வெடுக்குநாறி மலை கோவில்: 400 மீற்றருக்கு விரட்டியடிப்பு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 4, 2018

வெடுக்குநாறி மலை கோவில்: 400 மீற்றருக்கு விரட்டியடிப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் ஆலயம் அமைத்து வழிபட முடியாது என்பதுடன், மலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பாலேயே ஆலயம் அமைக்க முடியும் என தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை நேற்று அழைத்த நெடுங்கேணி பொலிஸார் அவர்களிடம் தொல்லியல் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் தமிழரின் பூர்வீக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.

குறித்த மலைப் பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன், தமிழ் மக்கள் வரலாற்றுடன் தொடர்புடைய நாகர்களின் புராதன பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன.

கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொது மக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்த தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன், ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆலயத்தினை முழுமையாக மீட்டு தருமாறும், தமது மத வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க கோரியும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 21ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டமும் இடம் பெற்றிருந்தது.

அத்துடன் எதிர்வரும் 7, 8, 9ஆம் திகதிகளில் திருவிழா நடத்துவதற்கும் ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், நேற்று வெடுக்குநாறிமலை தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடம். அங்கு ஆலயம் அமைத்து வழிபட முடியாது.

மலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால்தான் ஆலயம் அமைத்து வழிபட முடியும் என தொல்லியல் திணைக்களம் பதில் வழங்கியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, திருவிழா தொடர்பில் ஒலிபெருக்கியில் அறிவிக்க தடை விதித்ததுடன், தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற்று திருவிழா மற்றும் வழிபாடுகளை நடத்துமாறும், மீறிச் செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad