கஜேந்திரனின் தம்பியை கடத்தியது எப்படி? விளக்குகிறார் சுரேஷ் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, November 5, 2018

கஜேந்திரனின் தம்பியை கடத்தியது எப்படி? விளக்குகிறார் சுரேஷ்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளிநாட்டிலிருந்து யார் மூலம் இலங்கை திரும்பி வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்." இவ்வாறு அதிர்ச்சி தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆயுதப் போராட்ட காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் மாத்திரம் அங்கம் வகித்த கஜேந்திரனோ, தங்களை மட்டும் தேசிய வீரர்களாகவும், ஏனையவர்களை துரோகிகளாகவும் சித்தரிப்பது அசிங்கமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய ஞாயிறு வார இதழ் ஒன்றிற்கு வழங்கிய நீண்ட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் தலைமையிலான கூட்டணிக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கம் வகித்தால், தாங்கள் இணைந்து கொள்ள மாட்டோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடம்பிடிப்பதை பற்றிய கேள்வியெழுப்பப்பட்டிருந்த போதே, மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.

அந்த செவ்வியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்-

"வேறு யாரும் இருந்தால் நாங்கள் வர மாட்டோம், கொள்கை ரீதியாக அவர்கள் தவறானவர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்ற இந்த வசனங்கள் எல்லாம் மிக மிக சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். ஏனெனில் முன்னணியோ அல்லது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அவர்கள் யாராக இருந்தாலும் கூட தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு முழுமையான வரைபடத்தை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை.

நாங்கள் இதனை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்று கூறவில்லை. உள்நாட்டில், வெளிநாட்டில் என்ன செய்யப் போகின்றோம், எவ்வாறு உரிமைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்று இன்னும் கூறவில்லை. வெறுமனே சுமந்திரன் மீதும் சம்மந்தன் மீது குற்றச்சாட்டுக்களை மட்டும் வாசித்துக் கொண்டிருக்காமல் மாற்று வழி முறைகள் என்ன என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அந்த மாற்று வழிமுறைகள் தெளிவுபடுத்தாமல் தான் இன்றுவரை அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்பொழுது இன்னுமொரு படி மேலே சென்று தாங்கள் மாத்திரம் தான் சரியானவர்கள், கொள்கை வாதிகள், ஏனைய எல்லோருமே துரோகிககள் என்ற தொனியில் இருந்து இவர்கள் பேசுவது அநாகரிகமான அசிங்கமான ஒரு நிலைப்பாடு. அவர்கள் முன்வைக்கக் கூடிய கேள்விகள் பலவற்றுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கின்றேன். தேவை ஏற்பட்டால் இன்னுமொரு தடவை கூட நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.

ஒரு விடயத்தை நாங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கட்சியினுடைய செயலாளர் கஜேந்திரன் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து யுத்த காலத்தில் வெளிநாட்டிற்குச் சென்று யார் மூலம் திரும்ப இந்த நாட்டிற்குள் வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் நாங்கள் இவை எதனையும் பற்றி பேசவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வது மாத்திரம்தான் எமது நோக்கம். ஆகவே நாங்கள் வேறு வேறு கொள்கையில் பிறழ்வுபட்டுப் போகின்றோம் என்று இவர்கள் பேசுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் 1979 ஆம் ஆண்டு தொடங்கியது. எங்களுக்கு நாற்பது வருட கால அரசியல் அனுபவம் இருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெறுமனே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டும் நம்பி வந்த கட்சி அல்ல. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசிலுக்கு வந்த கட்சி. தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அவற்றைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய கட்சி.

அந்த கட்சியிலுள்ள ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும், மற்றையவர் வெளிநாட்டில் கற்றவராகவும் இருந்தார்களே தவிர, இவர்கள் விடுதலைப் போராட்டத்தில் என்ன பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்கள்?

பல்கலைக்கழகத்தில் மாணவர் அணித் தலைவராக இருந்ததென்பதைத் தவிர ஆயுதப் போராட்டத்தில் கஜேந்திரனோ அவரது குடும்பத்தினரோ என்ன பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்கள்?

ஆனால் நாங்கள் மிக ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஆயுதப் போராட்டத்தில் அங்கம் வகித்து ஒர் அரசியல் போராட்டத்தில் அங்கம் வகித்து பல்வேறுபட்ட தரப்புக்களுடன் பேசி போராட்டத்தை முன்கொண்டு சென்றதில் மிகப் பெரிய பங்கு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்களை நோக்கி விரல் நீட்டுவதற்கான எந்தவித யோக்கியமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிற்கோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று சொல்பவர்களுக்கோ கிடையாது.

நாங்கள் அமைதியாக கூட்டாகச் சேர்ந்து தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு ஒரு விரிவான கூட்டாகச் செய்ய முடியுமோ அவ்வாறு சேர்ந்து செய்ய வேண்டுமென்று தான் நாங்கள் யோசிக்கின்றோம். அது அவர்களுக்கு சரியில்லாது விட்டால் அது குறித்து அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, நாங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கக் கூடாதென்று கூறுவதற்கோ அல்லது முதலமைச்சருடைய ஒரு அணியில் நாங்கள் இருக்கக் கூடாதெனக் கூறுவதற்கோ இவர்களுக்கு எந்தவிதமான யோக்கியமும் கிடையாது. இவர்கள் தங்களை மிகப் பிரமாண்டமாக சக்தியாக யோசிப்பார்களாக இருந்தால் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை மக்கள் அவர்களுக்கு அதற்கான பாடத்தைக் கற்பிப்பார்கள். அதற்குப் பிறகு தாங்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்" என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad