போலியான ஒற்றுமைக்கோசம் மக்களை மீள ஏமாற்றுவதற்கான தந்திரம் - கஜேந்திரகுமார் GGP - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 22, 2020

போலியான ஒற்றுமைக்கோசம் மக்களை மீள ஏமாற்றுவதற்கான தந்திரம் - கஜேந்திரகுமார் GGP


தமிழ் மக்களின் ஆணை தம்மிடமுள்ளதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் விடயத்தில் மேற்குலக, இந்திய நலன்களுக்கு உட்பட்டு அவர்களின் முகவர்களாக செயற்படுகின்றதே தவிர தமக்கு ஆணை வழங்கிய மக்களின் நலன்களில் இறுக்கமாக செயற்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் கட்சித்தலைவருக்கான ஏற்பாட்டின் கீழ் உரையாற்றுவதற்கு உங்களுக்கு அனுமதிக்கப்படுகின்ற போதும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இன்னமும் அனுமதியளிக்கப்படாதுள்ளதே?

பதில்:- பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களின் பிரகாரம் கட்சித்தலைவர்கள் தொடர்பாக ஆளும், எதிர் தரப்பில் எண்ணிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நானும் கட்சித்தலைவர் என்ற வகையில் கூட்டங்களில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்குமாறு எழுத்து மூலமாக சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரிடத்தில் கோரியுள்ளேன்.

நான் கட்சித்தலைவர் கூட்டத்தில் பங்கேற்பதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சபை முதல்வர் தெரிவித்துள்ளதோடு எதிர்க்கட்சியே அதற்கான ஆசன ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினால் ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆகவே உத்தியோக பூர்வமாக கட்சித்தலைவர் கூட்டத்தில் என்னால் பங்குபற்ற முடியதுள்ளது.

கேள்வி:- அப்படியானால் நீங்கள் இந்தவிடயம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவருடன் பேசவில்லையா?

பதில்:- நான் பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளேன். ஆனால் சாதகமான பதில்கள் கிடைத்திருக்கவில்லை. பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் எனக்கும், விக்னேஸ்வரனுக்கும் கட்சித்தலைவர்களுக்கான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஆனால் அவ்விதம் சிந்திக்கப்படுவதாக தெரியவில்லை.

இலங்கையில் ஜனநாயக மறுப்பு என்பது வெறுமனே ஆளும் தரப்பால் மட்டுமல்ல. எதிர்க்கட்சியாலும் செய்யப்படுகின்றது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கே இவ்வாறு நிலைமை இருக்கின்றதென்றால் இலங்கையின் ஜனநாயகம் எந்த நிலையில் உள்ளது என்பது அப்பட்டமாகின்றது.

கேள்வி:- எதிர்வரும் காலத்திலும் இந்த விடயம் தீர்வின்றியே தொடரப்போகின்றதா?

பதில்:- பொதுநலவாய பாராளுமன்றக்குழுவிற்கான அங்கத்துவங்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது நிலையியற் கட்டளை திருத்தம் செய்யப்பட்டு எண்ணிக்கை மாற்றப்பட்டது. அதேபோன்று இம்முறை பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அதிகமாக இருப்பதால் நிலையியற் கட்டளைகளை திருத்தியமைக்க வேண்டியுள்ளது. ஆகவே எதிர்வரும் அமர்வுகளில் அதனைச் சுட்டிக்காட்டுவோம்.

கேள்வி:- கடந்த மூன்று மாதகால பாராளுமன்ற அமர்வுகளின் போது நீங்கள் உரையாற்றும் சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பில் தொடர்ச்சியாக கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றதே?

பதில்:- பெரும்பான்மை பிரதிநிதிகள் தமிழ் மக்கள்; பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்து அதற்கு நியாயமான பதில்களை வழங்கியிருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளை 70வருடங்கள் கடந்தும் தொடரும் நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆகவே இலங்கை பாராளுமன்றத்தின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என்பதையே கடந்த பத்து வருடங்களாக நாம் கூறிவருகின்றோம். தற்போதும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.

ஆகவே நாம் பாராளுமன்றத்தினை வெறும் மேடையாகவே பயன்படுத்கின்றோம். தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆணைபெற்ற தவிர்க்க முடியாத சக்தியாக நாம் உருவாகுமிடத்தில் பூகோள அரசியலைப் பயன்படுத்தி எமது விடயங்களை சாதிக்க முடியும்.

இம்முறை எமது தரப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றார்கள். இருப்பினும் எமது கொள்கைப்பற்றுடன் மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மையாக செயற்பட்டு வருகின்றோம். இதனால் தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டிற்குள் போலியாக ஒழிந்திருக்கின்ற கூட்டமைப்பு எம்மை அடியொற்றிவரும் நிலைமையே ஏற்படுகின்றது. அதனை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

கேள்வி:- தமிழ்த் தேசியச் சிந்தனையுடைய தரப்புக்கள் பாராளுமன்றினுள் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலியுறுத்தப்படுகின்றதே?

பதில்:- அண்மித்த உதாரணமொன்றைப் பார்ப்போம். இலங்கையின் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பு விடயத்தினை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். வரவு, செலவுத்திட்ட விவாதங்களின் போது அரசாங்கத்துக்கு எதிராக மிகக் கடுந்தொனியில் பேசினார்கள். அவ்வாறு பேசியவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை. இவ்வாறு இரட்டை முகம் கொண்டவர்கள் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வது. ஒன்றிணைவது.

கேள்வி:- புதிய அரசியலமைப்புக்கான உங்களின் முன்மொழிவு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டதாக அமைந்தமைக்கு காரணம் என்ன?

பதில்:- தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது அவர்களின் தேசத்தினை அழித்து இருப்பினைக் கேள்விக் குறியாக்குவதாகும். ஆகவே தான் தமிழர்களின் பூர்வீக தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். அரசியல் தீர்வு விடயத்திலும் நாம் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம்.

கூட்டமைப்பு அல்லது விக்னேஸ்வரன் போன்று ரணில் காலத்தில் ஒரு தீர்வுத்திட்டம், ராஜபக்ஷ காலத்தில் இன்னொரு தீர்வுத்திட்டம் என்று எம்மால் மாறிமாறி செயற்பட முடியாது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்பது ஆட்சியாளர்களை மையப்படுத்தி மாறுபட்டுக் கொண்டிருக்க முடியாது. அரசியல் தீர்வு திட்டமானது மக்களை மையப்படுத்தியதாக நிலையான விடயங்களை கொண்டிருக்க வேண்டும்.

அந்தவகையில், தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் அரசியல் தீர்வுத்திட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டது. அந்த வரைபை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனையே எமது கட்சியினது அரசியல் தீர்வுக்கான முன்மொழிவாக கொண்டிருக்கின்றோம். அதனடிப்படையில் தான் அம்முன்மொழிவு வரைபை அனுப்பி வைத்துள்ளோம்.

கேள்வி:- அரசியலமைப்புச் செயற்பாடுகளுக்கு முன்னதாக தமிழ்த் தரப்புடன் ‘அரசியல் ஒப்பந்தம்’ மேற்கொள்ள வேண்டும் என்று உங்களுடைய முன்மொழிவு வரைவில் வலியுறுத்தி இருக்கின்றீர்களே அரசாங்கம் அதற்கு செவிசாய்க்குமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- தமிழர்கள் விடயத்தில் இலங்கையின் எந்தவொரு ஆட்சியாளர்களும் செவிசாய்க்க மாட்டார்கள். தம்மிடமுள்ள அதிகாரங்களை பகிர்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ விரும்பாதிருக்கின்றமையே மனித சுபாபமும் கூட. ஆகவே எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் ஆட்சியாளர்களை இசைய வைப்பதற்காக செயற்பட வேண்டும். அதற்கு தமிழ்த் தரப்பிடம் இருக்கின்ற ஒரேயொரு விடயம் பொறுப்புக்கூறலாகும். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமானவை.

ஆகவே தான் 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்புக் கூறல் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியாது என்று மிகுந்த இறுக்கமான நிலைப்பாட்டுடன் உள்ளோம். பொறுப்புக்கூறல் விடயத்தை இறுக்கமாக முன்வைக்கும் போதே சிங்கள தேசம், தமிழ்த் தேசத்தை மையப்படுத்தி படியிறங்குவதற்கு தள்ளப்படும். அதனை நோக்கியதாகவே எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும்.

கேள்வி:- மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறும் நீங்கள் தேர்தல் நடத்தப்பட்டால் போட்டியிடுவீர்கள் என்பது முரண் நகையாக உள்ளதே?

பதில்:- மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவது ஆபத்தானது. ஏனென்றால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒற்றை ஆட்சிக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்துடன் மட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. சிங்கள தரப்புக்கள் அவ்வாறான மனநிலையில் இருக்கின்றன.

அதேநேரம், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும், விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை 13இற்குள் மட்டுப்படுத்துவதற்கு துணைபோபவர்களாகவே உள்ளனர். அவ்வாறான கூட்டமைப்பிடமோ, விக்னேஸ்வரனிடமோ மாகாண சபை அதிகாரம் செல்வதானது டக்ளஸிடம் அதிகாரம் செல்வதற்கு நிகரானது. அவ்விதமான ஆபத்தான நிலைமை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதனாலேயே மாணசபையில் போட்டியிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

பாராளுமன்றத்தில், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் நாம் கருத்துக்களை முன்வைக்கின்றபோது ஆளும், எதிர் தரப்புக்களின் பிரதிபலிப்புக்களே சர்வதேசத்திற்கான செய்தியை வழங்குபவையாக உள்ளன.

அதேபோன்று தான்; மாகாண சபையின் ஆட்சியைப் பெற்று அதனால் எந்த நன்மைகளும் தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிப்படுத்த உள்ளோம். இந்த செயற்பாட்டை மேற்கொள்ளாது விட்டால் சம்பந்தனும், விக்னேஸ்வரனும் தமிழர் இனப்பிரச்சினையை 13ஆவது திருத்தச்சடடத்திற்குள் மட்டுப்படுத்தி விடுவார்கள்.

கேள்வி:- இலங்கையை மையப்படுத்திய பூகோள அரசியலின் அண்மைக்கால நிலைமைகள் தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இத்தருணத்தினை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- 2005ஆம் ஆண்டிலிருந்து இலங்கையை மையப்படுத்திய பூகோள நிலைமைகள் தமிழர்களுக்கு சாதகமாகவே உள்ளன. 2005இல் பதவிக்கு வந்த ராஜபக்ஷவினர் சீனா பக்கம் சாய்ந்தனர். அவர்களின் சீனச் சாய்வு நிலை 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட மைத்திரி-ரணில் அரசாங்கம் சீனாவின் பிடியிலிருந்து வெளி வரமுயாத அளவிற்கு நிலைமைகளை உருவாக்கியிருந்தது.

தற்போது ராஜபக்ஷவினர் ஆட்சியினை கைப்பற்றியுள்ள நிலையில் சீன சார்பு நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இலங்கையின் சீன சார்பு நிலையை கட்டப்படுத்தவதற்கு காணப்படும் அனைத்து உபாயங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், இந்தியாவும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அந்த நாடுகளின் உபாயங்கள் அவற்றின்; சொந்த நலன்களையே மையப்படுத்தியாக உள்ளது.

ஆகவே தமது நலன்களை மையப்படுத்தி செயற்பட வேண்டுமானால் சர்வதேச நாடுகளுக்கு இலங்கையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதற்காக, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்களை அந்நாடுகள் தவிர்க்கமுடியாது பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

அவ்வாறான நிலைமை சர்வதே தரப்பினருக்கு ஏற்படுகின்றபோது தமிழர்கள் தமது பிடியை விட்டுக்கொடுக்காதிருக்க வேண்டியது அவசியமாகின்றது அவ்வாறு இருக்கின்றபோது தான் சர்வதேச நாடுகளினது நலன்களுடன் தமிழ் மக்களின் நலன்களும் ஒருபுள்ளியில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

கடந்த ஆட்சியில் எந்த நிபந்தனைகளுமின்றி சர்வதேசத்தினை கையாண்டமையால் கூட்டமைப்பு தம்மையும், தமிழ் மக்களையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது விட்டது. அதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் மக்களை மேற்குலகும், இந்தியாவும் கருவிகளாக மட்டும் பயன்படுத்துவதற்கு இடமளிக்காது மக்களின் விடயங்களை பூர்த்தி செய்யவதற்கான முயற்சியை இறுக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி:- இலங்கையின் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்திருக்கின்றீர்களா?

பதில்:- சர்வதேச தரப்பினர் ஜெனிவா விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து எம்முடன் பேசுகின்றார்கள். ஆனால் கூட்டமைப்பிடம் பத்து உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களே தமிழ் மக்களின் விடயங்களை தீர்மானிக்கின்ற சக்தியைக் கொண்டிருப்பதாக கருதுகின்றார்கள்.

அதேநேரம், தமிழ் மக்களின் ஆணை தம்மிடமுள்ளதாக கூறும் கூட்டமைப்பு மேற்குலக, இந்திய நலன்களுக்கு உட்பட்டு அவர்களின் முகவர்களாக செயற்படுகின்றதே தவிர தமக்கு ஆணை வழங்கிய மக்களின் நலன்கள் குறித்து இறுக்கமாக இருக்கவில்லை.

இவ்விதமான செயற்பாடுகளால் தான் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவங்கள் குறைந்து வருகின்றன. எதிர்காலத்தில் அது இன்னமும் குறைவடையும். அச்சமயத்தில் நாம் தமிழ் மக்களின் முழுமையன ஆணைபெற்றவர்களாகுவோம். அதனால் நாம் தவிர்க்க முடியாத சக்தியாகவும் இருப்போம். அதற்கு இடைப்பட்ட காலமே தற்போது நகர்கின்றது. இக்காலத்தில் நாம் உறுதியாகவும் நேர்மையாகவும் செயற்பட்டாலே போதுமானது.

கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ அவர்களுக்கு இயலுமானதாக இருக்கின்றது என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றன. அதன் பிரகாரமே நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் இறுதி செய்து இணைத்துக் கொள்வார்கள். அவ்விதமான நிலைமையினால் சர்வதேச நாடுகளின் மீதும் நம்பிக்கை வைத்து அந்நாடுகளின் நலன்களை மையப்படுத்திய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் செல்ல முடியாது. நாம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள். அந்த மக்களை மையப்படுத்தியே ஜெனிவா அரங்கில் அத்தனை விடயங்களும் நடைபெறுகின்றன. ஆகவே அந்த மக்களின் கருத்துக்களே எமது நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும்.

மேலும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே அதனை முடக்கி வைத்திருக்கக் கூடாது என்பதை 2012ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

மேலும் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் இலங்கை விடயம் நீடிப்பதால் பொறுப்புக்கூறல் செய்யவதற்கான வாய்ப்பே இல்லை. வெறுமனே தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் எந்த பயனுமில்லை. மாறாக அந்த தீர்மானங்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு போலியான நம்பிக்கையே அளிக்கப்படுகின்றது.

ஆகவே தான் இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து விடுவித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம், அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஒன்றை நோக்கி நகர்த்த வேண்டும். அதற்கான ஆவணப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்க வேண்டும்.. அப்போது தான் தமிழ் மக்களுக்கான உண்மையான பொறுப்புக்கூறலையும்;. நீதியையும் பெற முடியும்.

கேள்வி:- திலீபனின் நினைவேந்தலின்போது தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்த போதும் அதன் பின்னர் உங்களுடைய தரப்பு ஏனைய விடயங்களில் இணைவதை தவிர்த்து வருகின்றதே?

பதில்:- திலீபனின் நினைவேந்தலின்போது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்ததாக கூறப்படுகின்றது. இணைந்து கட்சிகளில் 13பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆனால் எமது தரப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிதரன் ஆகிய மூவரைத் தவிர ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜரில் ஏனையவர்கள் கையொப்பமிடவில்லை. இதனைவிட, கூட்டமைப்பின் பேச்சாளர் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் அக்கறை காட்டவில்லை என்று கூறுகின்றார். இவ்விதமான நிலைமகளை பார்க்கின்றபோது இதய சுத்தியான ஒற்றுமையொன்று அங்கு காணப்படவில்லை. அதுமட்டுமன்றி அவ்விதமான ஒருங்கிணைவு நேர்மையானது அல்ல. அதற்கு மறைமுக நிகழ்ச்சி நிரலும் இல்லாமலில்லை. தமிழ்த் தேசியத்தில் உண்மையான பற்றில்லாத தரப்புக்களும் தமிழ்த் தேசியக் குடைக்குள் வந்து ஒழிந்திருப்பதற்கு வழிவகுப்பது முட்டாள் தனமானது. ஆகவே ஒற்றுமை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாரில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad