திண்டாடிய சிங்கள மக்களிற்கு ‘தமிழர்களின் தலைவரே’ உதவினார்: விக்னேஸ்வரன்! Vicky - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, December 27, 2020

திண்டாடிய சிங்கள மக்களிற்கு ‘தமிழர்களின் தலைவரே’ உதவினார்: விக்னேஸ்வரன்! Vicky


தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மக்களை அடக்கி ஆளவோ அல்லது அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ விரும்பவில்லை. மாறாக தாம் வாழுகின்ற பகுதிகளில் தம் மக்கள் சுபீட்சத்துடன் வாழ தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு ஆட்சி முறைமையையே விரும்புகின்றார்கள். இதை சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கின்றது. ஆனால் பேரினவாதிகளோ இந்த நாடு முற்றுமுழுதாக சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சிங்கள பௌத்த தேசம் எனவும் சிறுபான்மை மக்கள் தாம் போடுகின்ற பொரியை உண்டு விட்டு கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அதன் விளைவே சில காலங்களுக்கு முன்பு அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கான மூலாதாரங்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி போராடிக் கொண்டிருக்கையில் உயிரிழந்தவர்களின் பதிவாக வெளிவந்துள்ள “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.

இதில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு நாள் பேரழிவையே தாங்கமாட்டாத இந்தப் பேரினவாதிகளுக்கு அடை மழை, வெள்ளங்கள் ஏற்பட்ட காலத்தில் முதலாவது உதவி, அக்காலத்தில் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவர்களிடமிருந்தே, எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை. மாத்தறையில் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பௌத்த பிக்குமார்கள் வெளிப்படையாக இயக்கங்களிற்கு நன்றி தெரிவித்தார்கள் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய இந்த நூல் வெளியீட்டு விழா சற்று வித்தியாசமானது. எத்தனையோ புத்தக வெளியீடுகள், நூல் ஆய்வரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு அவ்வந்த நூல்களின் இலக்கியச்சுவைகள் பற்றியும், தமிழ் மொழி நடை பற்றியும், வட்டார வழக்குகள் பற்றியும், உலக நடப்புக்கள் பற்றியும், மதம், இலக்கியம், வரலாறு, சமூகவியல், சட்டம், அரசியல் பற்றி எல்லாம் பல விதமான உரைகளை உரையாற்றியிருக்கின்றோம்.

ஆனால் இன்றைய இந்த ஆவணக் கையேட்டை சற்று கனத்த மனத்துடன் துக்கம் தொண்டையை அடைக்க வெளியீடு செய்ய வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம். இந்த நூலில் ஆராய்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எந்த மொழி நடையோ இலக்கியச் சுவையோ ஆழமான கருத்துக்களோ இல்லை. மாறாக துன்ப வலிகளைச் சுமந்து கொண்டு நடைப்பிணங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து இறுதியில் மரணத்தைத் தழுவிக் கொண்ட எம்மிடையேயான ஒரு மக்கள் தொகுதியின் நினைவுகளும் புகைப்படங்களுமே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அறவழிக் கண்ணீர் போராட்டங்களின் போது கண்ணை மூடிய கணிசமான எம் மக்களின் நினைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணக் கையேட்டு வெளியீட்டு வைபவம் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியாகவே நடைபெறுகின்றது.

இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளைத் தொடர்ந்து பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி இராணுவப் படைகளாலும் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடி அலைந்த அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் எனப் பலர் தமது இறுதி மூச்சுவரை மகனை அல்லது மகளை அல்லது சகோதர சகோதரிகளை அல்லது உற்றவரை, உறவினரைத் தேடி அலைந்து, அவர்களுக்காக நீதிகோரிய போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு இறுதியில் நோய் வாய்ப்பட்டு இறப்பைத் தழுவிக் கொண்ட 74 பேரின் பதிவுகள் இந்த நூலில் காணப்படுகின்றன. ஏமாறிய நிலையில் இவ்வுலகைவிட்டு ஏகியவர்களின் விபரக்கோவையே இன்று வெளியிடப்படும் நூல்.

பண்டைய தமிழ் மக்களின் வரலாறுகள், அவர்களின் இருப்புக்கள், பாரம்பரியங்கள் என்பன நூல் வடிவிலோ, ஓலைச் சுவடிகளிலோ அல்லது கற்களில் வடித்தோ முறையாக பேணப்படாமையால் இன்று எமது சரித்திர வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றன. தினம் தினம் மாற்றி எழுதப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை மக்களின் சாசனங்கள் வாயிலாக வரலாறுகள் தமிழர்க்கு எதிராகத் திரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகிய 3000 வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டு கிறீஸ்துவுக்குப் பின் 6ம் 7ம் நூற்றாண்டளவில் வழக்கிற்கு வந்த சிங்கள மொழி பேசுவோரே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ் மக்கள் அதன் பின்னைய காலங்களில் குடியேறிய மக்கள் எனவும் சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இனப்படுகொலையின் ஒரு அம்சமாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது. உலக சனத்தொகையில் தமிழர்களை விட குறைந்த அளவில் உள்ள சிங்கள மக்கள் ஓரளவிற்கு செறிந்து வாழுகின்ற இந்த நாட்டில், தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிட்டால் சிங்கள மக்களுக்கு இருக்க நாடு இல்லாமல் போய்விடும், அவர்களுக்கு என்று ஒரு தேசம் இல்லாமல் போய்விடும் எனப் பயப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்வாதிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும்.

இலங்கைத் தீவை விட சிறிய நாடாகிய சிங்கப்பூரில் பல மொழிகளைப் பேசுகின்ற பல் இன மக்கள் வாழுகின்ற போதும் அந்த நாட்டில் மொழி வேறுபாடு இல்லை. மத வேறுபாடு இல்லை. ஆனால் அங்கு சுபீட்சம் நிலவுகின்றது. நாடும் வளம் பெற்று வளர்ந்து வருகின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆனால் எமது நாட்டில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே தான் பிரச்சனை வலுவடைந்துள்ளது. நிலவுகின்ற இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பது ஒரு காரியமே அல்ல. எனினும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்துவிடக்கூடாது என்ற மனப்பாங்குடன் செயற்படும் சிங்களத் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களே தமிழ் மக்கள் மீது பல விதமான ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடக் காரணமாக இருந்து வந்துள்ளன.

யுத்தம் நிறைவு பெற்ற 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்திடம் தமது கணவரை முறையாக கையளித்த பெண்கள், பிள்ளைகளை கையளித்த தாய்மார்கள், சகோதரங்களைக் கையளித்த சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் போன்றோரை கையளித்தவர்களை இழிவுபடுத்தும் விதத்தில், அவ்வாறான கையளிப்புக்கள் எதுவும் நடக்கவில்லை, அவ்வாறான எந்தவொரு அரசியல் கைதிகளும் தம்மிடம் இல்லை எனக் கூறி இப்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அது சம்பந்தமான விசாரணையை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுவரினும் அக் கோரிக்கைகளுக்கு இணங்காது தான்தோன்றித்தனமாக இலங்கை அரசாங்கம் நடந்து வருகின்றது. அதுபோலவே இன்றைய கை நூலில் ஆவணப்படுத்தப்படும் வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து எம் கைகளில் கிட்டாமல்ப் போனால் இன்னும் சற்றுக் காலம் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் பொய்யாகப் புனையப்பட்டவை என ஜெனீவாவிலும் உலக அரங்கிலும் கூறத் தொடங்கிவிடுவார்கள்.

ஆகவேதான் மரணித்தோரின் பதிவுகள் இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருங்கால நிரூபணங்களாக பதியப்பட்டுள்ளன.

எனவே எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கோரக் கொடுமைகளின் பின்பும் தமிழ் மக்கள் அமைதியாக இங்கு இருந்து வருவது பிறநாட்டவர்க்கு வியப்பை அளித்தாலும் ஏதோ ஒரு விடிவு காலம் அண்மையில் வரப் போகின்றது என்ற எண்ணமே எம் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்து எம்மை ஓட்டி வருகின்றது. காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுவதே மனித வாழ்க்கை. தொடர்ந்து கஷ்டத்தையே எம் மக்கள் அனுபவித்து வரவேண்டிய அவசியமில்லை. விடிவு விரைவில் வரும் என நம்புவோம்.

தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மக்களை அடக்கி ஆளவோ அல்லது அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ விரும்பவில்லை. மாறாக தாம் வாழுகின்ற பகுதிகளில் தம் மக்கள் சுபீட்சத்துடன் வாழ தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு ஆட்சி முறைமையையே விரும்புகின்றார்கள். இதை சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கின்றது. ஆனால் பேரினவாதிகளோ இந்த நாடு முற்றுமுழுதாக சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சிங்கள பௌத்த தேசம் எனவும் சிறுபான்மை மக்கள் தாம் போடுகின்ற பொரியை உண்டு விட்டு கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அதன் விளைவே சில காலங்களுக்கு முன்பு அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கான மூலாதாரங்கள்.

எம் மக்கள் ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு மேலாக துன்பச் சுமைகளைச் சுமந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களின் எந்த அழுத்தங்களையோ அல்லது அவர் தரும் துன்பங்களையோ கண்டு எம்மவர் துவண்டுவிடமாட்டார்கள். ஒரு நாள் பேரழிவையே தாங்கமாட்டாத இந்தப் பேரினவாதிகளுக்கு அடை மழை, வெள்ளங்கள் ஏற்பட்ட காலத்தில் முதலாவது உதவி, அக்காலத்தில் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவர்களிடமிருந்தே, எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை.

மாத்தறையில் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பௌத்த பிக்குமார்கள் வெளிப்படையாக இயக்கங்களிற்கு நன்றி தெரிவித்தார்கள். இன்றும் நாம் அதையே நினைவுகூர விரும்புகின்றோம். சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம். காரணம் ஒற்றையாட்சிக்குக் கீழ் பெரும்பான்மையினரின் ஆதிக்க வெறியாட்டம் இதுவரையில் நாம் அறிந்த உண்மையே. சமஷ்டி என்கின்ற ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே நாக பாம்பை மிதித்துவிட்டவர்கள் போல சிங்கள அரசியல்வாதிகள் துள்ளிக் குதிக்கின்றார்கள். நாட்டைக் கூறு போடப் போகின்றோம் என்று கூச்சலிடுகின்றார்கள்; ஓலமிடுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாத சிங்கள மக்களும் அதனை நம்பி தமிழ் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட எத்தனிக்கின்றார்கள்.

சிங்களக் குடிமக்களை பழகுவதற்கு இனியவர்கள். பண்பானவர்கள். ஆனால் இனம் என்று வருகின்ற போது சுயநலம் மிகுந்த அரசியல் தலைவர்களின் வன்முறை அரசியல் கலாச்சாரத்தின் தூண்டலில் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். உடமைகள் அழிக்கப்படுகின்றன. உயிர்கள் அழிக்கப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறாக இன்னோரன்ன துன்பங்களைத் தமிழ் மக்களுக்குப் புரிவதற்கு அவர்கள் தூண்டிவிடப்படுகின்றார்கள்.

நான் வன்முறைக் கலாசாரத்தை விரும்புவதில்லை. மாறாக நீதியின் வழியில் எமக்கு கிடைக்க வேண்டிய சகல உரித்துக்களும் நேர்மையான அரசியல் முன்னெடுப்புக்கள் வழியாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். ஆனால் தொடர்ச்சியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நில அபகரிப்புக்களும் முப்படைகளின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் பல புரியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்களப் பொது மக்கள் இடையே உண்மையை உணர்த்த வேண்டும். உலக நாடுகளுக்கும் உண்மையை உரக்கக் கூறவேண்டும். சட்டத்தின்பாற்பட்ட சகல நடவடிக்கைகளையும் தவறாது எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

இறையருளால் குற்றம் இழைத்தவர்கள் தமது குற்றங்களைள உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எது எப்படியோ எமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான எமது நடவடிக்கைகள் தொடர வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களையும் அவர்களின் இருப்புக்களையும் உறுதி செய்யும் வரையிலும் எதுவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்படும் வரையிலும் எமது பணி ஓயாது. மக்கள் நலனுக்காக நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற முன்வருவோமாக! இந்த நூல் வெளியீடு எம் மக்கட் தலைவர்களை ஒன்று சேர்ப்பதாக அமையட்டுமென தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad