செயலணிக்கான அழைப்பும் கூட்டமைப்பின் முடிவும் - மாணிக்­க­வா­சகம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 25, 2018

செயலணிக்கான அழைப்பும் கூட்டமைப்பின் முடிவும் - மாணிக்­க­வா­சகம்

வடக்கில் அபிவிருத்தி அரசியல் பரபரப்பாகியிருக்கின்றன. பல்வேறு அமைச்சர்கள் பயணங்களை மேற்கொண்டதன் மூலம், வடக்கில் அரசியல் ரீதியான அரச நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன. அமைச்சர்கள் மட்டுமல்லாமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்கூட, வடக்கிற்கு விஜயங்களை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கின்றனர். பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதியின் பங்கேற்றலுடன் நடந்தேறியிருக்கின்றது.



வடபகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகின்ற நிலையிலும் அவர்களை அழுத்திக்கொண்டிருக்கின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய அறிகுறிகளைக் காண முடியாத நிலைமையே நிலவுகின்றது.

அரச தலைவர்கள், தமது பிரச்சினைகளை உரிய முறையில் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணமாட்டார்களா என்று அந்த மக்கள் நாளும் பொழுதும் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்தின் மூலம் அரச நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துணர்வுடனும், சிறுபான்மை இன மக்களின் அரசியல் நலன் சார்ந்தும், பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற தேச நலன் சார்ந்த உரிமைப் பகிர்வு அரசியல் பின்தள்ளப்பட்டு, இந்த அபிவிருத்தி அரசியல் சூடு பிடித்திருக்கின்றது. மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இதன் மைல்கல்லாகப் பதிவாகியிருக்கின்றது.

ஏறக்குறைய 30 வருடங்களாக இராணுவத்தின் பிடியிலிருந்த மயிலிட்டிதுறைமுகப் பிரதேசம் மக்களிடம் கைமாறுவதை இந்த நிகழ்வு குறிக்கின்றது. நாட்டின் அதி உயர் நிலையிலுள்ள அரச தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தத் துறைமுகத்தின் புனரமைப்புக்கான அடிக்கல்லை வைபவரீதியாக நாட்டியுள்ளார்.

வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியோடு, தேசிய பொருளாதார அபிவிருத்தியிலும் மயிலிட்டி துறைமுகம் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது. இதனால், இந்த நிகழ்வு வடமாகாணத்தில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் சரித்திர முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

அபிவிருத்தியும் உரிமையும் 

வடக்கு–கிழக்குப் பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளில் மயிலிட்டி துறைமுக புனர்நிர்மாணப் பணியும் ஒன்று என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றது.

துரித அபிவிருத்திக்கான இந்தப் புதிய திட்டத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இவற்றில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் 10 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

துரித அபிவிருத்தித் திட்டம் என்பது உடனடியாகச் செய்யப்படுகின்ற வேலைகளைக் குறிக்கின்ற போதிலும், ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டிய வீட்டுத்திட்ட வேலைகள் மாதம் முடியப் போகின்ற தருணத்தை எட்டிய நிலையிலும் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்த வீடுகளை இந்தியாவா, சீனாவா கட்டப் போகின்றது என்ற விவாதம் அரசியல் பட்டிமன்ற அரங்கத்தில் சிக்கியிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, வடக்கிலும் கிழக்கிலும் மாவட்டங்களையும் மாவட்ட நகரங்களையும் இணைக்கின்ற பிரதான இணைப்பு வீதிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீதிகள் உள்ளூர் மக்களுக்கு பயன்படுகின்றன என்பதைவிட, வடக்கிலும் கிழக்கிலும் கட்டமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் பணியாற்றுகின்ற நாட்டின் பல பிரதேசங்களையும் சேர்ந்த படையினருக்கே பெரிதும் பயன்படுகின்றன. இந்த வீதிகள் நிர்மாணிக்கப்பட்டதையடுத்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் நாட்டின் தென்பகுதியிலுள்ள மூலை முடுக்குகளில் உள்ள நகரங்களுக்கும் இரவு பகலாக, தாராளமான பேருந்து சேவைகள் நடைபெற்று வருகின்றன என்பது கவனத்திற்குரியது.

பிரதான வீதிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற அளவுக்கு ஒப்பீட்டளவில் உள்ளூர் வீதிகள் மீள்குடியேற்றப் பிரதேச மக்களுக்கு அதிகம் முக்கியமானவை. இந்த வீதிகள் போதியளவில் திருத்தப்படவில்லை.

இந்த நிலையில் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1847 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்றும், அம்பாறையின் சீனித்தொழிற்சாலை, மட்டக்களப்பு காகித உற்பத்தித் தொழிற்சாலை, அரிசி ஆலை போன்ற மக்களுக்கான வாழ்வாதாரத்துக்குரிய ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு– கிழக்குப் பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், அந்த அபிவிருத்தித் திட்டங்கள் பயனாளிகளை உள்ளடக்கிய, அந்தப் பிரதேச நிர்வாகக் கட்டமைப்புக்களின் பங்களிப்பையும் நிறைவேற்று பொறுப்பையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டியது அவசியம்.

ஏனெனில் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் இலக்கு தனிநாடாக இருந்தபோதிலும், வரலாற்று ரீதியான உரித்துரிமையைக் கொண்ட பிரதேசத்தில் நிர்வாகச் செயற்பாடுகளைத் தாங்களே முன்னெடுக்க வேண்டும் என்ற அரசியல் உரிமைக்கான கோரிக்கையையே அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்ட போதிலும், அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனை வென்றெடுப்பதற்குரிய உரிமைப் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

காணி மீட்பு, காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல்வேறு வடிவங்களில், அந்தப் போராட்டம் வீதிகளில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மொழியுரிமை, மத உரிமை, வேலை வாய்ப்பு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தப் போராட்டங்கள் விரிவடைவதற்கும்,  போராட்ட வடிவங்கள் மாற்றமடைவதற்குமான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.

அரசியல் உரிமை சார்ந்த  அபிவிருத்தியே அவசியம் 

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளின் பின்பே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு–கிழக்குப் பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி குழு நிறுவப்பட்டிருக்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியம். அது தவிர்க்கப்பட முடியாதது. ஆட்சிக்கு வந்த உடனேயே இந்த அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை அரசும் ஜனாதிபதியும் முன்னெடுத்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும், தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் அந்தப் பதவியைப் பெறுவதற்கு உறுதுணையாக தேர்தல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாகிய சிறுபான்மையினரே வாக்களித்திருந்தனர். இறுக்கமான இராணுவ கட்டமைப்புக்குள்ளே உயிரச்சுறுத்தல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அவர்கள் புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்காகத் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி அந்தஸ்திலிருந்த போதிலும், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியைப் போலவே, எல்லா விடயங்களிலும் எல்லா இடங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் அவற்றைக் களைவதற்கு முன்னின்று செயற்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பொறுப்புக்கூறும் விடயத்தில் ஐ.நா. மன்றத்தில் உருவாகிய நெருக்கடிகளைத் தளர்த்தி, கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தல் வரையில் அனைத்து விடயங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்குத் தோள்கொடுத்து துணை நின்றிருந்தது.

எனவே, அந்த மக்களுடைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அரசு பதவியேற்ற உடனேயே கவனம் செலுத்திச் செயற்பட்டிருக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கட்டாய பொறுப்பாகும். ஆனால் அந்தப் பொறுப்பை அரசு உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

மாறாக ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு ஜனாதிபதி செயலணி குழுவை நியமித்துச் செயற்படத் தொடங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.

அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்ற அரசாங்கம், முக்கியமாக இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவித்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை முற்றுப் பெறச் செய்வதற்குத் தயக்கம் காட்டி வருவதையே காண முடிகின்றது.

யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இன்னும் 12 வீதமான காணிகளே இராணுவத்திடம் உள்ளதாகவும், ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்றும் தெரிவித்திருக்கின்றார். அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இராணுவம் உண்மையிலேயே எவ்வளவு காணிகளை விடுவித்திருக்கின்றது, எத்தனை குடும்பங்கள் அவற்றில் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.

அப்போது தெரிவிக்கப்பட்ட தகவல்களில் பொதுமக்களுடைய காணிகள் மிகக்குறைந்த விகிதாசாரத்திலேயே விடுவிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை வெளியிடப்பட்டது. அரசுக்கும் அரச திணைக்களங்களுக்கும் சொந்தமான காணிகளே பெருமளவில் விடுவிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அதிகாரிகள் புள்ளிவிபரங்களுடன் எடுத்துரைத்திருந்தனர். பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவிலான குடியிருப்பு காணிகளும் விவசாய காணிகளும் இன்னும் படையினர் வசமிருக்கின்றன என்ற தகவலும் வெளியிடப்பட்டது.

காணிகள் விடுவிக்கப்பட வேண்டியதும், தந்திரோபாய ரீதியில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படுவதும், மக்களின் மனங்களை ஆழமாக அழுத்திக் கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, மரணத்தின் விளிம்பு வரையில் சென்று மீண்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்று அவர்களின் மனங்களை ஆற்றுப்படுத்தலுக்கான புற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றன.

இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல், சந்தேகத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் மத்தியில் அவர்களுடைய அதிகாரப் பங்களிப்பு இல்லாமல், மேலிருந்து திணிக்கின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் உண்மையான அபிவிருத்தியாக இருக்க முடியாது. அது நிலைத்து நிற்கத்தக்க அபிவிருத்தியாகவும் அமையாது.

ஜனாதிபதி செயலணி குழுவும்  தமிழர் தரப்பும் 

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதும், நல்லிணக்கத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வடக்கிலும் கிழக்கிலும் முன்னெடுப்பதன் மூலம் இந்த இலக்கை எட்டிவிட முடியும் என்று ஜனாதிபதி கொண்டிருக்கின்ற எண்ணம் தவறானது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஐக்கியமும், நல்லிணக்கமும் அரசியல் தீர்வின் மூலமாகவே எட்டப்பட முடியும் என்பதை விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் இந்தக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு துரித அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் உறுப்பினர்களாக இணைக்காமல், வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் தன்னை மாத்திரம் ஒருவராக நியமித்திருப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இந்த செயலணி குழுவிற்கு ஜனாதிபதியே தலைவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சரவை அந்தஸ்து பெற்றுள்ள 15 அமைச்சர்கள், வடக்கு–கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்கள், முதலமைச்சர்கள் ஆகியோருடன் முப்படைகளின் தளபதிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றார்கள். இந்த செயலணியின் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

ஒரு பிரதேசத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்போது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு இடமளிக்காமல் இருப்பது கேள்விக்குரியது. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டியதோர் அரசியல் சூழல் நிலவுகின்ற நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இல்லாமல் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்க முயற்சித்திருப்பது சிந்தனைக்குரியது.

வடக்கும் கிழக்கும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நிலையிலுள்ள போது, அங்கு மேற்கொள்ளப்படுகின்ற சிவில் செயற்பாடுகளான அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் முடிவெடுக்கின்ற அல்லது அவற்றை முன்னெடுப்பது தொடர்பிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான குழுவில் முப்படைகளின் தளபதிகள் இடம்பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களையே ஏற்படுத்தியிருக்கின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய பாதுகாப்புக்காகவே இராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், சிவில் நிர்வாகச் செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள், பொருளாதார முயற்சிகள் என பொதுமக்களின் வாழ்வியல் சார்ந்த விடயங்களில் படையினர் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். இதனால், இராணுவம் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாதுள்ள நிலையில், துரித அபிவிருத்திச் செயற்பாடுகளில் முப்படைகளின் தளபதிகள் உள்வாங்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

செயலணியின் காலச்சூழல்

ஜனாதிபதி செயலணியில் வடக்கு, கிழக்குப் பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், பதவிக்காலம் முடிவடைகின்ற தறுவாயில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவருடைய பதவி முடிவடைவதற்கு இன்னும் நாட்கணக்கிலான சிறிய கால அவகாசமே உள்ளது. மாகாண சபை கலைக்கப்பட்டதும், முதலமைச்சர் என்ற ரீதியில் அவர் அந்த செயலணியில் தொடர்ந்து உறுப்பினராக இருக்க முடியாது என்பது அனுமானம். அவ்வாறு இருந்தாலும்கூட, அவர் எத்தகைய அதிகாரம் கொண்டவராக அல்லது செயலணியில் எடுக்கப்படுகின்ற முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடியவராக இருப்பார் என்று கூற முடியாது.

மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் குழுவின் அங்கத்தவர்களாக இல்லாத நிலையில் அந்தக் குழுவில் பெரும்பான்மையாக உள்ள வடக்கிலும், கிழக்கிலும் தொடர்பில்லாத கட்சி அரசியல் நலன்சார்ந்தவர்களும், அரச நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுமே காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் அந்தக் குழுவின் செயற்பாடுகள் நீண்டகால தேவைகளையும் யானை பசியைப் போன்ற பல தேவைகளையும் கொண்ட மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று கூறுவதற்கில்லை.

ஏனெனில் கடந்த 3 வருட காலத்திலும் அரசாங்கமும் சரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரும் சரி அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் அவர்களால் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுடைய செயற்பாடுகள் பெரும்பான்மை இன மக்களின் நலன்கள் சார்ந்ததாகவும், கட்சி அரசியல் நலன்கள் சார்ந்ததாகவுமே அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஜனாதிபதி செயலணி குழுவினால் எதனைச் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில்தான் மயிலிட்டி துறைமுக வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி 27 ஆம் திகதி நடைபெறவுள்ள துரித அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி க்குழு கூட்டத்தில் வடக்கு–கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு ஏற்கனவே ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அந்தப் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் அழைப்பு, செயலணியில் அங்கத்துவம் பெறுவதற்கான அழைப்பல்ல. அந்த குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மட்டுமே அவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியிருக்கின்றார். ஆனால் அந்தக் கோரிக்கையை கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் நிராகரித்துள்ளார்.

சமஷ்டி ஆட்சி முறையையும் வடகிழக்கு தாயகப் பிரதேசம் என்ற ரீதியில் பகிரப்பட்ட இறையாண்மையையும் வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றது. இந்த நிலையில் மாகாண சபையையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி, அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு, அரசியல் உரிமை என்பனவற்றில் நாட்டம் காட்டாத துரித அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகளிலும், மக்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்ட துரித அபிவிருத்தித் திட்டங்களிலும் என்ன நன்மைகளை கூட்டமைப்பு அடையப் போகின்றது என்பது தெரியவில்லை.

பி. மாணிக்கவாசகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad