கரவெட்டி பிரதேச சபை பொது மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுநிகழ்வில் சுமந்திரன் எம்.பி. ஆற்றிய உரை
தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எமது இன விடுதலைப் பயணத்தில் பல விதமான தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் அதிக தியாகம் செய்தவர்களில் திலீபன் முக்கியமானவர். அகிம்சை வழியில் எமது கட்சி பல ஆண்டுகள் போராடியது. இடையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அப் போராட்டத்தில் பலர் தமது உயிர்களை அர்ப்பணித்தனர். பலர் பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். ஆயுதப் போராட்டத்தின் போது அகிம்சை வழியில் போராடிய திலீபன் உயிரை மாய்த்துக் கொண்டார். இத் தியாகத்தின் மூலம் அவர் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார். பல்லாயிரக்கணக்கான தியாகங்களில் திலீபனின் தியாகம் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது தியாகம் பெரிதும் போற்றப்படுகின்றது.
எங்கள் இனத்தின் விடுதலை சுயகௌரவத்தோடும் சுயநிர்ணயத்தோடும் சுயாட்சி அதிகாரத்தோடு எமது மண்ணில் எமது தலைவிதியை நாங்களே நிர்ணயிக்கும் வாழ்வியலையப் பெறுவதே எமது போராட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. இதற்கு சாத்தியமான சட்டங்கள் இருந்ததை நாம் கருதி வந்துள்ளோம்.
இலங்கை தீவில் எமக்கு உரிமை கிடையாது என நாங்கள் தனி நாடு கோரினோம். ஆனால் 1988 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி அதிகாரம் பலவந்தமான முறையில் ஏற்படுத்தப்பட்டமையால் இலங்கைக்குள் சுய உரிமை அடைய வழிவகைகளைத் தேடுவோம் என முடிவு எடுத்தோம். 1988 ஆம் ஆண்டு அரசியல் மாற்றம் நாங்கள் விரும்பாவிட்டாலும் அது நடந்தது. இருந்தபோதும் அதற்குள் இருந்துகொண்டு எமது இலக்கினை அடைய நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
1983 ஆம் ஆண்டு பிரிவினைக்கு எதிராக 6 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய மாட்டோம் என்று கூறி பதவிகளை இழந்தார்கள். மாகாண சபை முறைமை வந்தபோது உள்நாட்டு சுயநிர்ணய உரிமையை அதன் மூலம் பெறலாம் என்று நாம் அனைவரும் ஒரு கட்சியாக இணைந்தோம். எமது பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் 6ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களும் தனிநாடு கோரமாட்டோம் என சத்தியப் பிரமாணம் செய்தனர். இதனை 2001, 2002 ஆம் ஆண்டுகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு நாட்டுக்குள் தீர்வு என்பதை அச்சமயத்தில் வெளிப்படுத்தியிருந் தார். குறித்த ஆண்டுகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது உரையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு வருமானால் அதனைப் பரீசீலிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு குறித்த நிலப்பரப்பில் நாங்கள் எங்களது தலைவிதியை நாங்களே நிர்ணயிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. சர்வதேச ரீதியில் நாங்கள் சுயநிர்ணய உரிமையைக் கொண்டுள்ளோம் என்பதை சர்வதேசம் இணங்கியது. ஆனால் தீர்வு எட்டவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந் நாட்டுக்கு எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசியல் அபிலாஷைகளை உருவாக்க வேண்டும் என இணங்கின. இவற்றுடன் நாங்களும் உடன்பட்டோம். தமிழ் மக்களின் வாக்குகள் தான் இதனை ஏற்படுத்தின. பொதுத் தேர்தலிலும் இதுவரை காலமும் ஏற்படாத இரு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்தின. இந்த தேசிய அரசானது ஒன்று சேர்ந்த காரணம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற ஒன்றுதான். அதை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாமும் ஆதரவு கொடுத்தோம். இதை நிறைவேற்ற அரசியல் அமைப்புச் சட்டம், மக்கள் கருத்தறியும் குழு என்பன அமைக்கப்பட்டு பாரளுமன்றத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 2016 ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையில் அதனைக் குறிப்பிட்டிருந்தார். அதனை அவருக்கு நாங்கள் ஞாபகப்படுத்துபவர்களாக இருக்கிறோம்.
வடக்கில் ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்கள் பயப்படுகிறார்கள். தெற்கில் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் பயப்படுகிறார்கள். ஒரு அரசியல் சட்டம் என்பதும் மக்கள் பயப்படாமல் இருக்க வேண்டும். ஒரு இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, ஒரு சமயத்திற்கு முக்கியம் கொடுப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாது. அதன்படி புதிய அரசியலமைப்பு மும்முரமாக ஏற்படுத்தப்பட்டிருந்த காலத்தில் இடைக்கால அறிக்கை வரும் போது சுதந்திரக் கட்சி பின்னடித்து 10, 11 மாதங்கள் பிற்போடப்பட்டது. கடந்த வருடம் செப்டெம்பரில்தான் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டன. 2016 ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு அமைய பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் 6 மாதத்துக்குப் பின் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இது இந்த ஆட்சியில் நிறைவேறுமா என்ற சந்தேகம் பலரிடம் உண்டு. முற்று முழுதாக நாங்கள் அரசியல் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது அரசியல் நகல் முன் வைக்கப்பட்டது. இவை கட்டாயம் நிறைவேற்றப்பட்டது.
2000 ஆம் ஆண்டு சந்திரிகா அரசு புதிய அரசியல் வரைபு ஒன்றை கொண்டுவந்தது. சிறப்பான அந்த அரசியல் நகல் வரைபு பாராளுமன்றத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. இப்படிப் பல வழிகளில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் அல்லது வாய்ப்பு கிட்ட வந்து தவறிவிட்டது. இது போன்ற நிலை ஏற்பட்டது. நகல் வரைபு வர முன்னர் அது வெற்றி பெறுமா என்ற எண்ணம் மக்களிடம் வந்துள்ளது. இதை எப்படி நம்புவீர்கள் என்று கேட்கின்றீர்கள். நம்பிக்கையில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. மாணவர்கள் பரீட்சையில் வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கையில் பரீட்சை எழுதினால் தான் வெற்றி பெறமுடியும். அதேபோல விளையாட்டு வீரர்களும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் போட்டியிட்டால்தான் வெற்றிபெறலாம்.
இந்த முறை இம் முயற்சி முறிந்து பயனளிக்காவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என அரசுக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம்.
இன்று எமக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள் கூட இது வெற்றியளிக்காது எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். நாங்கள் எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்களைக் கேட்டுக்கொள்வது என்ன வென்றால் உங்களின் மாற்று வழி என்ன அதனை வெளிப்படுத்துங்கள். வெறுமனே பத்திரிகைகளில் அறிக்கை விடுவதன் மூலமோ உணர்ச்சிவசமாக மக்களை தூண்டும் வகையில் செயற்படுவதன் மூலமோ எதனையும் செய்யமுடியாது. அகிம்சை வழியில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் வழியில் செல்லப் போகிறீர்களா அதனை விட வேறு என்ன செய்யப்போகிறீர்கள் அல்லது புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை விட பெரிய போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாரா. உலக சரித்திரத்திலே எவரும் தொட முடியாத, சிகரத்தை தொட்ட கலாட்படை, கடற்படை, விமானப்படை, எல்லாவற்றையும் வைத்துப் போராடிய புலிகளின் போராட்டத்தைவிட நீங்கள் போராடப் போகிறீர்களா. அதை மக்களிடம் சொல்லவும். அப்படியானால் உங்களிடம் உள்ள மாற்றுவழி என்ன? மாற்று வழிகளைப் பிரேரிக்காது நாங்கள் செய்யும் முயற்சிகளை ஏளனம் செய்யும் உங்களது காரணம் என்ன. இந்த நாட்டுக்குள் எங்களது தீர்வினை பெற்றுக் கொள்ள அரசு இணங்க வேண்டும். நாங்கள் ஒன்றும் நியாயமற்றதைக் கோரவில்லை. உலகத்தில் வாழ்கின்ற மக்கள் பெறுகின்ற உரிமைகளைத் தான் நாங்களும் கோருகின்றோம். இதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் போல ஒன்றும் தெரியாமல் இருக்கக்கூடாது. மாறாக அவர்களது சந்தேகம் வலுக்கக்கூடிய வகையில் செயற்படுகிறார்கள்.
மாறாக நாங்களும் செயற்பட்டால் எங்கள் இலக்கை அடைவது கஷ்டம். நாங்கள் எவரிடமும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் உரித்து உரித்துதான். நாங்கள் சொல்கின்ற தோரணை சொல்கின்ற வடிவம் எல்லாம் முக்கியமானவை. மற்றத்தரப்பு சமரசம் செய்யும்போது அவருக்கு மதிப்பளித்து சந்தேகம் ஏற்படாது செயற்படவேண்டும். பேச்சுக்கான இந்த அணுகுமுறைகளைக் கையாளும்போது உடனே அவர் விலைபோய்விட்டார் என சொல்கிறார்கள். எல்லா ஆயுதங்களும் இருந்தும் கூட பெறமுடியாததை ஒரு ஆயுதமும் இல்லாமல் அவர்களுடன் முட்டி மோதிப் பெறமுடியுமா? என்ன மாற்று முறைகளை அணுகுமுறைகளை சொல்ல வேண்டும்.
இப்போது சர்வதேசத்தின் முழு ஆதரவும் எமக்கு உள்ளது. ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகளை 33 நாடுகள் தடை செய்திருந்தன. இன்றைக்கு அந்த நாடுகள் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. அவர்களின் மனதில் பொறுப்பற்றவர்கள் என்ற எண்ணம் இந் நாடுகளுக்கு வரக்கூடாது. எங்களது தரப்பில் 5 வருடமாக பதவியை தக்க வைத்திருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பது சர்வதேசத்தின் எண்ணம். உங்களின் அவர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எம்மை அவர்கள் கேட்கிறார்கள். வருகின்றதையும் திருப்பி அனுப்புகிறார்கள் செய்யக் கூடியதையும் செய்வதில்லை என்று. வெறுமனே வெட்டிப் பேச்சைப் பேசிக்கொண்டு எதையுமே செய்யாமல் இருக்கிறார் என்பது சர்வதேசத்தின் எண்ணமாகும். இன்று எம்மிடம் பலத்தை உதறக்கூடாது. அதற்காக எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சாதாரண இலக்கை அடைய சமூகத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் பின்பற்ற வேண்டும். இந் நாட்டில் பெரும்பான்மை இனத்தின் எதிர்ப்பை சம்பாதித்து எமது இலக்கை நிறைவேற்ற முடியாது. ஆனால் சமரசமாக பேசி இலக்கை அடைய முடியும். அந்த பக்குவம் எங்கள் மக்கள் மனதில் இருக்க வேண்டும். இது எமது மக்களிடம் இருக்கிறது. அதை இல்லாமல் செய்யும் பிரசாரத்தை அனுமதிக்க முடியாது. அந்தப் பொறுப்பற்ற பிரசாரத்தை மக்களிடம் முறியடிக்க வேண்டியது இளைஞர்களின் கைளிலேயே இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment