மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, November 18, 2018

மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்!

அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது ஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராக நியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராக இருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள் அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவி மாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால் இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம் சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால் வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின் கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரை பதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே அப்பா பாடசாலைக்கு சென்றாராம்…..

ஜனாதிபதி அப்பா என்ற சதுரிகா சிறிசேனா வின் நூலில் இருந்து.


சூரன் போரிலன்று வழங்கப்பட்ட தீர்ப்பு சூரனுக்கு எதிராக அமைந்துவிட்டதென்று சந்தையில் ஒரு வர்த்தகர் சொன்னார். நடந்தது சூரன் போரல்ல அது முருகனுக்கும், சூரனுக்கும் இடையிலானதல்ல. அது சூரனுக்கும் சூரனுக்கும் இடையிலானது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் பி.பி.சி.க்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டியை பார்த்தால் தெரியும். இனப்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு அவர் வழுக்கி வழுக்கி பதில் சொல்கிறார். அவரிடம் துலக்கமான, திட்டவட்டமான பதில்கள் இல்லை. பெருமளவுக்கு நழுவிச் செல்லும் சமயோசிதமான பதில்களே உண்டு. அதாவது சிங்களக் கடும்போக்குவாதிகளை எதிர்த்து கொண்டு ஒரு தீர்வை முன் வைக்கும் அரசியல் திடசித்தம் அவரிடமும் இல்லை.

யாப்பு மீறப்பட்டதும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டதும் இதுதான் முதற் தடவை அல்ல. யாப்பு எப்பொழுது இன ஒடுக்கு முறையின் கருவியாக மாறியதோ அப்போதே அது அதன் புனிதத்தை இழந்துவிட்டது. இன ஒடுக்குமுறைதான் இலங்கை தீவின் ஜனநாயகத்தை சீரழித்தது. எனவே இன ஒடுக்கு முறைக்கு பரிகாரம் காணப்படும் போதுதான் ஜனநாயகம் செழிப்புறும், யாப்பும் மாண்புறும் அதல்லாத எல்லாச்சிறு வெற்றிகளும் மேலோட்டமானவை. தமிழ் மக்களை ஒடுக்கும் இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியை ஜனநாயக மீட்சிக்கான ஒரு புனிதப் போராக தமிழர்கள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரு பெரும் கட்சிகளும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை சூரர்கள்தான். அது சூரர்களின் நாடாளுமன்றம்தான். கடந்த வியாழனும் வெள்ளிக்கிழமையும் அதைத்தான் அவர்கள் அசிங்கமாக நிரூபித்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாகிய ஜயவர்த்தன ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை பிரயோகிக்கும் விதத்தில் யாப்பை மாற்றினார். தனக்கு கிடைத்த மிகப் பெரிய மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்தார். மக்கள் ஆட்சிக்கெதிராக ஒரு மன்னராட்சியை ஸ்தாபிக்கும் விதத்தில் யாப்பை மாற்றியமைத்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் செய்யத்தக்க அதிகாரங்கள் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு உண்டு என்று கூறினார். ஜயவர்த்தனவுக்குப் பின் வந்த அனைவரும் அந்த அதிகாரங்களைக் குறைப்பதாகக் கூறி வாக்குறுதியளித்தே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அரசனுக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்த பின் வாக்குறுதியை மறந்ததுடன் எப்படி அடுத்த தடவையும் அச்சிம்மாசனத்தில் அமர்வதென்று சிந்திக்க தொடங்கினர். பிறேமதாசவும் அப்படித்தான்;. சந்திரிக்காவும் அப்படித்தான். ஏன் மைத்திரியும் அப்படித்தான். ஆனால் மைத்திரியின் விடயத்தில் ஒரு சிறு வேறுபாடு உண்டு. ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை இழப்பதற்கு தயாராக 19வது திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் மூலம் அவர் உள்நாட்டிலும், உலக அளவிலும் எளிமையான, சாதுவான, பேராசைகள் அதிகமற்ற ஒரு தலைவராக காட்சியளித்தார். ஆனால் அது ஒரு பொய்த்தோற்றம் என்பதையே கடந்த 26ம் திகதி அவர் நிரூபித்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாது என்றாலும் அதில் அமர்பவரை அதிகாரப் போதையினால் பைத்தியம் ஆக்கிவிடும் சிம்மாசனம் அது என்பதற்கு அண்மை வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்.

ஜயவர்த்தனா தனது யாப்பைப் பல தடவைகள் திருத்தினார். அதனால் அந்த யாப்பைக் குறித்து விமர்சிப்பவர்கள் பின்வருமாறு கூறுவதுண்டு. அந்த யாப்பை நூலகங்களில் ஆவணப் பகுதிக்குள் தேடக் கூடாது. பருவ இதழ் பகுதிக்குள்தான் தேட வேண்டுமென்று. ஆனால் கடந்த 26ம் திகதிக்குப் பின் மைத்திரி யாப்பை ஒரு ரொய்லற் பேப்பர்- கழிப்பறைக் கடதாசி-ஆக மாற்றி விட்டார். முடிவில் நாடாளுமன்றமே ஒரு கழிப்பறை போலாகிவிட்டது.கடந்த வியாழனும் வெள்ளியும் அங்கு நடந்தவை கழிப்பறை அரசியல்தான், இப்பொழுது யாப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறிவிட்டது. மகிந்த வெற்றி பெரும் வரையிலும் மைத்திரி அளாப்பிக் கொண்டேயிருப்பாரா? வரும் 07ம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த யாப்பை பரிசுத்தப்படுத்துமா? இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை ரணிலும் அவருடைய நண்பர்களும் கொண்டாடுகிறார்கள். 07ம் திகதி கிடைக்கப் போகும் தீர்ப்பும் அவர்கள் கொண்டாடத்தக்கதாக அமைந்ததால் யு.என்.பியின் ஆட்சி தொடரக்கூடும. நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பது ரணிலுக்கு கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர் வென்றாலும் அவரால் ஒரு ஸ்திரமான ஆட்சியை தரமுடியாது என்பதுதான். மைத்திரி ரணிலை அகற்றுவதில் குறியாயிருக்கிறார் அவரை சுமுகமாக ஆட்சி செய்ய விடமாட்டார்.

மைத்திரியோடு சேர்ந்தியங்கிய கடந்த மூன்றரை ஆண்டுகால பகுதியிலும் ரணில் விக்கிரமசிங்க துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கவில்லை. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கெதிரான நிதி குற்றச்சாட்டுக்களை துரிதமாக விசாரித்து ராஜபக்ஷக்களை ஒரு வித முற்றுகைக்குள் அல்லது தற்காப்பு நிலைக்குள் தள்ள ரணிலால் முடியவில்லை. அல்லது அவர் விரும்பவில்லை.

ஆனால் அதேசமயம் ஐ.நாவிலும் உலக அரங்கிலும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களிலிருந்து அல்லது போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் விடயங்களை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். தமிழ் மக்கள் அனைத்துலக அளவிலான போர்க்குற்ற விசாரணை ஒன்றை கேட்கிறார்கள். ஆனால் ரணிலும், மைத்திரியும் சேர்ந்து அதை உள்நாட்டு விசாரணையாக சுருக்கி விட்டார்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களில் நீதிமன்றம் யாப்பைப் பாதுகாக்குமாக இருந்தால் அது இலங்கைத்தீவின் நீதிபரிபாலன கட்டமைப்பின் அந்தஸ்தை அனைத்துலக அளவில் உயர்த்தக் கூடியது. இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி விடும்.

ஜனாதிபதி யாப்பை மீறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்த தரப்புக்களில் கூட்டமைப்பும் ஒன்றாகும். கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் முகநூலில் கொண்டாடினார்கள். நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று யு.என்.பி, மனோகணேசன், முஸ்லீம் கட்சிகள் போன்ற தரப்புகளுடன் சேர்ந்து எவெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரிப்பது போல ஒரு தோற்றம் உருவாகும் பொழுது அது அனைத்துலக விசாரணைக்கான தமிழ் மக்களின் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும் என்பதை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கவனிக்கத்தவறி விட்டார்கள். இவ்வாறானதோர் பின்னணியில் வரும் 07ம் திகதி வரப்போகும் தீர்ப்பு தமிழ்த்தரப்பிற்கு எவ்வாறான புதிய வாய்ப்புக்களைத் திறக்கும்?

யு.என்.பி வென்றால் அது ஒப்பீட்டளவில் கூட்டமைப்பை விட விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் அதிகரித்த வாய்ப்புக்களை கொடுக்கும். ஏனெனில் யு.என்.பியின் வெற்றியைப் பொறுத்தவரை கூட்டமைப்பும் ஒரு பங்காளி. எனவே யு.என்.பியின் ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்வதில் அவர்களுக்கு வரையறைகள் இருக்கும். ஆனால் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் அதை செய்யலாம். அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். எதிக்கலாம். குறிப்பாக விக்னேஸ்வரன் ஒரு பலமான எதிரணியை கட்டியெழுப்புவாராக இருந்தால் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதன் மூலம் தனது ஆதரவு தளத்தை உறுதியாக கட்டியெழுப்பலாம்.

அதே சமயம் நீதிமன்றம் ரணிலுக்கு பாதகமான தீர்ப்பை வழங்கினால் தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கும். அது மகிந்தவுக்கே அதிகம் வாய்ப்பாக அமையும். ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் கொழும்பிலுள்ள படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ரணிலின் மீது அனுதாபம் அதிகரித்துள்ளது. ஆனால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த குடும்பந்தான் இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக போற்றப்படுகிறார்கள். எனவே ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளோடு ஒரு பலமான கூட்டை உருவாக்க வேண்டியிருக்கும்.

ஸ்திரமற்ற யு.என்.பி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை மட்டுமல்ல. உடனடிப் பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை போன்றவற்றில் கூட தீர்வுகளை காண்பது கடினம். மைத்திரியும், ரணிலும் ஒன்றாக இருந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் கொண்டுவரத் தவறிய தீர்வுகளை இனி எப்படிக் கொண்டு வருவது? எனவே யு.என்.பியோடு சேர்ந்திருப்பதனால் தீர்வையும் பெற முடியாது. அதே சமயம் இணக்க அரசியலுக்கெதிரான குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் மறு வழமாக மகிந்த ஆட்சிக்கு வந்தால் முழுப்பழியையும் இனவாதிகளின் மீது சுமத்தி விட்டு கூட்டமைப்பானது தமிழ் மக்கள் முன் வெறும் கையோடு வந்து நிற்கும். தனது அரை இணக்க அரசியலின் தோல்வி மற்றும் தான் என்றைக்குமே நடாத்தியிராத ராஜதந்திரப் போரின் தோல்வி போன்ற எல்லாவற்றுக்குமான பழியை அவர்கள் சிங்கள இனவாதிகள் மீது சுமத்துவார்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகத் தாங்களும் தலை கீழாக நின்று தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் ஆதரவு தளத்தை கூட்டமைப்பும் பங்கு போடும்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ் மிதவாத பாரம்பரியத்தில் எதிர்ப்பு அரசியல்தான் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் களங்களில் தமிழ் இனமான அலை எனப்படுவது அதிக பட்சம் எதிர்ப்பு அரசியல் தடத்திற்குரியதுதான். எனவே ஒப்பீட்டளவில் ரணில் வருவதை விடவும் மகிந்த வந்தால் கூட்டமைப்பிற்கு அனுகூலம் அதிகம். சில சமயம் மகிந்த ஓர் உறுதியான ஆட்சியை அமைப்பதன் மூலம் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைத் தர முடியும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தர முடியாது. ஏனெனில் அவர் தனது சொந்த வெற்றியின் கைதியாவார். ஆட்சிக்கவிழ்ப்பின் பின் அவர் நடத்திய கூட்டமொன்றில் பின்னணியில் காணப்படும் தேசியக்கொடியானது தமிழ் மக்களுக்குக் கூரான ஒரு செய்தியைத் தருகிறது. அக்கொடியில் சிறுபான்மை மக்களைக் குறிக்கும் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன.

எனவே மேற்கண்டவற்றை தொகுத்து பார்த்தால் கொழும்பில் இடம்பெற்று வரும் குழுப்பங்கள் எப்படிப்பட்ட திருப்பங்களை அடைந்தாலும் அதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. யாப்பை காப்பாற்றினோம். ஜனநாயகத்தை காப்பாற்றினோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஒரு மாய உலகத்துள் உழழ்வதை விடவும் இலங்கை அரசுக்கட்டமைப்பை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தக்கூடிய ஒரு தருணமாக இதைப் பயன்படுத்த வேண்டும். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி அப்படிப்பட்ட ஓர் அனைத்துலக அபிப்பிராயத்தை உருவாக்கலாம். இந்த யாப்புக்குள் நின்று ஒரு தீர்வைப் பெற முடியாதென்பதற்கும் சிங்கள தலைவர்களை ஏன் நம்பக் கூடாதென்பதற்கும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஒரு மூன்றாம் தரப்பின் தலையீடின்றி இலங்கை தீவில் மூன்று சமூகங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைப் பெற முடியாது என்பதற்கு நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். நிலைமாறு கால நீதியை ஏன் இலங்கைத்தீவில் வெற்றிகரமாக ஸ்தாபிக்க முடியாது என்பதற்கும் நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

இலங்கைத்தீவின் அரச கட்டமைப்பையும், யாப்பு பாரம்பரியத்தையும் நாடாளுமன்ற பாரம்பரியத்தையும் மிளகாய்த் தூள் ஜனநாயகத்தையும் அம்பலப்படுத்துவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தத்தக்க தமிழ்த் தலைவர்களே தேவை. இன ஒடுக்கு முறையிலிருந்தே இலங்கைத் தீவின் ஜனநாயகப் பரம்பரை சீரழியத் தொடங்கியது என்பதை எடுத்துக் கூறத்தக்க தமிழ் தலைவர்களே இப்பொழுது தேவை. இரண்டு சூரர்களுக்கிடையில் ஒரு சூரனை முருகனாக்கும் அல்லது மண்டேலாவாக்கும் அரை இணக்க அரசியலானது வெற்றி பெறப் போவதில்லை. இரண்டுமே சூரர்கள்தான் என்று உலக சமூகத்திற்கு எடுத்துக்கூறவல்ல தலைவர்களே இப்பொழுது தேவை. அப்படிப்பட்ட தலைவர்கள் அரங்கில் யார் உண்டு?

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து போன தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொன்னார். ஈழத்தில் ஒரு தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகிறதென்பதே அது. விக்னேஸ்வரனையும் முன்னால் வைத்துக் கொண்டே அவர் அதைச் சொன்னார். மேற் சொன்ன காரியங்களை செய்யத்தக்க அரசியல் திடசித்தமும், தீட்சண்ணியமும் தீர்க்கதரிசனமும் மிக்க ஒரு தலைவரே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad