யாழ் மாநகரசபையில் முதல்வர் தெரிவில் வி.மணிவண்ணன்- டக்ளஸ் தேவானந்தா கூட்டணி தனியே செயற்படவில்லை. அவர்களின் பின்னால், தமிழ் தரப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் கோட்டாபய ராஜபக்சவும் இருந்தார். அவரை சரியாக இனம் கண்டதாலேயே கட்சியை விட்டு நீக்கினோம். அவரை நீக்கிய எமது முடிவு சரியென்பதை காலம் உணர்த்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ்.
அத்துடன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் தெரிவு முடிந்து வெளியேறிய எமது பெண் உறுப்பினர்களை பார்த்து, இன்னும் ஆடை அணிந்து கொண்டிருக்கிறீர்களா என மணிவண்ணனின் அருகிலிருந்தவர் கேட்டார். அவர்கள் கேட்ட ஏனையவற்றை பகிரங்கமாக கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக பிரார்த்திப்பதாக மணிவண்ணன் புத்தாண்டு செய்தியில் கூறியிருக்கிறார். முதல்வர் பதவிக்காக ஈ.பி.டி.பியுடன் இரகசிய டீல் போட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிப்பதாக உங்களிற்கு வாக்களித்தாரா என்றும் கேள்வியெழுப்பினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். ஆனால் இன்று தெய்வமும் அன்றைய கொல்லத் தொடங்கி இருக்கின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரி என்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டி இருக்கிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோத சக்திகளான ஈபிடிபியுடன் சேர்ந்து யாழ் மாநகரசபையின் மேயர் பதவியை கைப்பற்ற இருக்கிறார். அதற்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆறு உறுப்பினர்களும், கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட 4 உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர்.
நல்லூர் பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் எதிராக கட்சியினால் விரைவில் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் உரிய முறைப்படி எடுக்கப்படும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது ஒரு கொள்கை ரீதியான ஒரு அரசியல் இயக்கம். தேசத்திற்கான இருப்பையும் தமிழ் மக்களின் விடுதலையையும் முன்னெடுக்க கூடிய இறுதி சக்தியாகவும் இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான் காணப்படுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு சற்றும் குந்தகம் இல்லாத வகையில் எங்களுடைய எதிர்கால செயற்பாடுகள் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
யாழ்ப்பாணம் மாநகரசபையிலும், நல்லூர் பிரதேசசபையிலும் ஏற்கனவே உறுப்பினர்களை அழைத்து கட்சி ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இரண்டு சபைகளிலும் வேட்பாளர்களை நிறுத்தாது என தெரிவிக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையில் ஏற்கனவே மேயராக இருந்த ஆனல்ட் தவிர்ந்த ஒருவரை நியமித்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும், ஆனல்ட்டுக்கு ஆதரிக்க மாட்டோம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதேபோன்று நல்லூர் பிரதேச சபையில் ஏற்கனவே இருந்த தவிசாளர் தவிர்ந்த பிறிதொருவர் நியமிக்கப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் என்று அறிவித்தோம்.
அந்த முடிவுக்கு மாறாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பவற்றுடன் சேர்ந்து தோழர் மணிவண்ணன் அவர்கள் மேயர் ஆவதற்கு எங்களுடைய கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சில உறுப்பினர்களும், உறுப்பினர்களாக இருக்கின்ற ஆறு பேரும் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட உறுப்பினர்களாக இருக்கின்றவர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம். அதேபோல நல்லூர் பிரதேச சபையிலும் 3 உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஊழல் மாம்பலம் மற்றும் ஆனந்தசங்கரியினுடைய தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றோடு சேர்ந்து ஒட்டுக் குழுக்களின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுக்கும் எதிராக நாங்கள் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.
இவை வெறுமனே தோழர் மணிவண்ணன் உடையதோ, ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதோ கூட்டுச் செயற்பாடு அல்ல.
ஆழமாகப் பார்த்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலவீனப்படுத்துவதற்காக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தினுடைய மறைமுக நிகழ்ச்சிநிரலில் தான் இவ்வளவு விடயங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஏனென்றால் யாழ்ப்பாணம் மாநகர சபையில் தோழர் மணிவண்ணனுக்கு வெறுமனே ஈபிடிபியினர் மட்டும் ஆதரவு கொடுக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு அளித்திருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒருவர் ஆதரிக்கிறார் என்றால், அவர் தோழர் மணிவண்ணனின் கருத்தை கேட்டோ, தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை கேட்டோ இத்தகைய முடிவுக்கு வந்திருக்க முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடியான தலைவர் மைத்திரிபால சிறிசேன. மறைமுகமான தலைவர் கோத்தபாய ராஜபக்ச. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தனது தலைமையில் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே முடிவை எடுத்திருப்பார்.
இது ஒரு கூட்டு சரியாகத்தான் காணப்படுகிறது. ஏனென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடாது, வெற்றி பெற விடக்கூடாது என்று ஒரு மறைமுகமான நிகழ்ச்சிநிரல் தேர்தல் காலத்தில் பின்னப்பட்டிருந்தது. அதற்கு தோழர் மணிவண்ணனும் பலமாக பங்களித்திருந்தார்.
ஆனால் அந்த சவால்களை எல்லாம் தாண்டித்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி வெற்றி பாராளுமன்றம் சென்று,த தமிழ் தேசத்தின் அபிலாசைகளை, இனப்படுகொலையை ஆணித்தரமாக வலியுறுத்தி வருகிறார். அவருடைய பாராளுமன்ற செயற்பாடுகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு வயிற்றில் புளியை கிளியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் இனப்படுகொலை சார்ந்த ஆணித்தரமான விடயங்களை ஆதாரப்பூர்வமாக முன்வைக்கின்ற கஜேந்திரகுமாரின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதனால் எப்படியாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களோடு இணைந்த தோழர் மணிவண்ணன் ஆகியோர் சேர்ந்து இந்தப் பதவி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
தோழர் மணிவண்ணன் முதல்வர் ஆகியதன்பின்னர் அவருடைய சில செயற்பாடுகள் அநாகரிகமாக அமைந்தது. யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வர் தெரிவின் பின்னர் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேயர் ஆகியதும் தன்னோடு ஒரு குழுவை அழைத்துக் கொண்டு- அவர்களை குழு என்பதா, காடையர் குழு என்பதா என தெரியவில்லை- நல்லூர் பிரதேச சபைக்கு சென்று, பிரதேச சபை கூட்டம் முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த எங்களுடைய கட்சியினுடைய இரண்டு பெண் உறுப்பினர்களான வாசுகி சுதாகரன், பிருந்தா ஆகியோரை பார்த்து, இன்னும் உடுப்பு போட்டுக் கொண்டா நிற்கிறீர்கள் என தோழர் மணிவண்ணனிற்கு பக்கத்தில் நின்ற ஒருவர் மதுபோதையில் கேட்டிருக்கிறார்.
இன்னொருவர் கேட்ட வார்த்தையை நான் இந்த ஊடக சந்திப்பில் ஒரு பொறுப்புள்ள கட்சியின் முக்கியஸ்தர் ஆக கூறமுடியாது. இப்படியான இந்த குழுவை பெண்ணியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் ஆதரிக்கப் போகிறார்களா?
மேர்வின் சில்வா, துமிந்த சில்வா அரசியலாக, காடைத்தனமான ஒரு அரசியலை எங்களுடைய தமிழ் தேசத்திலே புரிய பார்க்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
சிலரது கனவு மேயர் கனவு. பலரது கனவு தேசக் கனவு. நாங்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை இழந்து இருக்கிறோம். 147,000க்கும் அதிகமான உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் கைதிகள் 20 ஆண்டுகளாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் கொட்டும் மழையிலும் கொடும் பனியிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் 1400 நாட்களை கடந்து வீதிகளில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் காணாமல் ஆக்கியமைக்கு எந்தக் கட்சி பொறுப்புக் கூற வேண்டுமோ- எங்களுடைய இளைஞர் யுவதிகளை யாழ்ப்பாண மண்ணிலே யார் கடத்தினார்களோ, அவர்களோடு சேர்ந்து மேயர் பதவியை கைப்பற்றி விட்டு தோழர் மணிவண்ணன் புத்தாண்டுக்கு ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க பிரார்த்திக்கிறாராம். நான் தோழர் மணிவண்ணனை பார்த்து கேட்கிறேன். நீங்கள் ஏற்கனவே டீல் அடித்து மாநகரசபையின் மேயர் பதவியை ஈபிடிபி யுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை திருப்பித் தருவதாக உங்களுக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி தந்தாரா?
மக்களை ஏமாற்றக்கூடாது. இரட்டை வேடம் போடக் கூடாது. காணாமல் ஆக்கியவர்களோடு சேர்ந்து ஆட்சியமைத்து, மேயர் பதவியை பெற்றுவிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீங்கள் நீலிக் கண்ணீர் வடிப்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை.
தியாக தீபம் அண்ணன் திலீபனை நாடாளுமன்றத்தில் எவ்வளவு தூரம் கொச்சைப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கொச்சைப்படுத்திய ஈபிடிபி- டக்ளஸ் தேவனாந்தாவினுடைய ஆதரவை பெற்று மேயர் ஆகிய பின்னர், தியாக தீபத்தின் தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இவை மக்கள் மத்தியில் எடுபட போவதில்லை.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். விரைவில் நடக்கும்.
மணிவண்ணனுடைய கொள்கை என்ன? ஒரு நாடு இரு தேசம் என்றார். இன்று 13வது திருத்தத்தை கொள்கையாக கொண்ட ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கிறார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்பதாக கூறுகிறார். காணாமல் காணாமல் ஆக்கியவர்களோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்.
மணிவண்ணனுடைய இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்கின்ற காலம் விரைவில் வரும். அப்பொழுது இந்த தேசவிரோத சக்திகள் களை எடுக்கப்படுவார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் தோழர் மணிவண்ணனுக்கு ஆதரவளித்தது உடனடியாக பார்க்கின்றபோது ஒரு கவலைக்குரிய விடயமாக இருந்தாலும், நீண்ட காலப் போக்கில் எங்களுடைய அமைப்பை பலப்படுத்துகின்ற ஒரு விடயமாக பார்க்கின்றோம். ஏனென்றால் தோழர் மணிவண்ணன் திட்டமிட்டு தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்காக எங்களுடைய விடுதலை இயக்கத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருந்த சில சமூக விரோதிகளையும், தோழர் மணிவண்ணனின் நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்பவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டு களை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பை தோழர் மணிவண்ணன் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்.
இனி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருக்கும் அத்தனை பேரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு விசுவாசமாகவும், ஒரு தேசம் இரு நாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி தூய்மையான நேர்மையான அரசியலை செய்பவர்களாகவும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை கோரி நிற்பவர்கள் ஆகவும் இருப்பார்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
ஆகவே தமிழ் மக்கள் சரியான தரப்பை இனம்கண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அடையாளப்படுத்தியது போல எங்களைப் பலப்படுத்த வேண்டும்.
மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்த போது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தூய நகரம் துயரங்கள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார். அந்தத் தேர்தலில் நியமனபட்டியல் அடிப்படையில் மாநகர சபைக்கு தெரிவானார். கடந்த மாநகரசபை ஆட்சியிலே மோசடி செய்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சேர்ந்து இப்பொழுது ஆட்சி அமைத்து இருக்கிறார்.
உங்களுடைய தூய நகரம் துயரங்கள் என்ற கொள்கைக்கு என்ன நடந்தது? உங்களுடைய பங்காளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா?. எடுக்க முடியுமா?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் ஈபிடிபியின் ஆதரவில்லாமல் ஒரு தும்புத்தடியை கூட மாநகரசபைக்கு தோழர் மணிவண்ணனால் வாங்க முடியாது. இப்பொழுது தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கைப்பாவையாக மாறியிருக்கிறார்.
மணிவண்ணனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கிய போது, நீக்கத்திற்கான காரணத்தை விரைவில் காலம் பதில் சொல்லும் என கூறியிருந்தோம். இப்பொழுது காலம் பதில் சொல்லியிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment