2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை தன்னாதிக்கம் போன்றவற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தாண்டி திட்டமிட்டபடி மாவீரர் நாள் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர் அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனாலும் நீதிமன்றத் தடையையும் தாண்டி மக்கள் புலிகளின் போர்க்காலப் பாடல்களை இசைத்தனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் உத்தரவுகளையும் கொழும்பில் உள்ள சிங்கள அரசியல் தலைவர்களே மீறிச் செயற்படுகின்றனர்.
தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தாமல் இந்து பசுபிக் சமுத்திரத்தை மையமாகக் கொண்ட பூகோள அரசியலில் நிம்மதியாக ஈடுபட முடியாதென்பதை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டியதே தமிழ்த் தரப்பின் பிரதான கடமை.
இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பில் இருந்து விடுதலையாகி சுயாட்சி அதிகாரத்தோடு செயற்பட வேண்டுமென 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டமை குறித்து ஆச்சரியப்பட வேண்டிய அவசியமேயில்லை.
வடக்குக் கிழக்கில் சுயாட்சிக் கட்டமைப்பு வந்துவிடக் கூடாது என்பதிலேதான் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும் இலங்கை அரசும் இலங்கைப் படைத்தரப்பும் கவனமாகச் செயற்படுகின்றது.
அதன் ஒரு அங்கமாகவே மாவீரர் நாளை கொண்டாடக் கூடாது என வலியுறுத்தி திருகோணமலை - கந்தாளாய் பிரதேசத்தில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களின் இயல்பான எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் சிங்கள இளைஞர்களில் சிலரை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்யத் துாண்டியிருக்கலாம் என அங்குள்ள செய்தியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
அதேவேளை, சிங்கள இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் கண்டித்துள்ளார்.
இலங்கையில் இனஅழிப்பு போருக்குப் பின்னர், தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இலங்கை அரச படையினரால் அழித்தொழிக்கப்பட்டிருந்தன.
எனினும் தாயக மக்களால் துயிலுமில்லங்களில் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட கல்லறைகளில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றினர்.
கொழும்பு அரச இயந்திரத்தை மையமாகக் கொண்ட இலங்கைத் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மைத்திரி - மகிந்த ஜனநாயகத்துக்கு மாறாக செயற்படுகின்றனர் என்றோ இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படுகின்றது என்றோ சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக் கூற வேண்ய தேவை தமிழத் தரப்புக்கு இல்லை.
தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிமுதல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவுத் தூபி முன்றலில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்து இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இராசாபாதை வீதியில் தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி முற்பகல் 11.30க்கு இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தொடர்ந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியில் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது.
இவற்றைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் இடம்பெற்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது. தேராவில் துயிலுமில்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் ஆகியனவற்றில் வீரமறவர்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுதவிர தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்திலும் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வாறு தாயகம் உட்பட அனைத்து இடங்களிலும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
அதேவேளை, இந்த நிகழ்வுகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றவில்லை. அவர்கள் இருவரும் கொழும்பு அரசியல் நெருக்கடி விவகாரத்தில் தங்களை முழுமையாக ஈடுத்தியதால் இந்த நிகழ்வுகளில் பங்குபற்ற முடியவில்லை என தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மக்கள் இயல்பாகவே ஒன்று திரண்டு தமிழ்த் தேசியத்தின் சுயமரியாதையை வெளிப்படுத்திய இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கைத் தீவில் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றன என்பதை சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தாமல் இந்து பசுபிக் சமுத்திரத்தை மையமாகக் கொண்ட பூகோள அரசியலில் நிம்மதியாக ஈடுபட முடியாதென்பதை இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டியதே தமிழ்த் தரப்பின் பிரதான கடமை.
மாறாக கொழும்பு அரச இயந்திரத்தை மையமாகக் கொண்ட இலங்கைத் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மைத்திரி - மகிந்த ஜனநாயகத்துக்கு மாறாக செயற்படுகின்றனர் என்றோ இலங்கையின் அரசியல் யாப்பு மீறப்படுகின்றது என்றோ சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக் கூற வேண்டிய தேவை தமிழ்த் தரப்புக்கு இல்லை.
அத்துடன் அந்த அரசியல் நெருக்கடியில் ஒரு தரப்பை மாத்திரம் நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் ஜனநாயக மீறல். அரசியல் யாப்பு மீறல் என்பதை இருதரப்புமே ஈழத் தமிழர் விடயத்தில் 1948 இல் இருந்து மீறியுள்ளன
No comments:
Post a Comment