ஐசிசி தேவை என்பதை ஐநா ஆணையாளரே ஏற்றுக்கொண்டுள்ளார் - கஜேந்திரகுமார் ICC - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, January 26, 2021

ஐசிசி தேவை என்பதை ஐநா ஆணையாளரே ஏற்றுக்கொண்டுள்ளார் - கஜேந்திரகுமார் ICC

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை வெளியான அறிக்கைகளில் மிக காட்டமான அறிக்கை இம்முறையே தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த 10 வருடங்களாக வலியுறுத்தி வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நாம் அதனை வலியுறுத்தியபோது, மோடர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் என பலர் கேலி செய்தனர். இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே அதை ஏற்றுக்கொண்டுள்ளார். இதைவிட எமக்கு பெரிய அங்கீகாரம் கிடையாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஐநா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக இதுவரை வெளியிட்ட அறிக்கைகளில் ஆக்கபூர்வமானதாக இந்த அறிக்கையை கருதக்கூடியதாக உள்ளது. இதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கின்றன.


30/1 தீர்மானத்தின் பின் நோக்கமும் அதன் முக்கியத்துவமும் என்ற தலைப்பில், ஏழாவது சரத்தில் முக்கியமான அம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசு திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணியில் தான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது என்பதை முதன் முறையாக ஐநா ஏற்றுக்கொண்டுள்ளது. என்னுடைய ஞாபகத்தின் படி இதற்கு முதல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படி குறிப்பிடப்பட்டிருக்க வில்லை.


இரண்டு தரப்பும் மோதிக் கொண்டிருக்கிறார்கள், இரண்டு தரப்பினாலும் பலர் பாதிக்கப்பட்டனர் என்ற ரீதியில்தான் இதுவரை குறிப்பிடப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் முதன்முறையாக, எந்த பின்னணியில் ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்பதை ஐ.நா குறிப்பிட்டுள்ளது.


காலப்போக்கில் இனப்படுகொலை போன்ற விவகாரங்களில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்த மோதலின் பின்னணி சரியாக அறிக்கையிடப்படுவது முக்கியம். குறிவைக்கப்படும் தரப்பு தற்பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கைகளை சட்டம் அங்கீகரிப்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் கடந்த 12 வருடங்களாக ஜெனீவாவிற்கு சென்று பல்வேறு விமர்சனங்களை வைத்து செய்த முயற்சிகளுக்கு பலனாக இந்த அறிக்கை வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஆறுதல் கொடுக்கின்ற ஒரு விடயமாகவும் உள்ளது.


எல்லாவற்றிற்கும் மேலாக நடைபெற்ற குற்றங்களை விசாரிப்பதற்கு ஸ்ரீலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஆணித்தரமாக முன்வந்திருக்கிறார்கள்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதை நாங்கள் அரசியல் லாபம் பெறுவதற்காக பேசுகின்ற விடயம் என எங்கள் மத்தியிலேயே பலர் எங்களை விமர்சித்தார்கள். மோடர்கள், சாத்தியமில்லாததை பேசுகிறார்கள், இவர்களிற்கு ஒன்றுமே தெரியாது, இவர்களுக்கு எதுவுமே தெரியாது என எங்களை கேவலப்படுத்தி பலவிதமான குற்றச்சாட்டுகளை சொன்னார்கள்.


இந்த உலகத்திலேயே சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரே இந்த கருத்தை முன் வைத்திருக்கிறார் என்றால் அதைவிட உயர்ந்த அங்கீகாரம் எமக்குக் கிடைக்க முடியாது.


தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்களிடம் நான் தாழ்மையுடன் விடுக்கும் வேண்டுகோள், தயவு செய்து நீங்கள் உங்களது வாயால் இந்தக் கருத்துக்களை கொச்சைப்படுத்தும் விதமாகவோ, உதாசீனம் செய்யும் விதமாகவோ தயவுசெய்து கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மாதிரியான கருத்துக்களை சொல்லி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை விரும்பாத தரப்புக்களின் கருத்துக்களை பலப்படுத்த வேண்டாம்.


கடந்த காலங்களில் ஒரு அறிக்கை ஒன்று வெளியானதை வைத்துக்கொண்டு அதுதான் விசாரணை அறிக்கை- சர்வதேச மட்டத்தில் விசாரணை முடிந்துவிட்டது- இனி செய்ய வேண்டியது உள்ளகப் பொறிமுறை, அதன் ஊடாகவே நீதியை பெறலாம், வேறு வழியே இல்லை என சொன்னவர்கள் கூட இன்று சர்வதேச நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து இனியாவது அதை நிறுத்துங்கள்.


பத்து வருடங்களாக இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை, சர்வதேச விசாரணை சாத்தியமில்லை என சொல்லி வந்தவர்களின் அரசியல் தோல்வி அடைந்துவிட்டது. தொடர்ந்தும் அந்த பொய்யை நியாயப்படுத்தும் கோணத்தில்- செய்யவேண்டிய காரியங்களை செய்யாமல் – இதனை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்தங்கள்


நாங்களாக அந்த வாய்ப்புகளை கொச்சைப்படுத்துவதாக இருந்தால் எவரும் அதனை செய்ய முன்வர மாட்டார்கள் என்றார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad