என்னை வைத்து என் சமூகத்தை பழிவாங்காதீர் - ரிசாத் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 4, 2019

என்னை வைத்து என் சமூகத்தை பழிவாங்காதீர் - ரிசாத்

"என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரணதண்டனையை எனக்குத் தாருங்கள். ஆனால், என்னை வைத்து என் சமூகத்தைப் பழிவாங்காதீர்கள்."

- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"உலக பயங்கரவாதம் இந்த நாட்டுக்குள்ளே புகுந்து இந்த நாட்டில் உள்ள ஒரு சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள்ளே சம்பந்தப்படுத்தி கடந்த ஈஸ்டர் தினத்தில் படுமோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த நாட்டில் வாழும் 22 இலட்சம் முஸ்லிம் மக்களையும் அந்தத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்று அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள்.

சாய்ந்தமருதிலே பல இலட்சம் ரூபா பணத்தோடு நின்று எங்களைக் காப்பாற்றுங்கள்; காட்டிக்கொடுத்து விடாதீர்கள் என உயிர்பிச்சைக் கேட்டவர்களைக் காப்பாற்றாமல் பொலிஸாருக்குத் தகவலைக் கொடுத்து ஒட்டுமொத்த ஆதரவையும் சாய்ந்தமருது முஸ்லிம் சமூகம் வழங்கினார்கள். 

எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஆட்சிப்பீடத்தில் வந்து அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக 22 இலட்சம் முஸ்லிம் மக்களின் உள்ளத்தையும் உடைக்கின்றார்கள். எங்களது நெஞ்சைப் பிளக்கின்றார்கள். எங்களின் சொத்தை அழிக்க வேண்டும் எனத் திடசங்கற்பம் பூண்டு செயற்படுகின்றார்கள்.

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை, பயங்கரவாதத்துக்கு உதவி செய்ய மாட்டோம். எங்களுக்கே தெரியாமல் உலக பயங்கரவாதம் இங்கு உள்நுழைந்துவிட்டது.

எனவே, இதைத் துடைத்தெறிவோம். நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகின்றோம், உங்களோடு சேர்ந்து செயற்படுகின்றோம். முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் என்று அழைக்கின்றபோது ஏன் அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் பழியைப் போடுகின்றீர்கள்.

நாங்கள் இந்த நாட்டிலே சந்தோசமாக வாழ ஆசைப்படுகின்றோம். எமக்குள் பிரிவு வேண்டாம்; பிளவு வேண்டாம்.

கப்பல் சக்கரத்தை உடைய ஆடையை அணிந்திருந்தமைக்காக  முஸ்லிம் தாயொருவர் 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், பல அழிவுகளுக்குக் காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நாங்கள் வெட்கப்படுகின்றோம்; வேதனைப்படுகின்றோம். இவ்வாறான இந்த நிலை மாறவேண்டும் என நாங்கள் கவலையுடன் சொல்லுகின்றோம்.

அதுமட்டுமல்ல ஈஸ்டர் ஞாயிறு தினப் பயங்கரவாதத்தைப் போல்தான் இலங்கையில் இருக்கின்ற இந்த நாட்டினுடைய பக்தர்கள் என்று பேசிக்கொண்டிருக்கக் கூடிய இன்னுமொரு பயங்கரவாதக் கூட்டம் இருக்கின்றது. அந்தக் கூட்டம்தான் மினுவாங்கொடை அழிவுக்குக் காரணம்.

நான் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் எங்களது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளோம். யாருக்கும் பயந்து நாங்கள் இராஜிநாமா செய்யவில்லை. இந்த நாட்டுக்காகவே இராஜிநாமா செய்தோம்.

இந்த நாட்டிலே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு பொறுப்பு உண்டு. அவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் ஒன்று சேர்ந்து எவ்வாறு இந்த நாட்டைக்  காப்பாற்றலாம், எவ்வாறு இந்தப் பயங்கரவாதத்தைத் துடைத்தெறியலாம் என்று இந்த மூன்று தலைவர்களும் இருந்து பேச வேண்டும்.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுடன் அணு அளவும் தொடர்பில்லாதவன் நான். என் மீது சந்தேகம் இருந்தால் ஊர்வலம் போவதை விடுத்து ஊடகங்களில் பேசுவதை விடுத்து சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்யுங்கள். விசாரணை நடத்துங்கள்.

என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரணதண்டனையை எனக்குத் தாருங்கள். ஆனால், என்னை வைத்து என் சமூகத்தைப் பழிவாங்காதீர்கள்" - என்றார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad