சமஷ்டி என்றால் என்னவென்று கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கே தெரியாது - விளங்கப்படுத்துகிறார் சுமந்திரன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 4, 2018

சமஷ்டி என்றால் என்னவென்று கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கே தெரியாது - விளங்கப்படுத்துகிறார் சுமந்திரன்

“சமஷ்டி தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை விமர்சிக்கும் எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, சமஷ்டி, ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது முன்வைத்தால் அதற்கான பதில் கருத்தை நான் கூறலாம். சந்தர்ப்பவாதிகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.”



– இவ்வாறு குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமஷ்டி தேவையில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என வெளியாகியிருக்கும் கருத்துக்கள் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அவ்வாறு நீங்கள் கூறிய கருத்து உங்களது தனிப்பட்ட கருத்து என்று பங்காளிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனரே? என ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

“இது சம்பந்தமாகத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகம் எங்கள் பங்களிக் கட்சித் தவைர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டு அவர்களுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், என்னிடம் இது குறித்து கேட்கவில்லை. நான் மறுப்பறிக்கை வெளியிட்ட பின்னர் கூட என்னிடம் கேட்கவில்லை. இது மிகவும் துரதிஷ்டவசமான விடயம். அதனைத் தெரிந்துகொண்டு தான் என்னிடம் கேட்வில்லை. ஏனெனில் அதனை என்னிடம் கேட்டால் அதற்கான சரியான விளக்கத்தை நான் கொடுத்து விடுவேன் என்ற காரணத்தால் குழப்பகரமான செய்திகளைப் பிரசுரிப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள்.

ஆனாலும், இந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக எமது கட்சி அலுவலகத்தில் நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். தெளிவுபடுத்தலை தவறாகப் பிரசுரித்த பத்திரிகைகள் அந்த தெளிவுபடுத்தலை இன்னும் பிரசுரிக்கவில்லை. மாறாக அந்தத் தவறான கருத்தை இன்னமும் வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றவர்களிடம் கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாத பலர் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எனது விளக்கத்தில் தெட்டத்தெளிவாகப் பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றேன். சமஷ்டிக் குணாதிசயங்கள் அடங்கிய அரசமைப்புச் சட்டத்தைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்பது எங்கள் நிலையான கொள்கை. சமஷ்டிக் கட்டமைப்பிலான என்று எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

சமஷ்டிப் பெயருள்ள அரசமைப்பு என்று நாங்கள் எங்கேயும் சொன்னது கிடையாது. சமஷ்டி பெயர் இருக்கவேண்டுமா? இல்லையா? என்பது பற்றித் தெட்டத் தெளிவாக எங்கள் மக்களக்குப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். எங்கள் பங்காளிக் கட்சித் தலைவர்களும் இருந்த பல கூட்டங்களிலேயே நாங்கள் இதைச் சொல்லியிருக்கின்றோம்.

முதல் தடவையாக சமஷ்டியைப் பற்றி நான் சொன்ன விடயமல்ல இது. நான் நூறு தடவை பல இடங்களில் பெயர்ப்பலகை தேவையில்லை என்றும், உள்ளடக்கம் தேவை என்றும், சமஷ்டிக் குணாதிசயம் என்ன என்றும் சொல்லயிருக்கின்றேன்.

அப்படியிருக்கையில் பங்காளிக் கட்சித் தலைவர்களோ அல்லது வேறு எவரோ இதை விமர்சிக்கின்றவர்களுக்கு சமஷ்டிக் குணாதிசயங்கள் என்னவென்று சொல்லும் அறிவு உண்டா என்பது எனக்குத் தெரியாது. இடைக்கால அறிக்கையிலே எந்தெந்தப் பக்ககங்களில் அவை முன்மொழியப்பட்டிருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.

அந்த இடைக்கால அறிக்கையில் இருக்கிற விடயங்கள் தான் இன்றைக்கு ஒரு வரைவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக இரண்டு குணாம்சங்கள் அந்த வரைவில் இருக்கின்றன. சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்று தெரிந்து புரிந்து அதற்கான கருத்துக்களை யாராவது சொன்னால் அதற்குப் பதில் நான் சொல்லாம். ஆனால், சந்தர்ப்பவாதிகளாகத் திடீரென்று யாரோ ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார்கள் என்பதற்காகச் சுமந்திரன் சொன்னால் அது நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுபவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சுமந்திரன் இப்படிச் சொன்னது எழுபது ஆண்டுகளுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்சி வீதி வீதியாக இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொடுத்துக் கொலை செய்த காலங்களில் அப்படிப் பிடிபடாமல் கொழும்புக்கு வந்தவர்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் பாராமரித்து வந்தவர்களில் நானும் ஒருவன்.

நான் எந்த வேளையிலும் எந்தச் சந்தியிலும் முகமூடி அணிந்து கொண்டு எவரையும் காட்டிக் கொடுக்கவில்லை. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் இப்போது எனக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவதற்குத் துணிந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் நான் எவரையும் துரோகி என்ற வார்த்தையால் இதுவரை வர்ணித்தது இல்லை. ஆகையால் அவர் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” – என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad