மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தேசியத்தையும் குளிர்மைப்படுத்தும் - ஐங்கரநேசன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 1, 2018

மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தேசியத்தையும் குளிர்மைப்படுத்தும் - ஐங்கரநேசன்

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.

கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு இன்று (01.11.2018) அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

வடமாகாண சபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைவாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்மக்கள் இம்மாதத்தில் மரநடுகையை ஒரு சம்பிரதாயபூர்வமான சடங்காக அல்லாமல், உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்;பாடாக முன்னெடுக்கவேண்டியது அவசியம் ஆகும்.

இன்று உலகளாவிய ரீதியில் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையின் வறண்ட வலயமான வடக்கிலும் வெம்மையின் கொடுமையை நாம் தற்போது கூடுதலாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால் எமது எதிர்கால சந்ததியினரின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு  வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான வளியில் அதிகரித்துச் செல்லும் கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்குப் பெயரிலேயே ‘கார்’ என்று மழையின் பெயரைக்கொண்ட கார்த்திகை மாதமே மிகப்பொருத்தமான மாதமாகும் இம்மாதப் பகுதியிலேயே வடக்கு கூடுதலான மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. இந்தப் புவியியற் காரணிக்கும் அப்பால்இ ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினையும் கொண்டுள்ளது.

இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த வீர மறவர்களைக் கூட்டாக நினைவிற் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள்,  இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப்  போற்றிய பண்பாட்டு மரபையும் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு இனத்தின் வாழ்புலம, மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது சூழலியல் நோக்கிலும் தமிழ்த்தேசிய நோக்கிலும் சிறப்பான ஒன்றாகும்.

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை மரநடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும். சூழலியற்செயல் மாத்திரம் அல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும். ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும். எனவே இப்புனித கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்.

- இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad