இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, August 9, 2018

இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில்

இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பூதவுடல் மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சமாதியின் வலது புறத்தில் நேற்று மாலை முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.  
கலைஞர் கருணாநிதி 30 வருடங்களுக்கு முன்னர் தான் மரணித்த பின்னர் தனது பூதவுடல் அண்ணாவின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் தனது நினைவிடத்தில் பொறிக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார். அதற்கிணங்க பல்வேறு தடைகளைத் தாண்டி நீதிமன்றம் சென்று மெரினாவில் அவரது பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை தி.மு.க.வினர் பெற்றனர். இதனையடுத்து அவர் விரும்பியதுபோலவே ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் வைத்து அவரது பூதவுடல் அண்ணாவின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நல்லடக்கநிகழ்வில் கலந்துகொண்ட கலைஞரது குடும்பத்தினர் சோகம் தாழாது கதறியழுதனர். கலைஞர் வாழ்க என்று தொண்டர்கள் கோசம் எழுப்பினர். தங்களது பாசமிகு தந்தையை தலைவரை கண்ணீர் மல்க கட்சியின் தொண்டர்கள் வழியனுப்பிவைத்தனர்.
கலைஞரின் மகன் மார்களான அழகிரி, ஸ்டாலின் ஆகியோரும் சோகம்தாழாது கதறியழுதனர். இவ்வாறு கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் கலைஞரின் பூதவுடல்
அடக்கம் செய்யப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு காரணமாக கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 28 ஆம் திகதி இரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இது தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்ததோடு தமிழகம் முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் காவேரி மருத்துமனையில் இருந்து கலைஞரது பூதவுடல் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை 1 மணிக்கு சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு அவரது பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணியில் இருந்து நேற்று மாலை 4 மணிவரை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இராணுவ வீரர்கள் தேசிய கொடியை கருணாநிதியின் பூதவுடலின் மீது போர்த்தி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்று போராடி வென்று, முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் என்ற பெருமை பெற்றவர் கருணாநிதி. இந்நிலையில் அவரது பூதவுடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது .
மேலும், கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் ஒரு வாரகாலம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தன. அதேபோல இந்தியா முழுவதும் நேற்றைய தினத்தை துக்கதினமாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியா முழுவதிலுமே தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் கறுப்பு கொடி பறக்கவிட்டு பொதுமக்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். பாராளுமன்றத்திலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி
ஆயினும் கருணாநிதியின் விருப்புக்கு இணங்க அவரது பூதவுடலை மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்வதற்கு திமு.க. தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரச நிராகரி்த்திருந்தது. இது தொடர்பில் தி.மு.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரசர மனுவை தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதியில் கலைஞரது பூதவுடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இலட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி
இதேவேளை ராஜாஜி அரங்கில் நேற்று அதிகாலை முதல் இலட்சக்கணக்கான தொண்டர்கள் கருணாநியின் பூதவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இதன்போது ஏற்பட்ட ஜன நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தததோடு 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் கருணாநிதியின் பூதவுடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொலிஸார், பொதுமக்கள் என இலச்சக்கணக்கானவர்கள் சூழ அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.
வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட இராணுவ வாகனத்தில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினாவுக்கு கருணாநிதியின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இந்தியாவின் 14 பிரதமர்களுடனும் அரசியல் பயணம் செய்த கருணாநிதியின் இறுதி பயணம் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடல் நோக்கி சென்றபோது சாலையின் இருபுறங்களிலும் பல இலட்சக்கணக்கான பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனால், எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் அலை கடல் என வழி எங்கும் வாழ்த்து முழக்கங்களுடன் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அண்ணாநினைவிடத்தை வந்தடைந்த பூதவுடல்
இந்நிலையில் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கி சென்ற கலைஞரின் இறுதி ஊர்வலம் 6.30 மணியளவில் அண்ணா நினைவிடத்தை அடைந்தது. அதனையடுத்து அங்கு முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. அங்கும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கானவர்கள் குவிந்திருந்தனர்.
 காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னால் இந்திய பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு மலர்வலையம் வைத்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். அதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் மலர் தூவி தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
பின்னர் முப்படையினர் அரச மரியாதையுடன் கருணாநிதியின் பூதவுடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியகொடியை மடித்து அவரது மகனும் தி.மு.க. செயல்தலைவருமான ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவரது உடல் சந்தனபேழைக்கு மாற்றப்பட்டது. இதன் போது அவரது உறவினர் இறுதி சடங்கினை செய்தினர்.
கருணாநிதியின் வாசகம்
கருணாநிதியை நல்லடக்கம் செய்த சந்தன பேழையில், " ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
தான் இறந்த பின்பு தமிழக முன்னாள் முதல்வரும் தனது அரசியல் குருவுமான அண்ணாதுரையின் சமாதியின் அருகே தன்னை அடக்கம் செய்யும் போது, சமாதியில் இந்த வசனம் பொறிக்கப்பட வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன் இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அதே வாசகம் அவரது பூதஉடல் நல்லடக்கம் செய்யபட்ட சந்தனபேழையில் பொறிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக அவரது பூதவுடலுக்கு முப்படையினர் மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரச மரியாதை அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினரும் தொண்டர்களும் முக்கிய பிரமுகர்களும் இறுதியாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக கனிமொழி தந்தையின் உடலருகே வந்து அவர் முகத்தைக் கையால் தொட்டுப் பார்த்தார். குடும்ப உறுப்பினர்கள் கடைசியாக ஒருமுறை கருணாநிதியின் பூதவுடலை கண்ணீருடன் பார்த்தனர். அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்ணீரை அடக்க முடியாமல் வாய்விட்டு அழுதனர். கலைஞரின் பூதவுடலிருந்த சந்தனப்பேழை மூடப்பட்டது.

இதையடுத்து இரவு 7 மணியளவில் அவரது பூதவுடல் தாங்கிய சந்தன பேழை அவர் விரும்பிக்கேட்ட அண்ணாவின் சமாதி அருகில் 6 அடி நிலத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது தலைவா தலைவா வாழ்க... என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad