ராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்: கலாநிதி தயான் ஜயதிலக விசேட செவ்வி DAYAN - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, December 31, 2020

ராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்: கலாநிதி தயான் ஜயதிலக விசேட செவ்வி DAYAN

 


“எம்.சி.சி.விடயத்தை லக்ஷ்மன் கதிர்காமரும், ஜெனிவா விடயத்தினை அன்ரன்பாலசிங்கமும், நீலன் திருச்செல்வமும் உயிருடன் இருந்திருந்தால் முரண்பாடுகளின்றி யதார்த்தத்தின் அடிப்படையில் கையாண்டிருப்பார்கள்”

இறைமையானது உலக சட்டங்களை கடந்து மன்னர்களுக்கு நிகரான சர்வவல்லாதிக்கத்தை வழங்குவதாக கருதிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷாக்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் யதார்த்தம் புரியும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான(ஜெனிவா) முன்னாள் நிரந்தரவதிவிடப் பிரதிநிதியும், இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயதில வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்தார். அந்தச் செவ்வியின் முழுமையாக வருமாறு, 


கேள்வி:- மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகையில் உங்களுடைய பார்வை எவ்வாறுள்ளது?


பதில்:- தேசப்பற்றாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், எம்.சி.சி.ஒப்பந்தம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தமையால் அமெரிக்காவால் தம்மை அடிபணிய வைக்க முடியாது போய்விட்டது என்று மார்பு தட்டுகின்றார். 

பிறிதொரு தரப்பினர் நாட்டை முன்னேற்றுவதற்காக கிடைத்த அரியவாய்ப்பொன்று அற்றுப்போய்விட்டதாக கதறுகின்றனர். இரண்டு தரப்புக்களுமே முட்டாள்த்தனமான பிரதிபலிப்புக்களையே செய்கின்றார்கள். 

எம்.சி.சி.என்பது சீனாவுடன் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள போட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதொரு மூலோபாயத்திட்டம் என்ற புரிதல் மேற்படி ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்பில் உள்ளவர்களில் எத்தனை போர் அறிவார்களோ தெரியவில்லை. 

விடயமொன்றை ஆராயாது முழுமையாக கட்டியணைத்து ஏற்றுக்கொள்ளுதல் இல்லாவிட்டால் அதனை முழுமயாக உதறித்தள்ளுதல் போன்ற வெட்டொன்று துண்டு இரண்டு என்ற அணுகுமுறையே ஆட்சியாளர்களிடமும் எதிர்க்கட்சியினரிடமும் தாராளமாக காணப்படுகின்றது. 

மக்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்பதை உணராது, எம்.சி.சி.விடயம் தவாறாக கையாளப்பட்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கையை முறையாக மீளாய்வுக்கு உட்படுத்தி சர்ச்சைக்குரிய விடயங்களை தவிர்த்து ஏனையவற்றை ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் அதற்குரிய முயற்சிகளோ, அணுகுமுறைகளோ முறையாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.


கேள்வி:- எம்.சி.சி. உடன்படிக்கையில் இலங்கை பங்கேற்காமையானது, அமெரிக்கவுடனான உறவில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்களா?


பதில்:- சமகால நிலைமைகளை அவதானிக்கின்றபோது, இலங்கை வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலையாக இல்லை. எம்.சி.சி. உடன்படிக்கையால் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு ஆபத்து உள்ளது என்று கூறி இணக்கப்பாட்டை தெரிவிப்பதற்கு காலத்தை இழுத்தடித்மையாலேயே அமெரிக்கா இலங்கையுடன் பணியாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றது. 

இங்கு நாட்டின் சுயாதீனத் தன்மையை முதன்னைப்படுத்தி உடன்படிக்கையிலிருந்து விலகி நிற்பதாக காண்பித்துவிட்டு மறுபக்கத்தில் சீன சார்பு நிலைப் போக்குகளை அதிகளவில் வெளிப்படுத்துவதானது அமெரிக்காவுக்கு நிச்சயமாக கோபத்தினை ஏற்படுத்தும். அதன் காரணமாக, அமெரிக்காவும் அமைதியாக இருக்காது வெவ்வேறு தளங்களில் தனது பிரதிபலிப்புக்களைச் செய்வதற்கே முயலும்.

இந்த விடயத்தினை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உயிருடன் இருந்திருந்தால் மிகச் சாணக்கியமாகச் செயற்பட்டு இலங்கை, அமெரிக்க உறவுகளில் விரிசல்கள் ஏற்படாதவாறு துல்லியமான முடிவுகளை எடுத்திருப்பார். 

அதற்காக, இவ்விதமான விடயங்களை கையாள்வதில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன திராணியற்றவர் என்று அர்த்தப்படுத்த முனையவில்லை. அவர் வெறுமனே பெயரளவிலான வெளிவிவகார அமைச்சரே. இத்தகைய விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதியும், அவரைச் சூழவுள்ள முன்னாள் படையதிகாரிகள் குழுவினருமே கையாள்கின்றனர். 

அவர்களுக்கு வெளிவிவகார கொள்கைகள், இருதரப்பு உறவுகள், இராஜதந்திர, மூலோபயங்கள் தொடர்பில் எவ்விதமான அனுபமும் கிடையாது. ஆகவே அத்தகையவர்கள் விளைவுகளை உணராது இவ்வாறு தான் பிரதிபலிப்பார்கள். இது நாட்டின் துரதிஷ்டம் தான்.


கேள்வி:- இலங்கை தொடர்பான எம்.சி.சி.யின் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியான அதேதினத்தில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை சந்தித்து எதிர்வரும் மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடர் பற்றி பேசியிருக்கின்றார். இந்த நகர்வை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?


பதில்:- ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் நிலைப்பாட்டிற்கு எம்.சி.சி.விடயமும் ஒருகாரணமாக இருக்குமே தவிர அதுதான் முதற்காரணியாக அமையப்போவதில்லை. இம்முறை அமெரிக்கா பேரவையின் உறுப்புரிமையை இழந்திருக்கின்றது. அதனால் அது அமைதியாக இருக்கும் என்று கூற முடியாது. 

ஏனென்றால், 2009இல் அமெரிக்காவோ, இலங்கையோ மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாக இருக்கவில்லை. ஆனாலும் 2009 மே 4ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன், ஜெனிவாவில் உள்ள அமெரிக்க பிரதிநிதிக்கு அனுப்பிய கேபிள் தகவல் ஜுலியன் அசாஞ்சே ஊடாக விக்கிலீக்ஸில் வெளிப்பட்டிருந்தது. 

அதில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அந்தப்பிரேரணை தோல்வி அடைந்தால் இராஜதந்திர ரீதியில் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன் இலங்கை தொடர்பான பிரேரணையை தமக்கு அனுப்பி வைக்கும்படியும், அதனை வசன ரீதியாக செம்மைப்படுத்தி மீள அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆகவே அமெரிக்கா உறுப்பு நாடாக இல்லாது விட்டாலும் தனது அழுத்தத்தினை அதியுச்சமாக பிரயோகிக்கும். 


கேள்வி:- அப்படியென்றால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படலாம் என்று கருதுகின்றீர்களா? 


பதில்:- ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தம்மை ட்ரெம்ப் வாதிகளாக பிரதிபலித்தனர். மனித உரிமைகள் பேரவையுடன் ட்ரெம்ப் அரசுக்கு காணப்பட்ட முரண்பாடுகள் தமக்குச் சாதகமாக இருக்கும் என்றும் கருதினார்கள். ட்ரெம்பை போன்றே மனித உரிமை பேரவையை மதிக்காது, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.  

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ட்ரெம்ப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு மனித உரிமைகள் விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கும் ஜோ பைடன், கமலா ஹரீஸ் நிருவாகத்தினை பொறுப்பெடுக்கவுள்ளனர். 

ஒபாமா, ஹிலாரி நிருவாகத்தினை விடவும் மனித உரிமைகள் விடயத்தில் அதிகளவு கரிசனை கொண்டவர்கள் என்பதால் அவர்கள் இலங்கை விடயத்தில் கணிசமான அளவு தாக்கம் செலுத்துவார்கள்.

இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் ஜெனிவாவில் இம்முறை மூன்று தரப்பினரையே நம்பியிருந்தனர். ஐ.நா.மனித உரிமை பேரவையுடன் கடுமையாக முரண்படும் தரப்புக்களான அமெரிக்காவின் ட்ரெம்ப் நிருவாகம், இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு நிருவாகம் மற்றும் சீனா ஆகியன அவையாகும். இதில் சீனா மட்டுமே எஞ்சியிருக்கின்றது. 

2009இல் நான் வதிவிடபிரதிநிதியாக பதவியில் இருந்தபோது இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை தோற்கடிக்க முடிந்ததைப் போன்ற நிலைமைகள் தற்போது இல்லை. மேற்குல நாடுகளின் நிலைப்பாடுகள் வெகுவாக மாறியுள்ளன.  

அந்த அடிப்படையில் இம்முறை பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு பெரும்பான்மையான ஆதரவு காணப்படும் என்று எதிர்பார்க்கலாம். 


கேள்வி:- பிரெக்ஸிட் ஒப்பந்தத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியமை மற்றும் அந்நாட்டுடன் புலம்பெயர் சிங்கள தரப்புக்களின் அணுகுமுறைகள் அடுத்த ஜெனிவா பிரேரணையின் உள்ளடக்கங்களில் செல்வாக்குச் செலுத்துமா?


பதில்:- பிரித்தானியா, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தலிருந்து வெளியேறிய வேளையோடு இலங்கை தொடர்பிலான பிரேரணைக்கு தலைமை வகிக்கவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தமது தனித்துவ, கரிசனை அடையாளங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவே அந்நாடு அதிக பிரயத்தனம் செய்யும். 

பிரெக்ஸிட்டிலிருந்து பிரித்தானியா வெளியேறியதால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு எதிராக இருக்கும் என்று கருதமுடியாது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாக அவற்றின் ஒருமித்த செயற்பாடுகள் மட்டுமே இல்லாதிருக்கும். ஆனால் ஏனைய விடயங்களுடன் இருதரப்புக்களும் தோளோடு தோள்நின்று செயற்பாடுகளை முன்னெடுக்கும். 



கேள்வி:- தமக்கான ‘இறைமையை’ காரணம்காட்டி இலங்கை அரசாங்கம் அடுத்து நிறைவேற்றப்படும் ஜெனிவா தீர்மானத்தினையும் முழுமையாக நிராகரித்தால் என்ன நடக்கும்?


பதில்:- இலங்கையில் இறைமை என்ற விடயம் வாதவிவாதப்பொருளாகவே நீடித்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் இறைமை மக்களுக்கு உரித்தானது என்றும் அது அரசாங்கத்திற்கு அல்லது நாட்டிற்கு உரித்தானது அல்ல என்றும் திடமாகக் கூறுகின்றார்கள். அவ்வாறான கருத்தினை முன்வைப்பவர்கள் எதியோப்பிய அரசாங்கம் தனது ரிக்ரே பிராந்திய விடயத்தில் முன்னெடுத்த செயற்பாட்டை கருத்திற் கொள்ளல் வேண்டும். 

மறுபக்கத்தில் நாட்டின் இறைமையானது சகல விடயங்களிலும் சுதந்திரத்தினையும், சுயாதீனத்தினையும், அதிகாரத்தினையும் அளிக்கவல்லது என்ற நிலைப்பாட்டில் ராஜபக்ஷாக்கள் இருக்கின்றார்கள். 

குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தமக்கான இறைமை, உலக நியதிகள், சட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்றே கருதுகின்றது. அதாவது இறைமை என்பது சர்வாதிகாரம் பொருந்திய இராசதானிகளின் மன்னர்களாக இருப்பதற்கு நிகரானது என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதன் யதார்த்தம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தொடரின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் தேசிய ரீதியில் அடைந்த தோல்விகள் அதனை உணர்த்தியுள்ளன. கோட்டாபயவுக்கு சர்வதேச அரங்கம் அதனை உணர்த்தும்.


கேள்வி:- தற்போதைய அரசாங்கம் ‘உள்ளகப் பொறிமுறையில்’ பொறுப்புக்கூறல் விடயத்தினை கையாள்வதாக அறிவித்தால் சர்வதேசம் அதனை ஏற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?


பதில்:- 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. பதினொருவருடங்கள் முழுமையாக நிறைவுக்கு வந்தபோதும் உள்ளகப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான பின்னணியில் பார்க்கின்றபோது உள்ளகப்பொறிமுறையையும் நிராகரிக்கின்ற மனநிலை தான் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

இதனைவிடவும், கற்றுத்தந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டு வெளிப்படைத் தன்மையுடனான சுயாதீன விசாரணைச் செயற்பாடுகள் அவசியமென வலியுறுத்தப்பட்டு பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன. 

அதற்கு அடுத்து மக்ஸ்வெல்பரணகம மற்றும் டெஸ்மன் டி சில்வா ஆணைக்குழு அறிக்கை, அதனுள் காணப்படுகின்ற ஜோன் ஹோம்ஸின்  பிரத்தியேக அறிக்கை உள்ளிட்டவற்றிலும், அவசியம் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

அந்த அறிக்கையிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான அலகு உருவாக்கம் உட்பட மூன்று முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் இவை பற்றியெல்லாம் பேசுவதில்லை. 

அரசாங்கம் எதிர்வரும் ஜெனிவா அமர்வில் ‘உள்ளகப்பொறிமுறை’ என்பதை அடியொற்றிய பதிலளிப்பைச் செய்வதாக இருந்தால் இவ்விரு அறிக்கைளில் உள்ள பரிந்துரைகளை செய்வதாகவும், அதற்குரிய நேர அட்டவணையையும் தயாரித்து வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லை.

ஏனென்றால் அன்றைய காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளைந்தபோது கடும்போக்கு நிலைப்பாடுகளை எடுத்து எதிர்த்தவர்கள் தற்போது ஆட்சியில் உள்ளவர்களே. 

மிருசுவிலில் குழந்தை உள்ளிட்டவர்களை படுகொலை செய்த சம்பவத்தில் படைவீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தி, மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அதனை மேன் முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி பதவியேற்ற கையோடு அக்குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தார். இந்தச் செயற்பாடு உள்நாட்டு பொறிமுறையை கேள்விக்குட்படுத்தும் அண்மித்த சம்பவமாகும். 

அத்தகைய ஜனாதிபதியொருவருக்கு 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள மேலதிக அதிகாரங்களும் மேலும் இதனையொத்த செயற்பாடுகளுக்கே வித்திடும் என்றும் தர்க்க ரீதியாக கூறமுடியும். 

அதனைவிடவும், உள்நாட்டில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின் போது தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இயலுமானவரையில் நிராகரித்தலும் பங்கேற்பினை மட்டுப்படுத்தலும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. 


கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக மியன்மார் அல்லது சிரியா நாடுகள் விடயத்தில் முன்னெடுக்கப்படும் பொறிமுறையை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாட்டினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?


பதில்:- தமிழ் மக்களின் பிரதிநிதிகளையிட்டு நான் மிகவும் கவலைப்படுகின்றேன். ஏனென்றால் தென்னிலங்கையில் உள்ள ராஜபக்ஷ சகோதரர்களின் அரசாங்கம் போன்று தான் அவர்களும் யதார்த்தத்திற்கு அப்பால் சிந்திக்கின்றார்கள். வேற்றுலகில் வாழ்பவர்கள் போன்றே பிரதிபலிக்கின்றார்கள். 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது, தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்வது என்ற விடயம் சாத்தியமாகததொன்றாகும். ஏனென்றால் ரோம் உடன் படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அடுத்து பாதுகாப்புச் சபை ஊடாக கொண்டு செல்வதாக இருந்தாலும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையுடனான உறவு மற்றும் பூகோள அரசியல் காரணமாக வீட்டோவைப் பயன்படுத்தலாம். 

அடுத்து மியன்மார், சிரியா விடயத்தில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது. காரணம், 2009உடன் இலங்கை விடயம் நிறைவுக்கு வந்தாகிவிட்டது. மியன்மார், சிரியாவில் உள்ள விடயங்கள் தற்போதும் நிகழ்ந்துகொண்டிருப்பவை. 

தற்போதைய நிலையில் தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களைப் பாதுகாப்பதும், சமஉரிமைகளை பெற்றுக்கொள்வதுமே பெரும் போராட்டமாகி உள்ளது. இத்தகையதொரு சூழலில் மனித உரிமைகள் பேரவையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றே அவர்கள் முதலில் பார்க்க வேண்டியுள்ளது. 

அதற்காக அதனைத் தாண்டி செல்லக்கூடாது என்று நான் கூற விளையவில்லை. ஆனால் முதலில் சாத்தியமாக இருக்கும் ஜெனிவா தளத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும். 

இனப்படுகொலை நடந்தது, படையினர் போர்க்குற்றங்களைச் செய்தர்கள் என்பதை கோசங்களாக முன்வைப்பதை விடுத்து, திருமலை ஐந்து மாணவர்கள், இசைப்பிரியா விடயம், மூதூர் விவகாரம், இவ்வாறு சாட்சியங்கள் உள்ளவற்றை மற்றும் அரசாங்கத்தின் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவற்றை மையப்படுத்திய சான்றாதாரங்களை சமர்பித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தலாம். 

மிருசுவில், குமாரபுரம் விடயத்தில் நீதிமன்ற தீர்ப்புக்களின் பின்னர் நடைபெற்ற விடயங்களை முன்வைத்து உள்ளகப்பொறிமுறையை சவாலுக்கு உட்படுத்தலாம். தென்னிலங்கை மக்களும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை சர்வதேச தளத்தில் முன்னிலைப்படுத்தி நீதி கோரலாம். 

அவ்வாறில்லாது தமிழ் பிரதிநிதிகள் தம்மை ‘மிகைப்படுத்திய சக்தியாளர்களாக காண்பிக்கும் மனோநிலையில்’; போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்த விளைந்தால் ஒருகட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயத்தினை நகர்த்த முடியாது முற்றுப்பெறும் நிலையே ஏற்படும். 

பிரபாகரனுக்கும் அதேநிலை தான் ஈற்றில் ஏற்பட்டது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆயுதப்போராட்டத்தினை நிறுத்தி மாற்று உபாயங்களை கையாள வேண்டுமென்று அன்ரன் பாலசிங்கம் கூறியதை அவர் கேட்டிருக்கவில்லை. அன்ரன் பாலசிங்கத்தினை ஒதுக்கி வைத்துவிட்டு ஆயுதத்தினால் அனைத்தையும் நிறைவேற்ற விளைந்ததால் முடிவு தலைகீழானது. 

ஆகவே அன்ரன்பாலசிங்கம், அதேபோன்று சர்வதேச அபிமானம் பெற்ற நீலன் திருச்செல்வம் போன்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஜெனிவா விடயத்தில் எவ்விதம் செயற்படுவார்கள் என்பதை கருத்திற்கொண்டு தமிழ் பிரதிநிதிகள் தீர்மானங்களை எடுப்பதே பொருத்தமானது. 

உலகநாடுகளில் அரசியல் பிரநிதிகளாக தமிழர்கள் இருக்கின்றார்கள். அயல்நாடான இந்தியா தமிழர்கள் விடயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆகவே இத்தரப்புக்களை ஒருங்கிணைத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு மத்தியஸ்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். 

தமிழ் பிரதிநிதிகள் சட்டத்துறை சார்ந்தவர்கள் அல்லவா. நீதிமன்றங்களில் சாத்தியமாகாத தீர்ப்பினை கோரினால் ஒட்டுமொத்தமாக வழக்கிற்கு என்ன நடக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல. 

மேலும் இலங்கை விடயத்தில் அடுத்த கட்டம் என்னவென்பதை தமிழ் பிரதிநிதிகளோ, புலம்பெயர் அமைப்பினரோ தீர்மானிப்பதில்லை. மனித உரிமைகள் ஆணையாளரும் அலுவலகமுமே தீர்மானிப்பார். ஆகவே ஏற்கனவே நடந்து முடிந்த விடயங்களை அவரிடத்தில் கூறுவதைவிடவும் சமகால நிலைமைகளை சான்றாதாரங்களுடன் அவருக்கு எடுத்துரைப்பது முன்னேற்றகரமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad