அரசமைப்பு சட்டத்தை மீறி எட்டாவது நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நள்ளிரவு (09.11.2018) கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதன்படி 2019 ஜனவரி 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடவுள்ள தரப்புகள் இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுவைத் தாக்கல் செய்யமுடியும்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், நான்கரை வருடங்கள் செல்வதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்றும், மேற்குறிப்பிட்ட காலப்பகுதி முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே அதைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தை நள்ளிரவு ஜனாதிபதி கலைத்துள்ளார்.
அரசமைப்புக்கு முரணான வகையில் கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். மறுநாள் நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார். அன்றிலிருந்து நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தது. அரசியல் கட்சிகள் மற்றும் மேற்குலகத்தின் அழுத்தங்களையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி அனுமதித்திருந்தார். அன்றைய தினம் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்புக்கே பிரதமர் பதவி வழங்கப்படும் என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவுள்ள சூழ்நிலையால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரி கலைத்துள்ளார். மைத்திரியின் இந்த முடிவுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
No comments:
Post a Comment