அரசியல் கைதிகள்: உற்றுக்கேட்டு நிலைமை அறிந்த மைத்திரி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 17, 2018

அரசியல் கைதிகள்: உற்றுக்கேட்டு நிலைமை அறிந்த மைத்திரி!!

அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம். ஆதலால் இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதே கூட்டமைப்பினர் மேற்கண்ட கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

இச் சந்திப்பின்போது கூட்டமைப்பினர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிவடைந்தவுடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராக தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால் தற்போது தண்டனைக்காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்.

மேலும் இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாடசியமாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இப்புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாடசியமாக முடியாது. இந்த சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அத்துடன் 1971 ஆம் ஆண்டும் 88,89,ம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பு முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய 12 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால் இந்த கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது அவர்களும் விடுவிக்கப்படவேண்டும்.

இதேவேளை சிறைக்கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். எமது வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுளார்கள்.பொது அமைப்புக்களும், மக்களும் ,பல்கலைக்கழக மாணவர்களும் பலவித போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இவையெல்லாம் தமிழ் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.

தமிழ் மக்களின் கருத்து, கைதிகள் தமிழர்களாக இருக்கிற காரணத்தினால்தான், அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறது என்பதாகும்.இது நல்லிணக்கதிற்கு பாதகமானது என்பதனையும் நாம் வலியுறுத்தினோம். இவை அனைத்தையும் கேட்டு ஜனாதிபதி அவர்கள் வருகிற வாரம் பிரதம மந்திரி, சட்டமா அதிபர், மற்றும் தேவையான அனைவரையும் அழைத்து இந்த விடயத்தை சாதகமாக அணுகி கைதிகளின் விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இக் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம், அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad