முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் 8 மீன் வாடிகள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளமையினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தென்பகுதி மீனவர்கள் முல் லைத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவதன் காரணமாக உள்ளூர் மீனவர்களுக்கும்
தென்பகுதி மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்து வரும் நிலையில் தமிழ் மீனவர்களது மீன்வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி சுருக்கு வலையை பயன்படுத்தியும் ஒளிப் பாய்ச்சியும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சட்டவிரோத மீன்படி நடிக்கையினை நிறுத்துமாறுகோரி உள்ளூர் மீனவர்கள் கடந்த 02ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் கடந்த 10 தினங்களாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடி துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை நிறுத்துவதாக உறுதிமொழி வழங்கியதை அடுத்து உள்ளூர் மீனவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தென்பகுதி மீனவர்கள் சட்டவிரோதமாக ஔிப்பாய்ச்சி மீன்பிடிப்பதற்கென கடலுக்குச் சென்றபோது அவர்களது படகுகளை நாயாற்றுப் பகுதி தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இருதரப்புக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதன் பின்னனியிலேயே நாயாற்று 8 தமிழ் மீனவர்களது மீன்வாடிகள் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து தீ முழுமையாக பரவி 8 வாடிகளும் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளன. இதனைால் இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த தீ வைப்புச் சம்பவத்தின்போது படகு ஒன்றும் மூன்று என்ஜின்களும் பெருமதியான வலைகளும் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவத்தை அடுத்து பொலிஸாரும் தீயணைப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து எரிந்துகொண்டிருந்த மீன்வாடிகளை அணைக்க முற்பட்டிருந்தபோதும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இதனால் மீன்வாடிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரைணகளை நடத்தி வருகின்றனர். சம்பவத்தை கேள்வியுற்ற வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
இதேவேளை நேற்றுக்காலை பிரதி அமைச்சர் காதர் மஸ்தானும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை படகுகள் வலைகள் வாடிகள் என்பன எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதாகிய சந்தேக நபர்கள் தென்பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் நேற்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 8 படகுகளுடன் 27 வெளிமாவட்ட மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment