அரசமைப்பை பாதுகாக்க ஒன்றுபடுமாறு சம்பந்தன் உட்பட கட்சித்தலைவர்கள் அழைப்பு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, November 3, 2018

அரசமைப்பை பாதுகாக்க ஒன்றுபடுமாறு சம்பந்தன் உட்பட கட்சித்தலைவர்கள் அழைப்பு!!

மஹிந்த ராஜபக் ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட் டமை அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானதா கும். அத்தோடு சபாநாயகருடன் கலந்துரையாடாமல் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை தவறானதாகும் எனவே பாராளுமன்றத்தை உடனடி யாக கூட்ட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அங் கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
தனியொரு நபரையோ அல்லது தனியொரு கட்சி யையோ பாதுகாப்பதல்ல எமது நோக்கம். மாறாக நாட் டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பினைப் பாது  காப்பதே எமது ஒருமித்த நோக்கமாகும் என்றும் அவர்  கள் சுட்டிக்காட்டினர். 
சபாநாயகர் கருஜயசூரியவை ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பின்போதே சகல கட்சிகளின் தலைவர்களும் இந்தக்கோரிக்கையை முன்வைத்தனர். 
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சபாநாயகர் கருஜயசூரிய கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியிருந்தார்.
இதனையடுத்து ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் அவரை சந்தித்துபேசியிருந்தனர். இந்த நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கைவிடுத்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் நேற்று சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதனடிப்படையிலேயே நேற்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை ஆசனங்களில் அமர்ந்திருந்ததுடன், 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
இங்கு கட்சிகளின் தலைவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
லக்ஷ்மன் கிரியெல்ல
இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலத்தில் இரண்டு முக்கிய தவறுகளை இழைத்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மஹிந்த ராஜபக்ஷவை அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமராக நியமித்தமை முதலாவது தவறு. அரசியலமைப்பின்படி சபாநாயகருடன் கலந்துரையாடியதன் பின்பே பாராளுமன்றத்தினைப் பிற்போட முடியும். பாராளுமன்றத்தைப் பிற்போடும் அறிவிப்பினை சபாநாயகரே மேற்கொள்ள வேண்டும். எனினும் அவற்றுக்கு முரணான வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்துள்ளமை இரண்டாவது தவறாகும். வரலாற்றின்படி சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரின் வேண்டுகோளின்படி செயற்பட வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் தீர்க்கமானதொரு முடிவினை மேற்கொள்வது சபாநாயகர் வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் என்றார். 
இரா.சம்பந்தன்
 எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இங்கு கருத்துக்கூறுகையில் நாடு பாரியதொரு அரசியலமைப்பு சார்ந்த நெருக்கடி நிலையினை எதிர்நோக்கியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். ஜனாதிபதிக்கு பிரதமரைப் பதவி விலக்கும் அதிகாரம் இல்லை. எனவே தற்போது பிரதமர் பதவி நீக்கப்பட்டமையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தனியொரு நபரைப் பாதுகாப்பதல்ல எமது நோக்கம். நாட்டின் அரசியலமைப்பினைப் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். அதற்காகவே நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். விரைவில் பாராளுமன்றம் கூட்டப்பட்டு தற்போதைய குழப்பநிலைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரினார். 
ரவூப் ஹக்கீம்
கட்சித்தலைவர்கள் கையளித்த கடிதத்திற்கு இணங்க விரைவாகப் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டில் முதற்தடவையாக இவ்வாறானதொரு அரசியமைப்பு சார்ந்த நெருக்கடிநிலை தோன்றியுள்ளது. அதுவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தத்தக்க வகையில் இந்நெருக்கடி எழுந்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தன்மை மற்றும் எமக்குள்ள உரிமை என்பன மீறப்பட்டுள்ளன. எனவே பாரா??மன்றம் கூட்டப்பட்டு இவற்றுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போதும் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தேன் என்று இங்கு உரையாற்றிய முஸ்லிம காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்;.
மனோகணேசன்
இங்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தற்போதைய சுழ்நிலையில் பாராளுமன்றத்தை விரைந்து கூட்டுவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் வரலாற்றில் முன்னிலை பெறும் வாய்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. நாட்டில் இதுவரை காலமும் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் முரணாக செயற்பட்டு ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்கு எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே தற்போது ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனத்தினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.  
அரசியலமைப்பினைப் புறந்தள்ளியுள்ளமை, பாராளுமன்ற அமர்வுகள் பிற்போடப்பட்டுள்ளமை, புதிய அமைச்சரவை நியமனம் என்பவற்றையும் அங்கீகரிக்க முடியாது. எனவே உயர்வான ஜனநாயகக் கோட்பாடுகளையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். அத்தோடு நடுநிலைமை வகிப்பதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இன்னமும் தமது நிலைப்பாட்டினை அறிவிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கா? ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 
ரிஷாட் பதியுதீன்
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். ஜனாதிபதியால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினையே நாம் கொண்டுள்ளோம் என்று இங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.
வே.இராதாகிருஷ்ணன்
இங்கு கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதா கிருஷ்ணன் இன்றைய தினம் இங்கு பெரும்பான்மையானோர் கூடியுள்ளனர். வெவ்வேறு விருப்பங்கள், கொள்கைகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் தற்போதைய நிலையில் நாட்டின் ஜனநாயத்தன்மையினைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரினதும் ஒருமித்த கருத்தாக உள்ளது. அரசியலமைப்பு சதியின் மூலம் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டது முதல் நாட்டில் இடம்பெற்று வருகின்ற அனைத்து செயற்பாடுகளும் சட்டவிரோதமானவை ஆகும்.
மஹிந்த ராஜபக்ஷவிற்கும் புதிய நியமனம் பெற்றுள்ள அமைச்சரவைக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகள் புதிய அரசாங்கத்தின் ஆணைகளை செயற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
விஜித ஹேரத
இதன்போது அவையிலிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பது தொடர்பிலும், பாராளுமன்றம் விரைவாகக் கூட்டப்பட வேண்டும் என்பது குறித்தும் எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் உறுதியாக இருக்கின்றோம். புதிய பிரதமரை நியமிப்பது, பிரதமரை நீக்குவது அனைத்தும் பாராளுமன்றத்தின் ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டும். எனவே இச்செயற்பாட்டிற்கு நாம் எதிர்ப்பு வௌியிடுகின்றோம். அத்தோடு பாராளுமன்ற அமர்வுகள் பிற்போடப்பட்டமை தவறானது என்பதுடன், ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். எனவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
சஜித் பிரேமதாச
அதனைத் தொடர்ந்து அவையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வௌியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,
நாட்டின் மிகமோசமான வகையில் ஜனநாயகக் கொள்கைகள் மீறப்பட்டுள்ளன. எனவே ஜனநாயகத்திற்கு முரணாக இடம்பெற்றுவரும் செயற்பாடுகளைப் பாராளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கான இறுதித்தீர்வு பாராளுமன்றத்தின் வசமே உள்ளது. 113 பேர் ஆதரவளிப்பார்களாயின் அது பெரும்பான்மையாகக் கொள்ளப்படும். தற்போது இங்கு 113 பேருக்கும் அதிகமாக 118 பேர் வரையில் கூடியுள்ளனர்.
பாராளுமன்றத்தின் சுயாதீனத்துவம் மற்றும் மக்களின் சுதந்திரம், உரிமை என்பவற்றினைப் பாதுகாப்பது சபாநாயகரின் கடமையாகும். எனவே இப்பிரச்சினையை பாராளுமன்றத்தின் மூலமாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது அரசியலமைப்பிற்கு முரணாக இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை முறியடிப்பது ஒன்றே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நோக்கமாக உள்ளது என்றார்.
மங்கள சமரவீர
இங்கு உரையாறறிய பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நாட்டில் காணப்படும் பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த சிக்கல் நிலையினால் ஒட்டுமொத்த நாடும் பொருளாதார ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படும். ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தற்போது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. வௌிநாடுகளுக்கு மீளச்செலுத்த வேண்டிய கடனளவை நிர்ணயிப்பதில் குழப்பங்கள் ஏற்படும். அத்தோடு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட ஒருநாளிலேயே பெருமளவு நிதி நாட்டை விட்டு வௌிப்பாய்ச்சல் அடைந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்த போது ஒரு நெல்சன் மண்டேலாவை நியமிக்கின்றோம் என்றே நினைத்தோம். ஆனால் அவர் இத்தனை மோசமாக நடந்துகொள்வார் என எதிர்பார்க்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். 
ஜோன் அமரதுங்க
எதிர்வரும் 7ஆம் திகதியன்று பாராளுமன்றத்தினைக் கூட்டுவதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு உறுதியளித்துள்ள போதிலும் இன்னமும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை. ஆனாலும் இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது. அதேபோல் வர்த்தமானி அறிவித்தலுக்காகக் காத்திருக்க முடியாது. எனவே கட்டாயமாக எதிர்வரும் புதன்கிழமையன்று பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று இங்கு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்
நவீன் திஸாநாயக்க
தற்போது சில அரச ஊடகங்கள் சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படுவதாக அவதூறு பரப்புவதற்கு முற்பட்டு வருகின்றன. ஊடகங்கள் தவறான பரப்புரைகளை மேற்கொள்வதனை நிறுத்த வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமையவே சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
118 பேர் பிரசன்னம்

 பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 118பேர் பிரசன்னமாகியிருந்தனர். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றிக் கோஷங்களை எழுப்பியதுடன், பாராளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை உள்ளது என்றும், தம்மால் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்றும் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad