13ஐக் கோரிநிற்றல் யார் நலனுக்கானது? - அருந்தவபாலன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, January 28, 2022

13ஐக் கோரிநிற்றல் யார் நலனுக்கானது? - அருந்தவபாலன்


இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது இணைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்துதற்கு இந்தியாவை நோக்கியதான கோரிக்கை தொடர்பாகத் தமிழ்த்தேசியத் தலைவர்கள்?( அவர்கள் கூற்றுப்படி இந்தியாவின் அடிவருடிகள் ஒருபுறம் கோத்தாபயவின் கைக்கூலிகள் மறுபுறம்)இரண்டுபட்டு நிற்கிறார்கள்.ஏன்?

இக்கோரிக்கையை முன்வைப்போர் தரப்பு நியாயங்கள்

1. உள்ளதையாவது பாதுகாத்தல்
ஆனால் இது சாத்தியமா? இணைப்பு 13இல் உள்ள விடயங்களை முழுமையாக  நடைமுறைப்படுத்தினாற்கூட இலங்கை அரசு தான் விரும்புவற்றை எவ்வித தடையுமில்லாது நிறைவேற்றும் வகையிலேயே அதன் உறுப்புரைகள் காணப்படுகின்றன. தடைகள் ஏற்பட்டாற்கூட புதிய உறுப்புரைகளை ஆக்குவதற்கோ அல்லது நீக்குவதற்கோ தடைகளில்லை. இந்தவிடயத்தில் இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்காது.

இந்த நியாயம் உண்மையாயின் சென்ற ஆட்சியில்(நல்லாட்சி) வெளிப்படையாக எதிர்கட்சியாகவும் மறைவில் பங்காளராகவும் இருந்தபோது இப்போது கூறுவதுபோல் புதிய அரசியலமைப்பு வரும்வரையில்  இதை ஏன் வலியுறுத்தவில்லை? அப்போதும் ஆக்கிரமிப்புகள் நடந்ததுதானே.உண்மை என்னவெனில் அப்போது வலியுறுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கும்எழவில்லை. அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து சலுகைகளை இழக்க நாமும் விரும்பவில்லை.

2. புதிய அரசியலமைப்பில் 13ஆவது இணைப்பு நீக்கப்படாமல் பாதுகாப்பதற்கு.

அதனைப்பாதுகாக்க வேண்டியது ஒப்பந்த செய்த தரப்பின் பொறுப்பல்லவா. அதனை ஆரம்பத்திலிருந்தே முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது அது படிப்படியாக ஒடிக்கப்பட்டபோது இந்தியாவின் பொறுப்புடைமை எங்கே போனது? மறுபுறத்தில் புதிய அரசியலமைப்பினூடாகத்தான் அதனை நீக்கவேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லையே.

3. ஆரம்பப் புள்ளியாக்க் கொண்டு நகர்த்துதல் 
நல்ல விடயம்.உள்ளதையே தரவில்லை.இருப்பதும் பிடுங்கியாச்சு.இல்லாமல் செய்யப்போவதாகவும்  கதை. இதையெதுவுமே கண்டுகொள்ளாத ஒப்பந்தகாரன். போதாக்குறைக்கு இந்தியாவுடன் மிக நெருக்கமான ஊடாட்டத்தைத் தற்போது கொண்டுள்ள பஸிலும் மொறகொடவும் தமிழ்மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினைகளே உள்ளன என்று கூறுவது. இந்த நிலையில் நம்பிக்கை கொள்ள முடியுமா?

4. இதை எதிர்ப்போர் கூறும் மாற்றுவழி என்ன?
இதுவும் நியாயமான கேள்விதான். மாற்றுவழி தெரியாமலா அல்லது இல்லாமலா கடந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் சுயநிர்ணயம்,  சமஷ்டி, கூட்டிணைவு என்றெல்லாம் உறுதி வழங்கினோம். ஐ.நா,போர்க்குற்றம், பொறுப்புக்கூறல்,மனித உரிமை, சர்வதேசம்,புலம்பெயர் உறவுகள், என்றதெல்லாம் எதற்காக? 13 ஐ ஆரம்பப் புள்ளியென்று எங்களில் எவராலும் எங்கும் சொல்லப்படவேயில்லையே. அதற்குத்தானே வாக்களித்தோம் எவ்வடிப்படையில் இம்முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள் என்ற எம்மக்களின் கேள்விக்கு எம்மிடம் என்ன பதிலுள்ளது?

விளைவு
  - இதன்மூலம் இந்தியா தனது நலன்களை உச்சப்படுத்தும்.உறுதிப்படுத்தும்.
  - இலங்கை சர்வதேச அளவில் நல்லபிள்ளையாக மாறி அழுந்தங்கள் குறையும்.இந்தியா அதற்குதவும். 
  - இப்போது இருப்பதைப் போன்ற மாகாணசபைக்கான  தேர்தல்கள் நடக்கும். எமது சாதனை எனக்கூறி முதலமைச்சர், அமைச்சர்,  உறுப்பினர்களாகும் கனவை நிறைவேற்றுவோம்.(அப்போது ஒன்றுபட்டவர்கள்  பதவிகளுக்காக முரண்படுவோம்.அது ஜனநாயகம் என்போம்.)
  - பின்னர் அதிகாரமில்லை, நிதியில்லை, எங்களால் ஒரு மயிரைக்கூடப் பிடுங்க முடியாதுள்ளது என்போம்.இந்தியாவைக் கெஞ்சுவோம். சர்வதேசத்திடம் முறையிடப்போவதாக்க் கூறுவோம். போராட்டம் வெடிக்கும் என்போம்.ஆனால் சலுகைகள் எல்லாவற்றையும் தவறாது கேட்டுப்பெற்று அனுபவிப்போம். ஆரம்பப்புள்ளியை மக்கள் மறந்துவிடுவார்கள்.

 5வருடங்களுக்குப்பின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.  

??? 

இதற்கான எதிர்ப்புகளை ஏன் விரோதமாகப் பார்க்க வேண்டும்? நோக்கம் உண்மையாயின் பேரம்பேசுதலுக்கான ஆயுதமாக ஏன் இதைப்பயன்படுத்தமுடியாது?

ஆனால்   உண்மை நிலை வேறு. எமக்கானது எதுவும் நடக்காது என்பது தெரியும்.

இருப்புக்கு ஆபத்து வந்துவிட்டால்?

No comments:

Post a Comment

Post Bottom Ad