தமிழர் தரப்பு செய்யவேண்டியது இதுதான் - சிவில் சமூகம் அறிக்கை - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 30, 2018

தமிழர் தரப்பு செய்யவேண்டியது இதுதான் - சிவில் சமூகம் அறிக்கை

"தமிழர்கள் தமக்கான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையினை குலைக்கும் இன்னுமொரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வுகளை நாம் நோக்குகிறோம்" என தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பிலான அறிக்கை வருமாறு:

26.09.2018 அன்று அரசியலமைப்பை மீறி சனாதிபதி சிறிசேன திரு. மகிந்த ராஜபக்ச அவர்களைப் பிரதமராக நியமித்ததமை  அரசியலமைப்புக் கலாசாரம் தொடர்பில் இலங்கையில் பொதுவாக நிலவும் மதிப்பற்ற போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் தமக்கான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையினை குலைக்கும் இன்னுமொரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வுகளை நாம் நோக்குகிறோம். சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு ஒரு பொருட்டல்ல. தாராண்மைவாத அரசியலமைப்பு சனநாயகம்  மூலமாக தமது வேணவாக்கள் எய்தப்படுவதில் உள்ள சிக்கல்களை இந்த வாரச் சம்பவங்கள் தமிழர்களுக்கு மீள ஞாபகப்படுத்துகின்றன.  

26.10.2018 அன்றைய நடவடிக்கைகள் சனவரி 2015இல் பெற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் 'மாற்றத்தை' அடியோடு புரட்டிப் போட்டுள்ளன. நாம் அன்று சொன்னது போல் சனவரி 2015இல் நடந்தது மாற்றமே இல்லை என்பது இன்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது. 'தேசிய அரசாங்கத்தால்' கட்டமைப்பு சார் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படாத சூழலில் இன்று தமிழர்களும் ஏனைய எண்ணிக்கையில் சிறிய சமூகங்களும் கூடுதல் பாதுகாப்பு நெருக்கடிகளை தாங்க வேண்டிய துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச சமூகம் இப்போதாவது தமிழ் சிவில் சமூகம் எச்சரித்து வரும் விடயங்கள்  மீது நேர்மையான கவனத்தை செலுத்தி இலங்கை தொடர்பான தமது கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டு பிரதான கட்சிகளுமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை தீர்மானிக்க முன்பதாக ஆதரவு வழங்கவிருக்கும் கட்சியிடம் தெளிவாக, பொதுப் பரப்பில், எழுத்தில் வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோரின் பட்டியலை வெளியிடுதல், நிபந்தனையின்றி  பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், எமது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளும் சமஷ்டி அரசியாமைப்பு அடிப்படையிலான தீர்வு போன்ற இன்னோரன்ன விடயங்களில் வாக்குறுதிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது சிங்கள கட்சிகளின் வாடிக்கையாயினும் எழுத்தில், பொது வெளியில் இவ்வாக்குறுதிகளை கேட்டுப் பெறுவதில் குறிப்பிடத்தக்களவு பெறுமதி உண்டு. இரகசிய உடன்படிக்கைக்கு இடமிருக்க கூடாது என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம்.  

அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் குமாரவடிவேல் குருபரன் 
இணைப் பேச்சாளர்கள்  
தமிழ் சிவில் சமூக அமையம்

No comments:

Post a Comment

Post Bottom Ad