விசாரணைகள் தொடர்கின்றன
திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றிய விரிவுரையாளரான செந்தூரன் போதநாயகி என்பவர் நேற்று முன்தினம் திருகோணமலை சங்கமித்த கடற் பகுதியில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இச் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் விரிவுரையாளரின் விஷேட சட்ட வைத்திய நிபுணர் உ. .மயூரதன் தலமையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணி நேரம்இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் , குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக எதுவும் கூறமுடியாத நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணையூடாகவே உண்மை கண்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது .இதனிடையேமேற்படி விரிவுரையாளரான நடராசா போதநாயகியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பிணி என பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
வவுனியாவின் தெற்குப்பகுதியில் ஆசிகுளம் எனும் கிராமத்தினை அண்டிய கற்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்
இவர். மூன்று பெண் பிள்ளைகளையும் 3 ஆண் பிள்ளைகளையும் கொண்ட நடராசாவின் குடும்பத்தில் ஐந்தாவது பெண் பிள்ளை போதநாயகி.
இளம் வயதிலேயே கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்திய போதநாயகி சாதாரணதரம் வரை சிதம்பரபுரம் நடராஜா வித்தியாலயத்தில் தனது கல்வியை முடித்து கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் தமது உயர்கல்வியை தொடர்ந்திருந்தார்.
அங்கும் தனது ஆளுமையை வெளிப்படுத்திய இவர் கலைப்பிரிவில் சிறந்த பெறுபேற்றைப்பெற்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையில் தனது மேற்படிப்பை தொடர்ந்திருந்தார்.
வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் தனது தொழில் முயற்சியில் கால்பதித்த போதநாயகி 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் கற்ற திருகோணமலை வளாகத்தில் விரிவுரையாளராவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையினால் அங்கு விரிவுரையாளராக தொழில் புரிந்து வந்தார்.
இந்நிலையிலேயே ஒட்டுச்சுட்டானை சேர்ந்த செந்தூரன் என்பவரை 6.04.2018 அன்று கைப்பிடித்தார்.
இவரிடம் அமைதியான சுபாவமும் யாருடனும் அளவுக்கதிகமாக பேசாத குணமும் உதவவேண்டும் என்ற மனோ நிலையும் நிறைந்திருந்ததாக கூறும் இவரது தோழிகள் போதநாயகியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் நம்பமுடியாதவர்களாகவும் உள்ளனர்.
தான் சார்ந்தவர்களுக்கு கூட தன்னால் பாதிப்பு ஏற்படக்கூடாது என எண்ணும் போதநாயகி ஒரு தனிமை விரும்பி என அவரது உற்ற நண்பி தெரிவித்திருந்தார்.
மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள போதநாயகி 19 ஆம் திகதி தனது சக விரிவுரையாளரிடம் வைத்தியரை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் அதனால் தான் பேருந்தில் வவுனியாவிற்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்து மதியமளவில் திருகோணமலை வளாகத்தில் இருந்து சென்றுள்ளார்.
இதன்போது அவர் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி பயணிப்பதை வளாகத்தின் காவலாளி கண்டுள்ளார். எனினும் வீடு வந்து சேராததால் அவரது வருகையை எதிர்பார்த்திருந்த குடும்பத்தினருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட தந்தை, சிறுநீரகப் பாதிப்புக்குள்ளான தாய் என்ற நிலையில் எதிர்பார்த்திராத துன்பியல் சம்பவமொன்று அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
வீட்டுக்கு வருகின்றேன் என தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்த விரிவுரையாளர் இரவாகியும் வீட்டுக்கு வராமையினால் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதிலும் அவரின் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இந் நிலையில் திருகோணமலையின் சங்கமித்தை கடற்கரையில் பெண்ணொருவரின் பாதணிகளும் கைப்பையும் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று கைப்பையை கைப்பற்றி சோதனையிட்டபோது அது திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளரொருவர் என்ற அடையாளத்தினை கண்டறிந்து கொண்டனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வளாகத்துடன் தொடர்புகொண்டபோது அவர் வளாகத்தில் இருந்து சென்ற விடயம் தெரியவரவே குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணொருவரின் சடலம் கடற்கரையோரமாக மிதப்பதை அவதானித்தனர்.
குறித்த சடலம் விரிவுரையாளருடையதுதான் என சந்தேகித்த பொலிஸார் அதுபற்றி வளாகத்திற்கு அறிவித்ததுடன் அவர்களின் குடும்பத்தினருக்கும் அறியச் செய்திருந்தனர்.
வவுனியா ஆசிகுளம் கற்குளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் குறித்த தகவலை, போதநாயகியின் கணவருக்கும் வழங்கியதுடன் திருகோணமலைக்கும் விரைந்தனர்.
அங்கு சடலத்தினை கணவர் மற்றும் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போதநாயகியின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருக்கும் நிலையில் போதநாயகியின் சகோதரரின் வாக்குமூலத்தில் சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது ஒரு கொலையாக இருக்கலாமா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதேவேளை யாழ். வைத்தியசாலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment