அவ்வப்போது, பரபரப்பான தகவல்களை வெளியிட்டு ஊடகங்களையும், அரசியலையும் பரபரப்பாக்குபவர்களில் ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாறியிருக்கிறார்.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், அவ்வப்போது அவர் முன்னைய பல இரகசியங்களை அவிழ்த்து விட்டிருந்தார்.
தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது, மருந்து நிறுவனங்கள், இலஞ்சம் வழங்க முற்பட்டமை, புகைப்பொருள் விற்பனை நிறுவனங்கள் தம்மை நீக்குவதற்கு அழுத்தங்களைக் கொடுத்தமை பற்றி அவர் முன்னர் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றிருந்தால், தான் கொன்று புதைக்கப்பட்டிருப்பேன் என்றும், ஜனாதிபதித் தேர்தல் நடந்த அன்றிரவு நண்பரக ஒருவரின் தென்னந்தோட்டத்துக்குள் மறைந்திருந்தமை பற்றியும் அவர் பேசியிருந்தார்.
அதுபோலவே, வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 60 சதவீதமான நிதி திருப்பி அனுப்பப்பட்டது என்றும் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டது என்றும் கூட அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்போது அவர் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயம், போரின் இறுதிக் கட்டம் பற்றியது.
“போரின் இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகள் கொழும்பைத் தாக்கி அழிவுகளை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். எல்லா உயர் மட்ட அரசியல், இராணுவத் தலைவர்களும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நான் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். நானும் கூட ஒரே இடத்தில் இருக்காமல் மாறி மாறி ஒளிந்து திரிந்தேன்” என்று அவர் நியூயோர்க்கில் வெளியிட்டிருக்கும் தகவல் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
போர்க்கால இரகசியம் என்ற பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கின்ற இந்த தகவல்கள், பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன சம்பந்தப்பட்டவர்கள் இதனை மறுத்தும் உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியங்களை அல்லது உண்மையை வெளியிடுவது என்ற பெயரில் பல்வேறு சந்தர்ப்பங்களில், அதிகம் பேசி மாட்டிக் கொள்கிறார் என்ற கருத்து, பொதுவாகவே அரசியல், ஊடக மட்டங்களில் காணப்படுகிறது.
வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 60 சதவீத நிதி திருப்பி அனுப்பப்பட்டது என்ற அவரது கருத்தும் அவ்வாறான ஒன்று தான்.
அண்மையில் முந்திரிப்பருப்பு விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுக்கூட்டத்தில் பேசியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அதற்கு எதிராக அவர் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்ற கேள்வியும் இன்னும் பலமாக எதிரொலித்தது.
ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு, அரசுக்கு சொந்தமான விமானத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்ட போது, அவர் தனக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு, விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். குறைபாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதனை விட்டு விட்டு, பொதுக்கூட்டத்தில் போய், நாய் கூட சாப்பிட முடியாத முந்திரிப் பருப்பைத் தந்தார்கள் என்று அவர் கூறியது, கடுமையான விமர்சனங்களுக்கு காரணமானது.
அது சுவாரஸ்யமான செய்தியாக இருந்தாலும், பொருளாதார முடையில் சிக்கியுள்ள ஒரு நாட்டின் பொறுப்புவாய்ந்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறையைப் பாதிக்கக் கூடிய இத்தகைய கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டது சரியா என்ற கேள்வியில் அதிக நியாயம் உள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை ஏற்கனவே நட்டத்தில் இயங்குகின்ற நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்து, அதன் மதிப்பை கெடுப்பதாகவே இருந்தது.
ஒரு உத்தரவின் மூலம் ஜனாதிபதி குறைபாட்டை நிவர்த்தி செய்திருக்க முடியும். அதனைச் செய்யாமல் பொதுவெளிக்கு அந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்ததன் மூலம், அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தாலும், நாட்டின் தேசிய விமான சேவைக்கு ஏற்பட்ட கறை நீங்கப் போவதில்லை.
இதுபோன்று பலவேளைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுக்குப் பின் முரணாகவும், வாய்க்கு வந்த படியும் பேசிக் கொள்வது அரசியலில் கூட அவருக்கு பல சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க, நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குள்ள இலங்கையர்கள் மத்தியில் வெளியிட்டிருந்த கருத்துகளும், அவ்வாறே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
போரின் இறுதி இரண்டு வாரங்களில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி ஜனாதிபதி பேசியிருந்தார்.
“போரின் இறுதி இரண்டு வாரங்களில், புலிகள் சென்னையில் இருந்து அல்லது காட்டுக்குள் இருந்து, விமானம் மூலம் கொழும்பில் தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதற்குப் பயந்து, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ, பிரதமராக இருந்த ரட்ணசிறி விக்ரமநாயக்க, பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோத்தாபய ராஜபக் ஷ, இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா எல்லோருமே, வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர்.
பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நான் தான் போரை வழி நடத்தினேன்” என்று கூறிருந்தார் ஜனாதிபதி. மேற்கூறிய அனைவரும் இறுதிப் போரின் போது நாட்டில் இருக்கவில்லை, இறுதிப் போரில் என்ன நடந்தது என்று இவர்களை விட எனக்குத் தான் அதிகமாகத் தெரியும், படையினரைக் காப்பாற்றுவதில் இவர்களை விட எனக்கு கூடிய அக்கறை உள்ளது- என்று காண்பிக்க முற்பட்ட ஜனாதிபதி தேவையின்றி, சில விடயங்களை வெளியிட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் இருக்கவில்லை என்பது உண்மை தான். அவர் அப்போது ஜோர்தானுக்குச் சென்றிருந்தார்.
அதுபோலவே, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சீனாவுக்குச் சென்றிருந்தார்.
ஆனால் ஜனாதிபதி கூறியிருந்தது போல, பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக் ஷ, வெளிநாட்டுப் பயணம் எதையும் அப்போது மேற்கொண்டிருக்கவில்லை. அவர் கொழும்பில் தான் தங்கியிருந்தார்.
ஜனாதிபதியின் கருத்து வெளியாகிய பின்னர், பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலும், கோத்தாபய ராஜபக்ச அதனைக் கூறியிருக்கிறார்.
அவர் மாத்திரமன்றி, பிரதமராக இருந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவும் கூட, போரின் இறுதி நாட்களில் இலங்கையில் தான் தங்கியிருந்தார். வேறெங்கும் செல்லவில்லை.
போர்க் காலகட்டத்தில் இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலிகளால் பலமுறை இலக்கு வைக்கப்பட்டார் என்பது உண்மை. அவர் தனது உயிருக்குப் பயந்து போரின் இறுதி நாட்களில் பல்வேறு இடங்களில் மறைந்திருக்கக் கூடும். ஆனாலும், எல்லோரும் ஓடி விட்டார்கள் என்று அவர் வெளியிட்ட தகவல்கள் மிகையானவை.
அதுபோலவே, சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்தனர் என்று ஜனாதிபதி கூறியிருந்த தகவலும் கூட, இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
அப்படி ஒரு தாக்குதல் திட்டம் பற்றி தாம் அறியவில்லை என்று கோத்தாபய ராஜபக் ஷ கூறியிருக்கிறார். சரத் பொன்சேகாவும் அதனைத் தான் சொல்லியிருக்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்குவது ஒன்றும் இலகுவான காரியமில்லை.
ஒருவேளை சில விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தப் புலிகள் திட்டமிடலாம் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக பாதுகாப்பை பலமான நிலையில் வைத்திருப்பதற்காக இத்தகைய எச்சரிக்கைகள் புலனாய்வுப் பிரிவுகளால் விடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால், அது ஒரு ஊகத்தின் அடிப்படையிலான எச்சரிக்கையாகவே இருக்கலாமே தவிர, அதனை திட்டம் என்று கூற முடியாது. திட்டத்துக்கும் ஊகத்துக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதி பேசியிருக்கிறாரா தெரியவில்லை.
சென்னையில் இருந்து விமானத்தைக் கடத்தியோ, அல்லது வேறு வழியிலோ கொழும்பின் மீது தாக்குதல் நடத்த இந்தியா அனுமதித்திருக்குமா- அத்தகைய ஒரு மோசமான பாதுகாப்பு நிலையில் தான் இந்தியா இருக்கிறதா- என்ற கேள்வி இங்கு எழுகிறது.
இறுக்கமான பாதுகாப்பை இந்தியா நடைமுறைப்படுத்தியிருந்த அந்தச் சூழலில், சென்னையில் இருந்து விடுதலைப் புலிகள் ஒரு விமானத் தாக்குதலை நடத்துவது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விடயம்.
இதையெல்லாம் ஒரு பெரிய விவகாரமாக்கி, அதற்கும் மஹிந்த ராஜபக் ஷ, சரத் பொன்சேகா ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுடன் முடிச்சுப் போட்டு, பரபரப்பை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி வெற்றி கண்டிருக்கிறார்.
ஆனால், அவரது இந்தக் கருத்துக்கள், பதில் பாதுகாப்பு அமைச்சராக, கடைசி நேரத்தில் நானே போரை வழிநடத்தினேன் என்பதில் உள்ள உண்மையின் வலிமையை குறைத்து விட்டன என்றே கூறலாம்.
இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரபரப்பான தகவல்களை வெளியிடுவது என்ற பெயரில் தனக்குத் தானே குழி வெட்டியிருக்கிறார்.
ஜனாதிபதி பொறுப்பு வாய்ந்த கருத்துக்களை வெளியிடுவதே புத்திசாலித்தனமானது. கண்ணை மூடிக் கொண்டு எதையும் பேச முனைந்தால், அது அவருக்கே கடைசியில் ஆப்பாக முடியும்.
ஜனாதிபதியின் நியூயோர்க் கருத்துக்களும் கூட அவ்வாறு தான் மாறியிருக்கிறது. இதனை விட, அவர் எதையும் பேசாமல் இருந்திருந்தால் கூட அவரது மதிப்பு காப்பாற்றப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment