அரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன? விரிவான தகவல்களுடன் தவராசா! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, June 22, 2020

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன? விரிவான தகவல்களுடன் தவராசா!

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும் பல தகவல்கள் தொடர்பில் கூறுகின்றார்.

மேலும் அந்த செவ்வியில்….

1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் என்ற அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கான நீர்வேலி வங்கிக் கொள்ளை இரட்டைக் கொலை வழக்கிலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கு வரை கடந்த 40 ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்காண அரசியல் கைதிகளுக்காக வாதாடிவரும் வாதாடிவருபவருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலையில் தற்கால நிலைபற்றிய ஒரு நேர்காணல்

கேள்வி : 2020ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி அரசியல் கைதிகளின்விடுதலை தொடர்பான விபரங்களை ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரனும் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடம் கையளித்துள்ளனர். இதனால் அரசியல் கைதிகள் பொதுத் தேர்தலுக்கு முன்னர் விடுதலையாகும் சாத்தியமுண்டென எண்ணுகிறீர்களா?

பதில் : அரசியல் விவகாரங்களில் முக்கியமான ஒன்று, சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாமிலும் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் பற்றிய விடயமாகும். இவ்விடயத்தில் தோ்தல்கள் வரும் பொழுது தேசிய கட்சிகள் பலவாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தலின் மூலம் பதவிக்கு வந்தபின்னர் அப்படிக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதும் வழமையான செயல்பாடுகளே . அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் மாறி மாறி ஆட்சிக்குவந்த அரசுகள் இதனையே செய்தன.

பயங்கரவாத, அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாமிலும் நீண்ட காலங்களாக வாடும்அரசியல் கைதிகளின் விடயங்களைப் பொறுத்தவரை அவ்விவகாரம் தேர்தல் காலங்களில் அரசியலாக்கப்படுகின்றதே தவிர,அதில் சட்டம் தனது கடமையைச் செய்வதாகத் தெரியவில்லை

இந்தக் கைதிகளுக்கு எதிராக தேவையற்ற கால தாமதம் செய்யாமல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் கைதிகள் குற்றவாளியாகக்காணப்பட்டு கைதிகளுக்கு அதி உச்ச தண்டணை வழங்கப்பட்டிருந்தால் கூட தண்டனைக் காலம் முடிவுற்று கைதிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை ஆகியிருப்பர் என்பதுடன் பேச்சுவார்த்தையும் அவசியமற்றதாயிருக்கும். ஆனால் இந்தக்கைதிகளின் விடயத்தில் வேண்டுமென்றே காட்டப்படும் நீண்டகால தாமதத்துக்கு அரசியல் தலைமைத்துவங்களின் இலக்கு வைக்கப்பட்ட நோக்கங்களா அல்லது இக் கைதிகள் தமிழர்கள்என்பதாலா?என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம்ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்கள் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசியகூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டநிலையில், தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது பேச்சுவார்தை நடத்தி தற்பொழுது சிறையிலும் தடுப்புக்காவலிலும் தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும், மற்றும் விளக்கமறியல் கைதிகள் என சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதையோ எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறில்லாமல் விதிவிலக்காக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களாயின் வழமை போலவழக்குத் தாக்கல் செய்ய எந்த வித சான்றுகளும் இல்லாத விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சில கைதிகளும் மேல் நீதி மன்றில்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் அரசியல் கைதிகளில் சட்டமா அதிபரினால் கைதிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லாத சிலகைதிகளின் வழக்குக்களையும் நீதிமன்ற விசாரணையிலிருந்து மீளப்பெற்று ஒரு சில கைதிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவர் .

கேள்வி: தற்பொழுது சிறைச்சாலையில் எத்தனை அரசியல்கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்? இந்த அரசியல் கைதிகள் எத்தனை ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்?

பதில்: சிறைச்சாலைகளில் 90 அரசியல் கைதிகளும் மகர தடுப்புமுகாமில் ஒரு அரசியல் கைதியுமாக மொத்தம் 91 கைதிகள் அடைத்தும் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளதுடன் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 11 ஆண்டு தொடக்கம் 12, 13,17, 20, 24, 24, ஆண்டுகள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: 91 அரசியல் கைதிகளில் எத்தனை கைதிகள் வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தண்டனையை அனுபவிப்பவர்கள்?

பதில்: மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்கள் மொத்தம் 46 கைதிகள். இவர்களில் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் உயர்நீதிமன்றிலும் மேன்முறையீடு செய்த 29 கைதிகளின் மேன்முறையீடுகளின் இறுதித் தீர்ப்புக்கள்மேல் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்களை ஒப்புறுதிப்படுத்தி அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. மிகுதி 17 கைதிகளினதும் மேன்முறையீடுகள் விசாரணையில் உள்ளன.

கேள்வி: 91அரசியல் கைதிகளில் தண்டனை வழங்கப்பட்ட 46 கைதிகளுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுள்ளன?

பதில் : 2 கைதிகளுக்கு மரணதண்டனை, ஒரு கைதிக்கு இரட்டை மரணதண்டனை, 12 கைதிகளுக்கு ஆயுள் தண்டனை, உட்பட 10 வருடத்திலிருந்து 20, 30,60,,200 வருடங்களிலிருந்து 600 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: தற்பொழுது தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் 91 கைதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டக்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களா?

பதில் : பயங்கரவாத அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான அரசியல் கைதிகள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்களும் சூழ்நிலை கைதிகளுமாவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டவர்களில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட முக்கிய வழக்குகளான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொலை முயற்சி வழக்கு பாதுகாப்புச் செயளாளர் கோட்டபாய ராஜபக்ஸ கொலை முயற்சி வழக்கு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொலை முயற்சி வழக்கு, கலதாரி ஓட்டல் குண்டு, புறக்கோட்டை பஸ் குண்டுவெடிப்பு, வெடிப்பு வழக்கு மேஜர் முத்தலிப் கொலை வழக்கு, லெப்டினட் ஜெனரல் பாரமி குலதுங்க கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கைதிகள் எனது வாதத்தின்பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்பொழுது தடுத்து வைத்து வழக்கு விசாரணை நடைபெயுறும் 38 கைதிகளில் சில கைதிகளுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பினும் கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்களில் கைதிகளால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் மட்டுமே அதிகமான வழக்கக்களில் அரச சான்றாக குற்றறச் சாட்டுப்பத்திரத்தில் முன்வைக்கபபட்டுள்ளது குறிப்பித்தக்கது.

கேள்வி: எத்தனை கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றுகளில்வழக்கு விசாரணை நடைபெறுகின்றது?

பதில்: நாட்டிலுள்ள பல மேல் நீதிமன்றங்களில் 35 அரசியல் கைதிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 7 ஆண்டுகளின் பின்னர் 2017 ஆம் ஆண்டு தை மாதம் 13ம் திகதி குலேந்திரன், ராஜ்மதாஸ், அஜந்தா என்ற மூவரும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தவழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் முக்கிய அரச சாட்சியாக குற்றச்சாட்டுப்பத்திரத்தில் சட்ட மா அதிபரினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த மூன்று கைதிகளுடன் மொத்தமாக 38 கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் நடைபெறுகின்றது.

கேள்வி: நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் இன்றி விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சோ்ந்தவர்கள் என சந்தேகத்தில் எத்தனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?

பதில்: நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்ட கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு பல கைதிகளை விசாரணையின் பின்னர் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்தது. சில கைதிகள் வழக்கு விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை அனுபவிக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிபயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசாரினால் வைத்தியர் எஸ்.சிவருபன் கைது செய்யப்பட்ட பின்னர் மேலும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து மொத்தமாக ஆறு கைதிகள் மட்டுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடைபெறுவதாக பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

கேள்வி : 2015 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் 217 அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் நல்லாட்சி அரசினால் 109 அரசியல் கைதிகள் குறித்த பொறிமுறை மூலம் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றதே. உண்மையில் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்களா?

பதில்: அரசியல் கைதிகளில், மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கைதிகளோ அல்லது விசாரணை முடிவடைந்து தண்டனை வழங்கப்பட்ட கைதிகளோ பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலை செய்யப்படவில்லை. வழக்குத் தாக்கல் செய்ய எந்த வித சான்றுகளும் இல்லாத விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சில கைதிகளை மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர்.

காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எனத் தன்னை அழைத்துக்கொண்ட அரசு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்து விட்டு 2015 ஆம் ஆண்டு தோ்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதான நாடகத்தில் ஒரு பகுதியாகவழக்குத் தாக்கல் செய்ய எந்த வித சான்றுகளும் இல்லாத விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சில கைதிகளைதவித நிபந்தனைமின்றி நீதவான் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டனர்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 69 அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு 39 அரசியல் கைதிகளே 2015 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11 ஆம்மற்றும் 15 ஆம் திகதிகளில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 39 அரசியல் கைதிகளில் 25 அரசியல் கைதிகள்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ,14 கைதிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட கைதிகள் இன்றும் நீதிமன்றம் வந்து செல்கின்றனர்.

கேள்வி : 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது 217 அரசியல்கைதிகளில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் பிணையிலும், புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டும் விடுதலை செய்யப்பட்டார்கள் எனில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு மேல்நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு மேல் நீதிமன்றில்விசாரணைகள் நடைபெறும் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்பட்டனரா?

பதில் : பயங்கரவாத அவசரகால சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு கைதி கூட பேச்சுவார்த்தைகளினால் விடுதலை செய்யப்படவில்லை.

கேள்வி : மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவுற்று தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் எவரும் ஜனாதிபதி்களினால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவில்லையா?

பதில் : (1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்குக்களில் மரண தண்டனை வழங்கப்பட்ட குட்டிமணியின்தண்டனையை ஜனாதிபதி ஜே:ஆர் ஜயவர்த்தன ஆயுள் தண்டனையாகமாற்றினார். பின்னர் 1983 ஆம் ஆண்டு இனவழிப்பு நடைபெற்ற பொழுது 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்படும் பொழுது குட்டிமணியும் வெலிகட ; சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் சட்டரீதியற்ற மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

(2) 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை 10 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச ஒரேயொரு அரசியல் கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

20 வருடகடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஊடகவியலாளரான திசநாயகத்துக்கே அந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, அவர் விடுதலையின் பின்னர் அமொிக்காவில் வசித்துவருகின்றார். இந்தக் கைதிக்காக நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

(3) இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது எனக்கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால , தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றால் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

(4) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒரு தமிழ் அரசியல் கைதிக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவில்லை. ஆனால் யாழ்ப்பாணம். மிருசுவிலில் மூன்று சிறுவர் உட்பட எண்மர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட கைதியான கோப்ரல் ரத்னாயவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். அவ்வாறுஅவர் தண்டனை வழங்கப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்வாரா?

கேள்வி: அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கானஎவ்வாறான பொறிமுறைமைகள் கையாளப்பட வேண்டும்?

பதில் : 1996 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருப்பதால், எப்போது தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் அரசியல் கைதிகளை மூன்று விதமாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்

(1) தண்டனை வழங்கப்பட்ட அரசியல் கைதிகள்

(2) மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றக்கொண்டிருக்கும் கைதிகள்

(3) விசாரணைக்காக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள்

ஏனெனில் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் மட்டும் சகல அரசியல் கைதிகளையும் பிரதமர் சட்டரீதியாக விடுதலை செய்யமுடியாது. நிறைவேற்றுத்துறை, சட்டமாக்கல்துறை ,மூன்றாவதாக நீதித்துறை ஆகிய மூன்றுதுறைகளும் இணைந்து அரசியல் ரீதியான முடிவை எடுப்பதன் மூலமேதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ,மேல் நீதிமன்றில் வழக்குநடைபெற்றக் கொண்டிருக்கும் கைதிகள் மற்றும் விளக்க மறியலில்வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் என சகலரையும் விடுதலை செய்வது சாத்தியமாகும்.

(1) மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்கள் மொத்தம் 46 கைதிகள். இவர்களில் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் உயர்நீதிமன்றிலும் மேன்முறையீடு செய்த 29 கைதிகளின் வழக்குகளில் தீர்ப்புக்கள் அரசுக்கு சாதகமாக அமைந்தன. மிகுதி 17 கைதிகளினதும் மேன்முறையீடுகள் இன்னும்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தண்டனை வழங்கப்பட்ட கைதிகளைகளையும் தண்டனையின் பின்னர் மேன் முறையீடுகளை தாக்கல் செய்த கைதிகளையும் விடுதலை செய்வதானால் ஜனாதிபதி மட்டுமே அரசியலமைப்பின் பிரகாரம் பொது மன்னிப்பு வழங்கிவிடுதலை செய்யலாம்.

வேறு எவ்வழியிலும் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நீதித்துறைக்கோ அல்லது நிர்வாகத்துறைக்கோ சட்டரீதியான அதிகாரம் இல்லை.

(2) நாட்டிலுள்ள மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 38 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாயின் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறும் வழக்குகளின் குற்றச்சாட்டுப்பத்திரங்கள் சட்டமா அதிபரினால் மீளப்பெறப்படும் பொழுது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படலாம்

(3) 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி பயங்கரவாதத்தடைப் பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட வைத்தியர்எஸ்.சிவரூபன் ,நகுலன், தனஸ்வரன், கிருஸ்ணராஜா, ஜதூசன, மற்றும் நிர்மலராஜ் ஆகிய ஆறு கைதிகள் விளக்க மறியலில்வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர் . இந்தக் கைதிகளுக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்தவில்லையென பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசரர் நீதிமன்றுக்கு அறிவிப்பதன் மூலம் இந்த விளக்கமறியல் கைதிகள் நீதிமன்றால் விடுதலை செய்யப்படலாம். எனவே அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டால் மட்டுமே சகல கைதிகளினதும் விடுதலை சாத்தியமாகும்.

அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் பொழுது அந்தப் பேச்சுவார்தையில் அரச தரப்பில் அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்த சட்டமா அதிபர் அல்லது அவர் சார்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி கலந்து கொள்வார்.

அரசியல் கைதிகள் சார்பில் பேச்சு வார்த்தையில் பங்குபற்றும்தரப்புக்கு அரசியல் கைதிகளான 91 கைதிகளினதும் வழக்குக்கள் சம்பந்தமாகவும் எவ்வைகையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் யாவை, என்னென்ன தண்டனைகள் விதிக்கப்பட்டன, என்ற விடயத்திலும் , நடைபெற்ற மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற வழக்குக்களின் முழு விபரமும், குற்றவியல் சட்டஅறிவும் , கைதிகளின் வழக்குகளில் வாதாடிய அனுபவமும் மிகவும்முக்கியமானதாகும்.

இவ்விடயங்களில் குற்றவியல் சட்டத்தில் அறிவும் அனுபவமும் உள்ளசட்டத்தரணிகள் உள்வாங்கப்பட வேண்டும் .

மேற் கூறப்பட்டுள்ள பொறிமுறைகளைச் சரியான முறையில்கையாளவில்லையெனில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது போல குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்ய போதிய சான்றுகளின்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளையும் மேல்நீதிமன்றில் விளக்கம் நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் அரசதரப்பால் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத நிலையில் நீதிமன்றினால் விடுதலையாகயிருக்கும் சில கைதிகளை மட்டுமே விடுதலை செய்யப்படுவார்கள். இதனால் மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் தான் என்ற நிலையே ஏற்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad