோம்.
கேள்வி : வடக்கில் வாள்வெட்டு குழுக்களே உள்ள நிலையில் தெற்கிலேயே துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் போன்றன இடம்பெறுகின்றன. ஆனால் வடக்கிலேயே தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகின்றதே ?
பதில் : அவ்வாறு காணப்பட்டாலும் ஆயுத ரீதியான போராட்டம் என்பது வடக்கிலேயே தோற்றம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற முப்பதாண்டு கால போராட்டம் காரணமாக வடக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இங்கு அதிகளவு கவனத்தை வைத்துள்ளோம்.
கேள்வி : ஆனால் தெற்கிலும் ஜே.வி.பி போன்ற போராட்டங்கள் இடம்பெற்றிருந்தனவே. அதன் பின்னர் அதில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததே ?
பதில் : ஜே.வி.பி யினர் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லையே. தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்த போராட்டம் வடக்கிலேயே ஆரம்பமாகியது. தற்போதும் கூட புலம்பெயர்ந்துள்ளவர்களில் சிலர் இக் கோரிக்கையை செயற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்கள். எனவே தான் வடக்கினை நாம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment