தமிழீழம் அமைக்க ராஜீவ் தயாராக இருந்தார். ஆனால் ஒரு சின்ன சிக்கல் - சுவாமி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, August 26, 2018

தமிழீழம் அமைக்க ராஜீவ் தயாராக இருந்தார். ஆனால் ஒரு சின்ன சிக்கல் - சுவாமி

தனிஈழத்தினை அங்கீகரிப்பதற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தயாராகவிருந்தார். இருப்பினும் வரதராஜப்பெருமாள் பிரகடனத்தினை உடன் செய்வதற்கு தைரியத்தினைக் கொண்டிருக்கவில்லை. அதன்பின்னரான காலத்தில் பிரபாகரன் அனைத்து வாய்ப்புக்களையும் இல்லாது செய்தமையால் இலங்கை தேசியப் பிரச்சினையிலிருந்து இந்தியா ஒதுங்கியது என பாரதீய ஜனாதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் விராத் இந்துஸ்தான் சங்கத்தின் பொது நிகழ்வுக்கு அழைப்பதற்காக இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த சமயத்தில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- டெல்லியில் நடைபெறும் விராத் இந்துஸ்தான் சங்கத்தின் பொது நிகழ்வுக்கு நாட்டின் தலைவர்களைத் தவிர்த்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரத்தியேகமாக அழைப்பதற்கு விசேட காரணம் என்ன?

பதில்:- விடுதலைப்புலிகள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவின் படுகொலைக்கு காரணமாகவிருந்தனர். எனது பெயரும் படுகொலை செய்யும் பட்டியலில் உள்ளதாக வை.கோபாலசாமி எச்சரிக்கை விடுத்தார். இலங்கையிலும் நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம் உள்ளிட்ட முக்கிய தமிழ் தலைவர்களைஅவர்கள் படுகொலை செய்தார்கள். இந்த விடயங்களால் எனது நிலைப்பாட்டினை மாற்றினேன்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட உலக நாடுகளில் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டேன். இதனால் அந்த அமைப்பு மீது தடைகள் போடப்பட்டன. இக்காலத்தில் நோர்வே, சுவிட்ஸ்சர்லாந்து போன்றநாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளை செய்தார்கள். எனினும், முக்கிய படுகொலைகளைச் செய்யும் அந்த அமைப்பின் ஆபத்தை மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்தார். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தார். துணிச்சலாக யுத்தத்தினை முன்னெடுத்து வெற்றி பெற்றார்.

பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக இவ்வாறு செயற்பட்ட ஒரு தலைவர் என்பதால் அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. ஆகவே தான் அவரை நான் நேரில் அழைப்பதற்காக வந்துள்ளேன். இத்தகையதொரு தலைவருக்கு கடந்த தேர்தலில் அநீதிகள் இழைக்கப்பட்டமையால் அவர் தோல்வியடைந்து விட்டார். எனினும் அவருடைய துணிகர செயற்பாடே தற்போது பிராந்திய அமைதிக்கு வழிவகுத்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.

கேள்வி:- இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றமைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்னணியில் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே?

பதில்:- தமிழகத்தில் திராவிட தரப்புக்கள் ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தன. மத்திய அரசாங்கத்திலும் அவ்வாறான கருத்துக்கள் காணப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியை பொறுப்பெடுத்து சொற்ப காலங்களே ஆகியிருந்தமையால் கொள்கைகளில் பெரியளவில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் எமது நாடு அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் குறிப்பிட்டதைப்போன்று குற்றச்சாட்டுக்கள் உள்ளமையை நானும் அறிவேன். ஆகவே தான் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள கசப்பான விடயங்களை மறந்து புதிய உறவொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்படி நிகழ்வின் ஊடாக முன்னெடுக்க முயற்சிக்கின்றேன்.

கேள்வி:- குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு சார்பாக செயற்பட்டார். அதன் காரணமாகவே இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகமாகியது என்ற பொதுப்படையான கருத்து இருக்கையில் உங்களின் முயற்சி சாத்தியமாகுமா?

பதில்:- நீங்கள் குறிப்பிட்டதைப்போன்றே மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் அதிகளவான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் எமது சங்கத்தின் நிகழ்வு டெல்லியில் நடைபெறுகின்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ தான் சீனா சார்பற்றவர் என்றும் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாக வெளிப்படையான உரையொன்றை ஆற்ற வேண்டும். அதன் மூலம் டெல்லிக்கும், மஹிந்தவுக்கும் இடையில் புதிய உறவு கட்டியெழுப்பப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். 

மேலும் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் சீனா முதலீடுகளைச் செய்வதற்கு இடமளித்தார். ஆனால் உரிமையை வழங்கவில்லை. குட்டுப்படுத்தும் அதிகாரத்தினை தன்னகத்தே கொண்டிருந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அம்பாந்தோட்டை போன்றவற்றின் முழு உரிமையையுமே சீனாவுக்கு வழங்கி விட்டார்களே.

கேள்வி:- புதிய ஆட்சியாளர்கள் மீது தாங்கள் கொண்டிருக்கின்ற அதிருப்தியின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவுகளை புதுப்பிப்பதற்கு முயற்சிக்கின்றீர்களா?

பதில்:- என்னைப்பொறுத்தவரையில் முன்பிருந்தே மஹிந்த ராஜாபக்ஷவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு

வருகின்றேன். அதேநேரம் நான் எடுக்கும் முயற்சிக்கு எமது அரசாங்கம் எதிர்ப்பும் வெளியிடவில்லை. ஆகவே அவர்களுக்கும் (இந்திய அரசாங்கத்திற்கும்) இவ்வாறானதொரு தேவை ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

கேள்வி:- உங்களுடைய பார்வையில் ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமையிலான ஆட்சியொன்று இலங்கையில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?

பதில்;:- ராஜபக்ஷவினர் யாருக்கு ஆதரவளிக்கின்றார்களோ அவர்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறான ஆட்சியொன்று அமைகின்றபோது மீண்டும் வெறுப்புக்கள், தவறுகள் இடம்பெறக்கூடாது. விசேடமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சகோதரத்துவ அடிப்படையிலான நீண்டகாலத்தொடர்புகள் உள்ளன. அவை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கைக்கான தனித்துவம் காக்கப்படவேண்டும். ஆட்சியாளர்கள் மீண்டும் அமெரிக்கா சார்பாக, சீனா சார்பாக செயற்படுகின்றார்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து விடக்கூடாது என்பதே எனது விருப்பம்.

கேள்வி:- இலங்கையில் சீனாவின் அதிகப்படியான பிரவேசம் இந்தியாவின் இறைமைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்படுகின்றதே?

பதில்:- எனக்கு இதில் வித்தியாசமான பார்வையே உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவுகளே நீண்டகாலமாக இருந்துவருகின்றன. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கைலாச மலையில் இந்துக்கள் வழிபடச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றமை, எல்லைப் பிரச்சினைக்கான

பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான நிலைமையை ஏற்படுத்தியமை போன்றவற்றில் நேரடியான அனுபவம் எனக்குள்ளது. அதனடிப்படையில் பார்க்கையில் சீனா, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்ற அச்சம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும் இலங்கையில் சீனா மட்டுமே தனியாக செயற்பாடுகளை முன்னெடுக்ககூடாது. இந்தியாவுக்கும் இடமளிக்க வேண்டும். இந்தியா, சீனா கூட்டிணைந்து இலங்கையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதானது உலக மதிப்பையும் பெற்றுக்கொடுக்கும்.

கேள்வி:- ஒரேமண்டலம் - ஒரேபாதைத் திட்டம் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இந்தத் திட்டத்தில் எமக்கு ஒரேயொரு ஆட்சேபம் மட்டும் தான் உள்ளது. அதாவது காஷ்மீரில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியை பாகிஸ்தான் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது. தற்போதைக்கில்லாது விட்டாலும் என்றைக்கோ ஒரு நாள் எமக்கு சொந்தமான அந்தப்பகுதியை நாம் மீட்டெடுப்போம். அப்படியிருக்கையில் அப்பகுதி ஊடாக ஆப்கானிஸ்தானுக்குள் செல்வதற்கான பாதையை சீன அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது. அதனை மாற்றி அமைக்க வேண்டும். இதனை நாம் சீனாவுக்கு தெரிவித்துள்ளோம். சர்ச்சைக்குரிய அந்தப்பகுதி தொடர்பில் முடிவு எட்டப்படும்போது அதன் பிரகாரம் ஒரேமண்டலம் ஒரே பாதைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாக சீனாவும் தெரிவித்துள்ளது. அதேவேளை தாய்வானுக்கு இந்தியர்கள் செல்வது, அங்கு இந்தியத் தூதரகம் திறக்கப்படுவது போன்றவற்றை சீனா விரும்பவில்லை. தர்மசாலாவை மையப்படுத்தி திபெத்தை தனிநாடாக்கும் முயற்சிக்கும் இந்தியா உதவக்கூடாது என்றெல்லாம் சீனா கோரிக்கொண்டிருக்கின்றது. அந்த விடயங்களை சீனாவால் எவ்வாறு சகித்துக்கொள்ள முடியாதோ அதேபோன்று தான் எமக்கும் கஷ்மீர் விடயத்தினை சகித்துக்கொண்டு செயற்படமுடியாது.

கேள்வி:- நீடித்துக்கொண்டிருக்கும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உங்களின் கருத்து?

பதில்:- ஒருகாலத்தில் தீர்வை எட்டுவதற்கான வாய்;ப்பு இருந்தது. 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் வட,கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்று வரதராஜப்பெருமாள் முதலமைச்சரானார். அச்சமயத்தில் ராஜீவ் காந்தி என்னிடத்தில் முக்கியமானதொரு விடயத்தினை வரதாராஜப்பெருமாளிடத்தில் தெரிவிக்குமாறு கூறினார். அதாவது, பதவியேற்றவுடன் தனி ஈழத்தினை பிரகடனப்படுத்தும் அறிவிப்பினை செய்ய வேண்டும். அச்சமயத்தில் உடனே அக்கோரிக்கை தம்மால் அங்கீகரிக்க முடியும் என்பதே அதுவாகும்.

இந்தவிடயத்தினை நான் வரதராஜப்பெருமாளிடத்தில் தெரிவித்தபோது ராஜீவ் காந்தி தன்னிடத்தில் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்று கோரினார். ராஜீவ் காந்தி ஒரு நாட்டின் பிரதமராக இருக்கின்றார். அவர் தனிநாட்டு விடயத்தை பகிரங்கமாக கையாள முடியாது. உலக நாடுகளில் எதிர்ப்புக்களும் ஏற்படலாம். ஆகவே முதலில் பிரகடன அறிவிப்பினைச் செய்யுங்கள். பின்னர் ராஜீவுடன் நேரடியாகப் பேச்சுவர்த்தை நடத்தி அடுத்த கட்டம் நோக்கிச் செல்லமுடியும் என்று நான் வரதராஜப்பெருமாளுக்கு கூறினேன். எனினும் அவருக்கு அந்த அறிவிப்பினைச் செய்வதற்கான தைரியம் காணப்பட்டிருக்கவில்லை.

கேள்வி:- 1990 இல் வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடணத்தைச் செய்தாரே?

பதில்:- அவர் பிரகடனம் செய்த வேளையில் அனைத்தும் முடிவடைந்து விட்டது. ஒருகாலத்தில் நாம் தனி ஈழத்தினைக் கூட அங்கீகரிப்பதற்கு தயாராக இருந்தோம். பின்னர் விடுதலைப்புலிகள் இந்தியப்படைகளுக்கு எதிராக போர் தொடுத்ததோடு, ராஜீவையும் கொலை செய்தார்கள். புலிகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து பெருமளவு பணம், ஆயுதங்கள் என வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவை கொலையும் செய்தார்கள். அதன் பின்னர் புலிகளின் துரோகத்தனமான செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு அவர்களை மன்னிக்கவே முடியாது என்ற முடிவை நாம் எடுத்தோம். இலங்கைப் பிரச்சினை விடயத்தையும் கைவிட்டோம்.

கேள்வி:- ஆக, ராஜீவ்காந்தி தனி ஈழத்தினை ஆதரித்தார் என்று கூறுகின்றீர்களா?

பதில்:- ஆம் நிச்சயமாக,

கேள்வி:- இலங்கை-இந்திய ஒப்பந்தம் தற்போது வரையில் உயிர்ப்புடன் இருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதிருக்கின்ற, அதேநேரம் பங்குதாரர்களான இந்தியாவும் அமைதிகாத்து வருகின்றமைக்கான காரணம் என்ன?

பதில்:- இலங்கை - இந்தியத் தலைவர்களிடையே நல்லுறவுகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதன்பின்னரே இந்த விடயத்தினை சீர்தூக்கிப் பார்க்கலாம்.

கேள்வி:- அப்படியென்றால் தற்போதைய தலைவர்களுக்கு இடையில் நல்லுறவுகள் காணப்படவில்லை என்கின்றீர்களா?

பதில்:- ஆம். தற்போது அவ்வாறான உறவுகள் இல்லை. ராஜீவ் படுகொலையுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளும் இல்லை. நீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோன்று இங்கு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்தியா மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அத்துடன் இலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கு அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகள் உள்ளன. ஆகவே முதலில் இலங்கை-இந்திய தலைவர்களுக்கிடையிலான உறவுகள் மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் குறித்து பேசமுடியும்.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்:- அவர்கள் அமெரிக்காவின் பக்கமே அதிகம் சார்ந்திருக்கின்றார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

கேள்வி:- சீனாவுடன் நெருக்கமான உறவுகளை மஹிந்தராஜபக்ஷ கொண்டிருக்கின்றார் எனக் கூறப்படுகையில் அவருடைய மனநிலையில் மாற்றம் வருமென்று கருதுகின்றீர்களா?

பதில்:- அவர் சீனாவுக்கோ அமெரிக்காவுக்கோ இடமளிக்கவில்லை. அம்பாந்தோட்டையில் கூட நிருவாக அதிகாரத்தினை தன்னகத்தே தான் வைத்திருந்தார். மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தினை முதலில் இந்தியாவிடமே முன்வைத்தார். தி.மு.க தரப்புக்கள் எதிர்த்தன. அதனால் தான் அவர் சீனாவை நாடிச்சென்றார். இந்தியா வேண்டாம் என்று கூறியதுடன் அமைதியாக இருப்பதற்கு அவர் ஒன்றும் அடிமை இல்லையே. அத்துடன் அவர் மிரட்டல்களுக்கு அடிபணியாத தலைவராகவும் காணப்படுகின்றார். ஆகவே அவருடன் பேச்சுக்களை நடத்தி முடிவுக்கு வரமுடியும்.

கேள்வி:- இலங்கை-இந்திய உறவுகளை மஹிந்த ராஜபக்ஷ ஊடாகவே மேம்படுத்த முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- ஆம், அவரின் டெல்லி வருகை அதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும்.

கேள்வி:- இந்தியாவுடன் நல்லுறவுகள் ஏற்படுத்திய பின்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணமுடியும் என்கின்றீர்களே, அப்படியென்றால் மஹிந்த ராஜபக்ஷவா அதற்கு பொருத்தமானவர்?

பதில்:- அவர் தலைமைத்துவத்தில் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதற்கான சக்தியோ, திறமையோ கிடையாது.

கேள்வி:- இலங்கை-இந்திய தலைவர்களுக்கு இடையிலான உறவுகள் மேம்படுத்தவேண்டும் என்று கருதியே மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுப்பதாக நீங்கள் கூறுகின்றபோதும் ஏனைய அரசியல் தலைவர்களை புறந்தள்ளி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக செயற்படுவது போன்றல்லவா உள்ளது?

பதில்:- மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வந்தமையானது இந்தியாவின் பாதுகாப்புக்கும் நன்மையாக அமைந்தது. அவ்வாறான ஒரு தலைவருடன் இந்தியா நல்ல உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே தான் அவரை அழைத்துள்ளேன்.

கேள்வி:- தனது தந்தையாரான ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை தானும் தங்கையும் மன்னித்துவிட்டதாக அவருடைய புதல்வர் ராகுல்காந்தி கூறியதை உடனடியாக எதிர்த்த நீங்கள் அப்படுகொலையுடன் தொடர்புடைய பிரதான நபர் இத்தாலியில் இருப்பதாக கூறியிருக்கின்றீர்களே அவர் யார்?

பதில்:- யார் ராஜீவை படுகொலை செய்வதற்கு ஒப்பந்தம் செய்தாரோ அந்த நபரே இத்தாலியில் இருக்கின்றார்.

கேள்வி:- தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பழ.நெடுமாறன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறிவருகின்றார். ராஜீவின் படுகொலை ஒப்பந்தக்கொலை என்றும் அதில் பிரபாகரன் பிரதான சூத்திரதாரி என்றும் பல்வேறு தகவல்கள் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இத்தாலியில் இருப்பதாக நீங்கள் கூறும் நபர் அவராக இருக்க முடியுமா?

பதில்:- கணவனை இழந்த மனைவி தனது கனவில் கணவன் வந்து செல்கின்றார் என்று கூறுவார். பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனக் கூறுபவர்களின் கருத்தும் அதற்கே ஒப்பானதாகின்றது.

கேள்வி:- இத்தாலியில் இருக்கும் நபர் பிரபாகரன் இல்லையென்றால் அவர் யார்?

பதில்:- இத்தாலியில் உள்ளவர் யார் என்பதை நான் உங்களுக்கு தற்போது கூற முடியாது. நேரம் வரும்போது நிச்சயமாக நானாகவே கூறுவேன்.

கேள்வி:- போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தமிழகத்தில் இருப்பதாக கூறியுள்ளீர்கள். அண்மைக்காலமாக இலங்கையின் வடகடலில் அநாமதேய போதைப்பொருள் அடங்கிய பெருந்தொகையான பொதிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையில் தொடர்புகள் ஏதும் இருக்கின்றனவா?

பதில்:- அதுகுறித்து எனக்குத் தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. அங்கு விற்றுத் தீர்க்கப்படுகின்றன. அதற்கு அப்பால் தமிழகத்திலிருந்தே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்காவில் அதிக பணத்தினை பெறமுடியும் என்பதால் ஆசிய நாடுகளுக்கு அனுப்புகின்றார்கள் என்று நான் கருதவில்லை.

கேள்வி:- இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அவர்களின் ஊடுருவல்கள் இருப்பதாக கூறியுள்ளீர்களே?

பதில்:- ஆம். தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களால் கோஷங்களை மட்டுமே எழுப்ப முடியுமே தவிர எதும் செய்யமுடியாது. உதாரணமாக சீமான் போன்றவர்களைக் கூறலாம்.

கேள்வி:- எதிர்காலத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையினை தீர்ப்பதில் இந்தியா எத்தகைய கரிசணையைக் கொண்டிருக்கும்?

பதில்:- அதற்கான வாய்ப்புக்களை பிரபாகரன் இல்லாது செய்து விட்டார். தற்போதைய சூழலில் அவையெல்லாம் கிடப்பில் போய்விட்டன.

கேள்வி:- இலங்கையின் தமிழர் தரப்பு தலைமைகளுடன் எவ்வாறான உறவுகளைக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:- அவர்களுடன் எனக்கு எவ்விதமான தொடர்புகளும் இல்லை.

கேள்வி:- ஒருவேளை எதிர்காலத்தில் இலங்கை தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா கரிசனையைக் கொள்ளுமாயின் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடியொற்றியதாக இருக்குமா அல்லது புதியதொரு யோசனை முன்வைக்கப்படுமா?

பதில்:- என்னைப் பொறுத்தவரையில் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் உள்ளக விவகாரம். இதில் யாருமே தலையீடு செய்யக்கூடாது. உள்ளக ரீதியிலேயே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தீர்க்கமுடியாத பட்சத்தில் அனைத்து தலைவர்களும இணைந்து இந்தியாவின் தலையீட்டினைக் கோரினால் நாம் நிச்சயமாக தலையீடு செய்து முயற்சிகளை முன்னெடுப்போம். அதனைவிடுத்து இந்தியா முன்வந்து அனைத்து விடங்களையும் செய்து தரவேண்டிய உரிமையைக் கொண்டுள்ளது என்றே எதிர்பார்க்கின்றார்கள். அது இயலாத காரியமாகும்.

கேள்வி:- ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பாரிய கூட்டணியை அமைத்து வருவதானது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சவாலாக அமையுமா?

பதில்:- அவ்வாறில்லை. பாரதீய ஜனதாக்கட்சி பெரும்பான்மை வெற்றிபெறும்.

கேள்வி:- தமிழகத் தலைமைகளுடன் உங்களுக்கான உறவு எவ்வாறு இருக்கின்றது?அங்கு பா.ஜ.க.வின் நிலைமை என்ன?

பதில்:- தமிழகத்தலைவர்களுடன் நல்ல உறவு உள்ளது. தமிழக மாநில பா.ஜ.க.வானது தமிகத்தில் செல்வாக்கினைப் பெறுவதற்கு ரஜனியை அல்லது கமலை வைத்து முன்னேற முடியும் என்று சிந்திக்கின்றார்கள். அது தவறான முயற்சியாகும். ரஜனி கமல் அரசியல் அனுபவமற்ற கோமாளிகள். தமிழக பா.ஜ.க இவ்வாறவர்களுக்கு பின்னால் செல்வதை விடவும் திராவிடக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படலாம். தமிழக மக்களுக்கு அவர்களும் இந்தியர்கள் என்ற சிந்தனையை ஏற்படுத்தி பா.ஜ.க. தனியாக வலுப்பெறுதவற்கே முயற்சிக்க வேண்டும். கேள்வி:- இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறப்பட்டாலும் இந்துத்துவ கொள்கை பா.ஜ.க.வின் ஆட்சியில் வலுப்பெறுவதாக வெகுவாக விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்:- இந்தியா மத சார்பற்ற கொள்கையை கொண்ட நாடு என்பதற்காக எமது மதத்தினை மறந்து செயற்பட வேண்டும் என்று கருத்திற்கொள்ள முடியாது. இந்திய அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாடுகள் உள்ளன. அந்த உரிமைகளை யாரும் மறுக்கமுடியாது. எமது நாட்டில் ஏனைய மதங்களும் பின்னபற்றப்படுகின்றன. பாகிஸ்தானிலோ அல்லது சவூதியிலோ நீங்கள் ஆலயங்களை அமைக்க முடியுமா? ஆனால் இந்தியால் ஏனைய மதங்களுக்கும் இடமளிக்கப்படுகின்றதல்லவா?

(நேர்கண்டவர்: ஆர்.ராம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad