பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு சுமூகமான முறையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின்போது உரிய தீர்மானத்தை எடுப்பதற்கும் பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையை தவிர்த்து செயற்படுவது தொடர்பிலும் அனைவரும் ஒருமைபாட்டிற்கு வந்தனர்.
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையை பயன்படுத்தியோ வாக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியமென்று ஜனாதிபதி அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டார்.
அத்தகைய நடவடிக்கை நாட்டின் புத்திஜீவிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாக அமையுமென்று தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தை மாற்றியமைப்பது போன்ற மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளும்போது நிலையியற் கட்டளைகளில் குறிப்பிட்டிருந்த போதிலும் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்ததுடன், அதை ஜனாதிபதி சபையினருக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment