கலங்க வைத்த காட்சி: இராணுவத்திடம் உறவுகளை ஒப்படைத்த இடத்தில் படங்களை காட்சிப்படுத்திய உறவுகள்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 7, 2019

கலங்க வைத்த காட்சி: இராணுவத்திடம் உறவுகளை ஒப்படைத்த இடத்தில் படங்களை காட்சிப்படுத்திய உறவுகள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முல்லைத்தீவில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கல் மனதையும் கசிய வைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

யுத்தத்தில் இறுதிநாளில், இராணுவத்திடம் தமது பிள்ளகளை ஒப்படைத்த வட்டுவாகல் கரையோரத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களை உறவினர்கள் நாட்டி வைத்தது, எல்லோரையும் கலங்க வைத்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நிலைமை வெளிப்படுத்துமாறு கோரி, அவர்களது உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 761 வது நாளாக இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கியதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. முல்லைத்தீவு நகரத்தில் இருந்து வட்டுவாகல் பாலத்தின்- முள்ளிவாய்க்கால் அந்தத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவில் திரண்டு இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

வட்டுவாகல் கரையோரம் வந்த உறவுகள், இராணுவத்திடம் தமது பிள்ளைகளை கையளித்த இடத்தில், கம்பங்களை நாட்டி, இராணுவத்திடம் கையளித்தவர்களின் படங்களை காட்சிப்படுத்தினர்.

இறுதியுத்த சமயத்தில் முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த 59வது டிவிசன் படையினர், வட்டுவாகல் பாலத்தின் முடிவில் அரண் அமைத்திருந்தனர். அதற்கடுத்த பிரதேசமான வெள்ளா முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் இறுதிநாள் மோதல்கள் இடம்பெற்றன. மே 17, 18ம் திகதிகளில் வெள்ளாமுள்ளிவாய்க்கால் படையினரிம் வீழ்ச்சியடைய, வட்டுவாகல் பாலத்தை நோக்கி மக்கள் நகர்ந்தனர்.

வட்டுவாகல் பாலத்திற்குள்ளால் முல்லைத்தீவை நோக்கி மக்கள் அனுப்பப்படுவதற்கு முன்பாக, பாலத்தின் நுழைவாயிலிற்கு அண்மையான வெட்டை பகுதியில் அனைவரும் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இங்கேயே, பாதிரியார் தலைமையில் விடுதலைப்புலிகளின் அணியொன்று இராணுவத்திடம் சரணடைந்தது.

ஒரு தொகுதியினர், இராணுவத்திடம் தமது உறவுகளை கையளித்தனர். சரணடையாதவர்கள் கைது செய்யப்பட்bருந்தனர். அந்த வெட்டை பிரதேசத்திலேயே இன்று கம்பங்கள் நடப்பட்டு, இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகளின் படங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்த காட்சி அங்கிருந்தவர்களை கலங்க வைத்திருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad