திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத் தலைவர்களில் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் தன்னிகர் இல்லாத அரசியல் தலைவருமான முத்துவேல் கருணாநிதி தனது 94 ஆவது வயதில் காலமானதையடுத்து தமிழகத்தில் பெரும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் பூதவுடல் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து மெரினா கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பூதவுடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியத் தலைவர்கள் உட்பட பெருமளவான முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். இலங்கையிலிருந்தும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் நேரடியாக சென்று அன்னாரின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
அரசியலிலும் கலை, இலக்கிய துறையிலும் பெரும்பங்காற்றிய கலைஞர் கருணாநிதியின் மறைவானது உண்மையிலேயே தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்திலும் ஈழத்தமிழர்களது விடயத்திலும் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு என்பது மறுக்க முடியாததொன்றாக அமைந்திருக்கின்றது.
காலஞ்சென்ற கருணாநிதி தமிழ் மக்களின் கருத்தியலிலும் தமிழக அரசியலிலும் தமிழ் இலக்கியத்திலும் ஆற்றிய பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்கமுடியாத நிலைமையினை உருவாக்கியிருக்கின்றது. 6 தசாப்தகாலமாக 13 தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த இவர் ஐந்து தடவைகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி மீது தீராத பற்றுக்கொண்டிருந்த கருணாநிதி தமிழை செம்மொழியாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு அவர் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு செய்த பணிகள் அளப்பரியனவாக இருக்கின்றன. இதனால்தான் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அவரது இழப்பானது பேரிழப்பாக மாறியிருக்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்திலும் ஈழத்தமிழர்களின் போராட்ட விடயத்திலும் கருணாநிதியின் பங்களிப்பு அன்றுதொட்டு இருந்துவந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக அவர் ஆட்சியை இழந்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியும் இருந்தார். அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை நடத்தியும் மனித சங்கிலிப்போராட்டத்தை மேற்கொண்டும் அவர் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் அக்கறை காண்பித்திருந்தார்.
1980களில் ஈழ போராட்ட அமைப்புக்கள் தமிழகத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஈழப்போராட்ட விடயத்தில் கருணாநிதியின் பங்களிப்பானது ஓரளவிற்கு இருந்திருக்கின்றது. ஆனாலும் அன்று எம்.ஜி. ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தகாலத்தில் போராட்டக்குழுக்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ஆர். தமிழ்போராளிக்குழுக்களை ஒன்றாக சந்திப்புக்கு அழைத்தபோது கருணாநிதியும் அவர்களை சந்திப்புக்கு அழைத்ததாகவும் இதனால் தமிழ்போராளிக்குழுக்களுக்கிடையே முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.
ஆனாலும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக கலைஞர் கருணாநிதி தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கின்றார். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் தமிழ் தலைவர்கள் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக போராட்டங்களை நடத்தி வந்தனர். தந்தை செல்வநாயகம் தலைமையில் இதற்கான ஜனநாயக வழிப்போராட்டங்கள் இடம்பெற்றன. இவ்வாறான நிலையில் 1956 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முதன்முதலில் கலைஞர் கருணாநிதி முன்வைத்திருந்தார். அன்றிலிருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர் அக்கறையுடன் செயற்பட்டிருந்தார்.
ஈழத்தமிழர்களின் தலைவர்களான தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் கலைஞரை சந்தித்த போதெல்லாம் தன்னுடைய ஆதரவை அவர் வழங்கியிருந்தார். ஈழத்தமிழ் போராளி அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் திம்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது போராளிக்குழுக்கள் சிலவற்றின் தலைவர்களுக்கு அவர் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
கருணாநிதியை சந்தித்து திம்பு பேச்சுவார்த்தையில் புௌாட் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் பேச்சுவார்த்தை தொடர்பில் ஆலோசனை கேட்டபோது தமிழீழக் கோரிக்கையினை கைவிட வேண்டாம், இலங்கை அரசாங்கத் தரப்பினர் குறைந்த தீர்வையே தருவதற்கு எத்தனிப்பார்கள். எனவே இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கவேண்டும். அவர்கள் சில படிகள் இறங்கிவந்தால் நீங்களும் சற்று இறங்கி தீர்வைக் காணலாம் என்று அறிவுரையும் கூறியிருந்தார்.
இவ்வாறு ஈழத்தமிழர்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். ஈழத்தமிழர் விவகாரம் காரணமாக கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் இறுதி யுத்தத்தின்போது கலைஞர் கருணாநிதியின் செயற்பாடானது ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என்பதனை மறுப்பதற்கில்லை.
2009ஆம் ஆண்டு வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியே நடைபெற்று வந்தது. ஈழத்தமிழர்கள் இறுதி யுத்தத்தின்போது கொன்று குவிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறான அவலங்களுக்கு காரணமான கொடூர யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு அன்றைய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் இன்றும் புரையோடிப்போயுள்ளது.
வன்னியில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. முத்துக்குமார் உட்பட பலரும் தீக்குளித்து தமது உயிர்களை மாய்த்துக்கொண்டனர். ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை தாங்கமுடியாது இவர்கள் இவ்வாறு தமது உயிர்களை மாய்த்துக்கொண்டனர்.
இந்தநிலையில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்திய மத்திய அரசாங்கத்திற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி உரியவகையில் அழுத்தம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. யுத்தத்தை நிறுத்துமாறு சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்கள் வழங்கப்படவில்லை. யுத்தம் நிறுத்தப்படாததைக் கண்டித்து அண்ணா நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதி சில மணிநேரங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் இலங்கை அரசாங்கம் துப்பாக்கிகளை மௌனிப்பதாக உறுதியளித்ததை அடுத்து இந்த உண்ணாவிரதத்தையும் அவர் கைவிட்டிருந்தார்.
இந்த உண்ணாவிரதம் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கலைஞர் கருணாநிதிக்கான இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கைத் தமிழர்களுக்காக கலைஞர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். எனினும் முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்தபோது கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து அழிவை தடுத்திருக்க முடியும் என்ற ஆதங்கம் எம்மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என்று விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே இறுதியுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. இந்த ஒத்துழைப்புக்கு அன்றைய இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவே நன்றிகளைத் தெரிவித்திருந்தனர். இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் யுத்தத்தை இலங்கை அரசாங்கம் வெற்றிகொண்டிருந்தது. இந்தவேளையில் யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதற்காக அன்றைய பிரான்ஸ், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். ஆனால் அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் தலைமையிலான அரசாங்கம் தமிழக மக்கள் பொங்கி எழுந்தபோதிலும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது.
ஆனாலும் அன்றுதொட்டு ஈழத்தமிழர் விவகாரத்தில் அக்கறை செலுத்தி வந்த கலைஞர் கருணாநிதியின் மறைவு ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள் என்றும் மறக்க முடியாதவை. மொத்தத்தில் கலைஞரின் மறைவானது தமிழ்கூறும் நல்லுலகிற்கு இழப்பாகவே அமைந்திருக்கின்றது.
No comments:
Post a Comment