விபத்துகளுக்கு புகையிரத திணைக்களமே காரணம் - சிவசக்தி ஆனந்தன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, September 17, 2018

விபத்துகளுக்கு புகையிரத திணைக்களமே காரணம் - சிவசக்தி ஆனந்தன்

புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே தொடரும் விபத்துக்களுக்கு காரணம்: 

வடக்கின் புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா, ஒமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதத் கடவையை கடந்து சென்ற கார் ஒன்றின் மீது யாழில் இருந்து வந்த புகையிரதம் மோதியதில் நான்கு பெண்கள் மரணமடைந்திருந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள புகையிரதக் கடவைகளில் பல விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இப் பகுதிகளில் உள்ள பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாக இருப்பதுடன், புகையிரதக் கடவைகளில் கடவை காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் ஊடாக பயணிப்போர் புகையிரதத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து கூட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் தினமும் பல நூற்றுக்கணக்கில் பயணிக்கும் நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைவிட்டு வந்ததுடன், அதனை நானும் புகையிரதத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

மாவட்டத்தில் இடம்பெற்ற பல ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். குறிப்பாக கடந்த 3 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

ஆனால், எந்தவித நடவடிக்கையும் புகையிரதத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மரணித்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்து கொள்வதுடன், இவ்வாறான விபத்துக்களை இனிவரும் காலங்களில் தடுக்கும் வகையில் புகையிரதத் திணைக்களம் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைப்பதுடன், புகையிரதக் கடவைகளுக்கு நிரந்தமாக கடவைக் காப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், ஏ9 வீதியிலும் அண்மைகாலமாக விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் புதிய திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி அநாவசியமான உயிரிழப்புக்களை தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad