ஊர்மிளா கதை - சித்தர் சொன்ன பொய்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 1, 2018

ஊர்மிளா கதை - சித்தர் சொன்ன பொய்!

79ஆம் ஆண்டின் காலப்பகுதி அது.

அப்போது நாங்கள் குடும்பமாக கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் வாடகை வீடொன்றில் வசித்து வந்தோம்.

78ஆம் ஆண்டு ஜனவரியில் நான் மட்டக்களப்பில் இருந்து இடமாற்றம் பெற்று வந்த பின் நான் பிறந்த மண்ணில் வல்வையில் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம்.அங்கு இரவு வேளைகளில் வந்து தங்கிவிட்டு அதிகாலையிலேயே புறப்பட்டுச் செல்லும் 'தம்பி' கேட்டுக் கொண்டதற்கிணங்க அங்கிருந்து குடிபெயர்ந்தோம்.
கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு முன்பாகச் செல்லும் ஒழுங்கையில் பரஞ்சோதி வித்தியாசாலைக்கு முன்பாக உள்ள வீடொன்றில் குடிபுகுந்தோம்.

அப்போது இயக்கத்தில் இருந்த ரவி என்பவரின் அண்ணா தயாபரசிங்கம் என்பவருக்குச் சொந்தமான வீடு அது.

தம்பி ஆட்களே எனக்கு அந்த வீட்டை ஒழுங்குபண்ணிக் கொடுத்திருந்தார்கள்.

சில காலங்களின் பின் அந்த வீட்டில் இருந்தும் இடம் மாறி சம்பியன் ஒழுங்கை வீட்டிற்கு வந்துவிட்டோம்.

எங்களோடு தலைவர் அவ்வப்போது தங்குவதனாலும்,தம்பிமார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போவதனாலும் தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதில்லை.

எங்கள் இரகசியங்கள் வெளியில் போய்விடக் கூடாதென்பதற்காக அக்கம் பக்கமுள்ள வீடுகளின் சிறுவர்களோடு விளையாடுவதற்குக் கூட நாங்கள் எங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை.

சம்பியன் ஒழுங்கை வீட்டில் இருந்தபோது,ஒரு நாள் தலைவர் ஊர்மிளாவையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.

கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மகளிர் அமைப்பில் இருந்த போதே ஊர்மிளாவோடு எனக்கு பழக்கம் இருந்தது.அவர் கொழும்பில் ஒரு பார்மஸியில் வேலை செய்து கொண்டிருந்தார்.முகுந்தன் கொழும்பில் இருந்தபோது அவருக்கான தகவல்கள் ஊர்மிளாவின் முகவரிக்கே கரிகாலன் என்ற பெயரில் தந்தி மூலம் தலைவர் அனுப்பி வைப்பார்.

பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து உமாமகேஸ்வரன் தேடப்படுகின்றார்.அவரோடு தொடர்பில் இருந்த ஊர்மிளாவும் தேடப்படும் சூழ்நிலை உருவானது.

"அண்ணா ஊர்மிளா அக்காவை ரெண்டு மூன்று நாட்கள் உங்களோடை தங்க வைச்சிருங்கோ,நான் இந்தியாவுக்குப் போகும்போது இவங்களையும் கூட்டிக்கொண்டு போக வேணும்"என்று சொல்லி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்று விடுகின்றார்.

நான் அரச பணியில் இருந்த காரணத்தினால் அப்போது எங்கள்மீது யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை.

முன்பே என்னோடு அறிமுகமாகி இருந்த படியால் ஊர்மிளாவும் எனது மனைவி பிள்ளைகளோடு சகஜமாக உறவாடிப் பழக முடிகின்றது. இரண்டு நாட்களின் பின் தலைவர் வீட்டுக்கு வந்து தாங்கள் இந்தியாவுக்குப் புறப்பட இருப்பதாகக் கூறி ஊர்மிளாவை அழைத்துச் செல்கின்றார்.

அவர்கள் சென்றதும் என் மனதுக்குள் ஒரு கேள்வி எழுகின்றது.

உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் கொழும்பில் இருந்த போது அவர்களுக்குள் ஒரு உறவு இருப்பதாக

கொழும்பு வட்டாரத்தில் பேசிக்கொள்ளப் பட்டதை இளைஞர் பேரவையில் செயற்பட்டுக் கொண்டிருந்தமையால் நானும் அறிந்திருந்தேன்.

உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டில் இருக்கின்றார்,தம்பி ஊர்மிளாவையும் கூட்டிக்கொண்டு போகின்றார்.இதென்னடா கஷ்டகாலம் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்

அப்போது நான் தலைவரோடு தீவிரமாகச் செயற்பட்டாலும்,அவரது நம்பிக்கைக்கு உரியவராக விளங்கினாலும் திருமணமானவர்கள் பெருமளவில் இயக்கத்தில் முழுநேர உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்படாத காலகட்டம்.

திருமணமாகி மனைவி,பிள்ளை களோடு வாழ்ந்து கொண்டிருந்த என்னால் அப்போது முழுநேர உறுப்பினராக என்னை இணைத்துக் கொள்ளும் சிந்தனையும் எனக்கு இருந்திருக்கவில்லை.

தம்பி ஊர்மிளாவோடு புறப்பட்டுச் சென்று சில மாதங்களின் பின் திரும்பி வந்து வழமைபோல் எங்கள் வீட்டிற்கு வந்து தங்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் ஒரு நாள் உமாமகேஸ்வரன்-ஊர்மிளா தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் உமாமகேஸ்வரன் பிரிந்து விட்டது பற்றியும் கூறினார்.

"தம்பி அவங்கள் ரெண்டு பேருக்கும் இடையில் இருந்த தொடர்பு பற்றி உங்களுக்கு முன்பு தெரியாதோ"என்று கேட்டேன்.

"ஐயோ இல்லை அண்ணா,உங்களுக்குத் தெரியுமோ?

எனக்கு முன்பே சொல்லியிருக்கலாமே"என்றார்.

"உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சிட்டன்.மற்றது இயக்க உள் விசயங்களில நான் எப்படி தலையிடலாம் என்ற எண்ணம்தான். தம்பி" என்றேன்.

அந்த சம்பவங்கள் பற்றி மிகவும் வேதனையோடுதான் என்னிடம் கூறினார்.உமாமகேஸ்வரன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்.அதே போன்று ஊர்மிளா மீதும் "அக்கா அக்கா" என்று மிகுந்த பாசத்தோடு இருந்தவர்.

சில காலங்களின் பின்பு ஊர்மிளா நாட்டிற்கு வந்து வவுனியாவில்

இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்த அன்று எங்கள் வீட்டிற்கு வந்த தலைவர்

"அண்ணா ஊர்மிளா அக்கா செங்கமாரி வந்து இறந்துவிட்டாங்களாம்"என்று மிகவும் வேதனையோடு கலங்கிய குரலில் கூறினார்.அன்று நீண்ட நேரமாக அவர் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

2014ஆம் ஆண்டளவில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த 'தமிழ்க்கவி'அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது ஊர்மிளா விசயமாக பேசும்போது," பாவம் ஊர்மிளா செங்கமாரி வந்து இறந்தவராம்"என்று நான் கூறிய போது,தலையை ஆட்டியவாறு அதனை மறுத்து "இல்லை அது வேறை விசயம்"

என்று கூறியதோடு மாத்திரம் நிறுத்திக் கொண்டார்.தம்பி தீபச்செல்வனும் அப்போது உடனிருந்தார்.

ஐயரும் தனது நூலில்,"ஊர்மிளா சில காலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டாலும் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன"என குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக 'உமாமகேஸ்வரன்-ஊர்மிளா தொடர்பு'என்ற தலைப்பில், 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற தனது நூலில் என்ன எழுதியுள்ளார் என்று பார்ப்போம்.

உமாமகேஸ்வரனூடாக எமக்கு ஆதரவாக வேலை செய்த முதல் பெண் ஊர்மிளா பொலிஸாரால் தேடப்படுகின்றார்.கொழும்பில் வாழ்ந்த அவர் வடக்கு நோக்கி வருகிறார்.பெண் என்பதால் இலகுவாக அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுவிடலாம் என அச்சம் நிலவியது.

அன்டன் பாலசிங்கம் இந்தியாவுக்கு வந்து எம்மைச் சந்திக்க விரும்புவதாக எமக்கு தகவல் வருகிறது. இதற்காக பிரபாகரனும் இந்தியா செல்ல விரும்புகிறார். இந்தியா சென்று பாலசிங்கத்தைச் சந்திக்கவும் ஊர்மிளாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லவும் இது சரியான சந்தர்ப்பம் என எண்ணிய பிரபாகரன் இந்தியா செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்.

பிரபாகரன், ஊர்மிளா, சந்ததியார், கலாபதி ஆகிய நால்வரும் எமது விசைப்படகில் இந்தியா செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ரவியும் பாலாவும் இந்தியா செல்கின்றனர். பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கத்தினுள் புதிய பிரச்சனை ஒன்று தலைதூக்குகிறது.

பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை.அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள்.அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் தங்கியிருந்தார்.அவர் பேசிக் கொண்டிருந்த பின்னர் மொட்டைமாடியில் சென்று உறங்குவார்.

முகுந்தனும் (உமாமகேஸ்வரன்)  பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் வேளையில் அவருடன் மொட்டை மாடிக்குச் சென்று விடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

பலருக்கும் உமாமகேஸ்வரன், ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப் பயிற்சிக்குச் செல்கின்ற வேளையில் விமான நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்து கொண்டதாக அவ்வேளையில் விமான நிலையத்தில் இருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார்.

நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் சுபாவம் உடையவராதலால்,பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார்.தவிர அவர்களுடைய உடல் மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் கொள்ளவே இல்லை. இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்பட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒருநாள் அனைவரும் உறங்கச் சென்ற பின்னர் மொட்டை மாடிக்குச் சென்றிருக்கின்றனர்.

அங்கே ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறுநாள் காலை இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்து முறையிட்டிருக்கிறார்கள். பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்கள்.உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்து இருக்கிறேனா என அவர்களைக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

சில மணி நேரங்களில் ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன் அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று கூறுகிறார்.உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்தபோது அது மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு
எதிரானவர்களாக மாறுகின்றனர்.

இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி,இவர்களிடையேயான தொடர்பு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான் என்று சொல்கிறார்.தவிர, கொழும்பில் ஊர்மிளா முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனைத் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கோருகின்றனர்.

உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார்.இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்றும்,மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.

உமாமகேஸ்வரனை உணர்வுமிக்க போராளியாகத்தான் நான் பார்த்திருக்கிறேன்.பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இராணுவத் தூய்மைவாதத்தில் ஊறிப்போன எனக்கு உமாமகேஸ்வரனின் நடவடிக்கை துரோமாகத்தான் பட்டது. அனைத்திற்கும் மேலாக உமாமகேஸ்வரனிற்கு தனது ஊரில் ஒரு காதலி இருந்தார் என்பதும் எனக்கு தெரிந்திருந்ததால்அவர்மீதான வெறுப்பு அதிகமாகி இருந்தது.  இவை ஐயரின் சாட்சியத்திலிருந்து.

இத்தனை உண்மைகளும் தொடர்பு பட்டவர்களும் உயிரோடு இருக்கும்போது,புளட் தலைவர் சித்தார்த்த மகாராஜா தான் அறிந்த வரையில் அப்படி எதுவும் இடம்பெறவில்லை என்ற விதமாகவும IBC க்கு பேட்டி கொடுத்திருப்பது எவ்வளவு பித்தலாட்டமானது என்பதை உறவுகள் புரிந்து கொள்ளுங்கள்.

பதிவர் - தேவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad