அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? விக்கி விளக்கம்! vicky - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, December 19, 2020

அரசுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? விக்கி விளக்கம்! vicky

 “வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காதது உங்களைப் பல கண்டனங்களுக்குள் உள்ளாக்கியுள்ளது. உங்கள் பக்கக் கருத்துக்களைக் கூற முடியுமா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார். அவரது பதிலின் முழு விபரம் வருமாறு;

“வட கிழக்குத் தமிழ் மக்களின் அரசியலானது எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் என்று இதுகாறும் இருந்துவந்துள்ளது. அல்லது எதிர்ப்புக்காக நடுநிலைமையும் அல்லது இணக்கத்திற்காக நடுநிலைமை என்றும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலான தனது தனித்துவப் பெரும்பான்மை நிலையில் இருந்து சறுக்குவதற்குக் காரணம் அவர்கள் தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தி அப்போதிருந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி வந்தமையே. இணக்க அரசியலால் தமது ஆதரவாளர்களை கவனிக்க, சென்ற அரசாங்கத்தின் கடைசி காலத்தில் அவர்களுக்கு நிதி கிடைத்தமை உண்மையே. ஆனால் அது மட்டுமே அவர்களுக்குக் கிடைத்த நன்மை. அரசியல் ரீதியாக அவர்களால் முன்னேற முடியவில்லை.சுமந்திரன் இந்த இணக்க அரசியலுக்காக போர்க் குற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது என்று கூடக் கூறியிருந்தார். ஒற்றையாட்சிக்குள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பரவலை சமஷ்டி என்று அடையாளம் காட்டினார். “எக்சத்” “ஏகிய” பற்றி நிறையப் பேசினார். தற்போது அவரின் பேச்சுக்கள் மாறிவருவதை எல்லோரும் அவதானிக்கலாம். விசாரணை முடிந்தது என்று முன்னர் கூறியவர் விசாரணை வேண்டும் என்று இன்று கூறுகின்றார். மேலும் சம~;டி வேண்டும் என்கின்றார். என்ன நடந்தது? தமது இணக்க அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டதே காரணம்.

என்றாலும் எதிர்ப்பு அரசிலுக்குள் மீண்டும் போவதையும் அவர் விரும்பவில்லை போலத் தெரிகின்றது. ஆகவே இம்முறை இரண்டும் இல்லாமல் நடுநிலைமை வகிக்கக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. அவர்கள் வாக்களிக்கும் தினத்தில் காலை 11 மணிக்குக் கூடியே தமது முடிவுக்கு வந்துள்ளனர்.

என்னைப் பொறுத்த வரையில் நான் குறித்த நடுநிலை நிலையை சுயமாகக வெளிப்படுத்த முன்வந்ததற்கான காரணம் பின்வருமாறு –

எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை. அத்துடன் இணக்க அரசியல் என்று கூறி சுயநலமிகள் இணக்க அரசியல் செய்து வந்ததால் எம் மக்கள் கண்ட நன்மை ஒன்றுமில்லை. ஏற்கனவே அரசாங்கத்தை நான் காரசாரமாக சாடியாகிவிட்டது. 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தேன். திரும்பவும் வேண்டும் போது அவ்வாறு செய்வேன். அதாவது உண்மைகளை எடுத்துரைப்பேன். ஆனால் பொதுவாக எதிர்த்து வாக்களிப்பதே எனது நிலைப்பாடு என்று பலர் எண்ணியிருந்தார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை.

எதிர்க்கட்சிகளின் கடமை அரசாங்கத்தை எந்நேரமும் எதிர்ப்பதே என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சரியான திசையில் பயணிக்க வழி நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து. அரசாங்கம் பெரும்பான்மை நிலையைப் பெற்ற ஒன்று. எமது வாக்குகள் அவர்களுக்குத் தேவையற்றது. நாங்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தாலும் ஒன்று தான். நடுநிலைமை வகித்தாலும் ஒன்று தான். ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தச் செயலோ பேச்சோ அர்த்தமற்றது. பத்திரிகையில் போடுவதற்காக எதிர்ப்பது குழந்தைப் பிள்ளைத்தனம்.

ஆகவே நான் வாக்களிக்காமல் இருப்பதே மேல் என்று எண்ணினேன். காரணம் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு அரசியலைக் காட்டி வந்த முன்னைய அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலையே வெளிப்படுத்தி வந்திருந்தார்கள். அவர்களை எதிரிகளாகவே அப்போதைய அரசாங்கத்தினர் பார்த்தார்கள். அதனால் அவர்களுடன் அரசாங்கங்களும் பேசவில்லை. இவர்களாலும் அவர்களுடன் பேசமுடியவில்லை. நான் அவ்வாறு எனது காலத்தைத் தொடங்க விரும்பவில்லை. ஏற்கனவே 2ம் வாசிப்பில் நான் வாக்களிக்காது இருந்திருந்தேன். அதே போல்த் தொடர்ந்தால் என்ன என்று எண்ணினேன். காரணம் எமது அரசியல் கைதிகள் பற்றி அரசாங்கத்துடன் பேச வேண்டி இருக்கின்றது.

மற்றும் ஒரு புதிய அரசியல் யாப்;பு நிர்மாணத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம். முன்னைய அரசாங்கம் காலத்தில் எமது வாக்குகளுக்குப் பலம் இருந்தது. அப்போது “எமது சிறைக் கைதிகளை வெளிவிடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம்” என்று கூறியிருக்கலாம். எமது பிரதிநிதிகள் அவ்வாறு கூறவில்லை. தமது வாக்கை மக்கள் நலன் கருதிப் பாவிக்கவில்லை. இப்பொழுது அவ்வாறான ஒரு நிலை இல்லை; பேசித் தீர்க்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி ஆகியோருடன் பேசுவதென்றால் பக்கச் சார்பில்லாமல் இருப்பதே உசிதம் என்று நான் கண்டு கொண்டேன். ஒன்றை எதிர்ப்பது வெற்றியல்ல. ஒன்றுடன் இணைவதும் வெற்றியல்ல. வருவதற்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருப்பதே வெற்றி. எமது தமிழ் அரசியல்வாதிகள் இதுவரையில் போர்களை வென்று யுத்தத்தைத் தோற்றுவிட்டார்கள். எமது மக்களின் தற்போதைய ஒன்றுபட்ட குறிக்கோளை அடைவது தான் எனது ஒரேயொரு இலக்கு. அதற்கு முகம் கொடுக்க நான் தயாராகின்றேன்.

ஆங்காங்கே எனக்கு எதிராக என் மக்கள் குறை கூறுவதைப் பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால் அவர்கள் நன்மை கருதியே நான் பயணிக்கின்றேன். அது அவர்களுக்குத் தெரியாவிட்டால் நான் என்ன செய்வது? என்னை எனது மிக நெருக்கமான நண்பர்கள், நலன் விரும்பிகள் கூட குறை கூறியுள்ளார்கள். அவர்கள் மனோநிலையை நான் மதிக்கின்றேன். ஆனால் எனது பாதையில் இருந்து நான் சறுக்கமாட்டேன். அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதோ வாக்களிப்பதோ அல்ல முக்கியம். அரசாங்கத்தின் மனதை மாற்றுவது, எம் சார்பாக அவர்களைத் திசை மாற்றுவதே எனது கடமையும் கடப்பாடும். அதனைச் செய்வேன். வருங்காலம் எனது செயலைச் சீர்தூக்கிப் பார்க்கட்டும்!

ஆகவே நான் வாளாதிருந்ததற்குக் காரணம் இவை தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக நடுநிலை வகித்தார்கள் என்பதை அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மின் காற்றுவீசி ஓடாமல் இருப்பது போல்த்தான் விசையாக ஓடும் போதும் காட்சி அளிக்கும். அதற்காக இரண்டு நிலைகளையும் ஒரே நிலையென்று கூறலாமா?

No comments:

Post a Comment

Post Bottom Ad