குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, August 7, 2018

குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அராலி அம்மன்  கோவிலடியில் நடந்த சந்திப்பில் பெருந்தொகையான குடும்பத்தலைவிகள் கூடியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் புலமைப் பரிசில் பரீட்ற்சைக்குத் தோற்றும் மாணவர்களால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை என்று அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.அப்பகுதி பிதேச சபை தவிசாளர் தரும் தகவலின் படி இரவு ஏழு மணியிலிருந்து விடியப்புறம் வரையிலும் சனங்கள் பதட்டத்துடனிருப்பதாகக் கூறப்படுகிறது.
கலியுகம் முடியும் போது குள்ள மனிதர்கள் தோன்றுவார்கள் என்று எனக்குத் தெரிந்த ஒரு தீவிர பக்தர் கூறுவார். அராலியிலும் இரண்டு குள்ள மனிதர்களே காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 4 அடி உயரமுள்ள இருவர், கறுப்பு உடையணிந்து சப்பாத்து அணிந்து, முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியபடி காணப்பட்டதாக அப்பிரதேசவாதிகள் கூறினர். ஊர் மக்களை தூரத்தில் காணும் பொழுது கால்களை மடக்கி முழங்காலில் நிற்பதன் மூலம் குள்ளமான தோற்றத்தைக் காட்டும் மேற்படி மர்ம நபர்கள் ஊர் மக்கள் நெருங்கி வந்ததும் சட்டென்று எழுந்து வேகமாகப் பாய்ந்து சென்று விடுவதாகவும் ஓர் ஊரவர் கூறினார். ஒரே நேரத்தில் வெவ்வேறு வீடுகளில் கற்கள் எறியப்படுவதாகவும் ஒரு இடத்தில் கற்கள் வீசப்பட்டதையடுத்து சனங்கள் அவ்விடத்தை நோக்கிக் குவியும்போது வேறு இடத்தில் கற்கள் வீசப்படுவதாக சனங்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அக்குள்ள மனிதர்களை மிகச் சிலரே நேரில் கண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அப்பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் தான் அவர்கள் அதிகம் நடமாடியதாகவும் கூறப்படுகின்றது. அராலிக் கடற்கரையில் ஒரு படை முகாம் உண்டு. கிடைக்கப்பெறும் தகவல்களின் படி குள்ள மனிதர்கள் கிணறுகள், மற்றும் வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் கழிப்பறைகள் போன்ற இடங்களில் நடமாடுவதாக நம்பப்படுகிறது. மிகவும் வேகமாக அவர்கள் நகர்வதாகவும் மதில்களை அனாயசமாகத் தாவிக் கடப்பதாகவும் கூறப்படுகிறது. சில சமயங்களில் கூரைகளில் தாவிப் பாய்வதாகவும் கூறப்படுகிறது. குள்ள மனிதர்கள் இது வரையிலும் யாரையும் தாக்கியதாகத் தகவல்கள் இல்லை. ஆனால் வீடுகளுக்கு கற்கள் எறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்படி தகவல்களிற் சணிசமானவை கண்டவரைக் கண்டவராலும் கேட்டவரைக் கேட்டவராலும் பெருப்பித்துக் கூறப்பட்டவைதான். கிறிஸ் மனிதர்களைப் போலவே குள்ள மனிதர்களைச் சுற்றியும் அமானுஷ்ய பிம்பம் ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது. இதற்குக் காரணம் குள்ள மனிதர்களை நேரில் கண்டவர்கள் என்று சொல்லப்படுவோர் மிகச் சிலரே.
இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிசில் இது வரையிலும் யாரும் முறைப்பாடு செய்திருக்கவில்லை. அப்பிரதேச சபைத் தவிசாளர் தொலைபேசி மூலம் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் தமது சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பில் ஏன் யாரும் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லை? ஏனெனில் அப்படி முறைப்பாடு செய்வதால் பலனில்லை என்று சனங்கள் நம்புவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தவிர அப்படி முறைப்பாடு செய்பவருக்கு மேலும் ஆபத்து வரலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாம். ஏற்கெனவே கிறிஸ் மனிதனைத் துரத்திக்கொண்டு போனவர்களை பின்னர் சட்டம் சுற்றி வளைத்தமை ஒரு முன்னநுபவமாகக் காணப்படுகிறது. அதாவது கிறிஸ் மனிதனைப் போலவே குள்ள மனிதனும் ஒரு முறைமுக நிகழ்ச்சி நிரலின் படி ஊருக்குள் இறக்கப்பட்டிருப்பதால் அது தொடர்பில் முறைப்பாடு செய்பவருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற நம்பிக்கை சனங்கள் மத்தியில் உண்டு. ஆயின் அப்படியொரு மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் தரப்பு எது?
படைத்தரப்பை நோக்கியே குற்றம் சாட்டப்படுகிறது. ஏனெனில் 2009 மேக்குப் பின் தமிழ்ப்பகுதிகளில் மிகவும் நிறுவனமயப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு நிறுவனமாகக் காணப்படுவது படைக்கட்டமைப்புத்தான். அது மட்டுமல்ல கிராம மட்டத்தில் மிகவும் வினைத்திறனுள்ள ஒரு புலனாய்வு வலைப்பின்னலைக் கொண்டிருப்பதும் படைக்கட்டமைப்புத்தான்.
இப்படி தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச மற்றும் அரசு சாரா கட்டமைப்புக்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதும் இறுக்கமானதுமாகிய படைக்கட்டமைப்பிற்குத் தெரியாமல் தமிழ்ப் பகுதிகளின் ஒரு சிற்றசைவும் நடக்க முடியாது. எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிந்தே நடக்கும். அப்படித் தெரியாவிட்டாலும் அது தொடர்ந்து நடப்பதற்கிடையில் அதன் வேரைக் கண்டுபிடித்து முடக்கத்தக்க பலத்துடன் படைக்கட்டமைப்பு காணப்படுகின்றது
.
எனவே படைக்கட்டமைப்புக்குத் தெரியாமல் கிறீஸ் மனிதனும் வர முடியாது, குள்ள மனிதனும் வர முடியாது என்று சாதாரண தமிழ் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். படைக்கட்டமைப்பிற்குத் தெரியாமல் போதைப் பொருளும் வர முடியாது. வாளேந்திய இளைஞர்களும் வர முடியாது என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் இப்படிப்பட்ட குற்றச் செயல்கள் நடக்கும் போது உடனடியாகக் குற்றஞ்சாட்டப்படுவது படைத்தரப்பாகும். படைப் பிரதானிகள் இக்குற்றச்சாட்டை பல தடவை மறுத்து விட்டார்கள். ஆனால் தமிழ்ப் பொது உளவியலின் கூட்டு அபிப்பிராயம் அதுதான்.
படைத்தரப்பு சம்பந்தப்படவில்லையெனில் ஏதோ ஒரு புலன்களுக்குட் சிக்காத அமானுஷ்ய சக்தி அதைச் செய்கிறது என்று பொருள். தமிழ்ச்சமூகம் பில்லி சூனியம் மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டது. ஆனால் கிறீஸ் மனிதன் குள்ள மனிதனின் விடயத்தில் அவர்கள் அமானுஷ்ய சக்திகளைச் சந்தேகிக்கவில்லை. படைத்தரப்பையே சந்தேகிக்கிறார்கள்.
கிறீஸ் மனிதர்களின் விவகாரத்தில் கொழும்பு மைய ஊடகம் ஒன்று (கொழும்பு ரெலிகிறாப்?) அரசின் அனுசரணையுடனான பில்லி சூனியம் என்ற தொனிப்பட எழுதியதாக ஒரு ஞாபகம். மகிந்த குடும்பத்திற்கு பில்லி சூனியம் மாந்திரீகத்தில் நம்பிக்கை அதிகமிருந்த ஒரு பின்னணிக்குள் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம். மகிந்தவின் காலத்தில் இறக்கப்பட்ட கிறீஸ் மனிதர்களைப் போலவே இப்பொழுதும் குள்ள மனிதர்கள் இறக்கப்பட்டிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சரி அப்படியென்றால் படைத்தரப்புக்கு இதனால் என்ன நன்மை?
இதில் இரண்டு தர்க்கங்கள் உண்டு. முதலாவது இப்படி ஊர்களை பயக்கெடுதிக்குள் வைத்திருந்தால் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக படைப்பிரசன்னத்தை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று படைத்தரப்பு நம்புவதாக ஒரு தர்க்கம், ஆனால் இது ஒரு பலவீனமான தாக்கம். ஏனெனில் கிறீஸ் மனிதனையும், குள்ள மனிதனையும் சாதாரண சனங்கள் படைத்தரப்புடன் சம்பந்தப்படுத்தியே சந்தேகிக்கிறார்கள். படைத்தரப்பு ஊர்களில் பிரசன்னமாகியிருக்கும் ஒரு பின்னணிக்குள்தான் போதைப்பொருள் வருகிறது, வாளேந்திய குழுக்கள் வருகின்றன. எனவே இக் குற்றச்செயல்களின் பின்னணியில் படைக்கட்டமைப்பு உண்டு என்றே சாதாரண சனங்கள் நம்புகிறார்கள். புதிது புதிதாகப் பிரச்சினைகள் தோன்றும் போதும் அவற்றை படைத்தரப்புடன் சம்பந்தப்படுத்தியே சிந்திக்கிறார்கள். ஊருக்குள் உள்ள படை முகாம்கள் உளவியல் அர்த்தத்தில் ஊருக்குப் புறத்தியாகவே காணப்படுகின்றன. ஊரோடு ஒன்றிக்கவில்லை. எனவே குள்ள மனிதர்களை இறக்கிப் படைப்பிரசன்னத்தைத் தக்க வைப்பது என்ற தர்க்கம் பலவீனமானது.
ஆனால் இரண்டாவது தர்க்கம் ஒப்பீட்டளவில் பலமானது. அதன்படி தமிழ் மக்கள் பயத்தின் ருசியை அனுபவிக்க இது உதவும். இதன் மூலம் பழைய யுத்த கால நினைவுகளைக் கிளறி விடலாம். இயல்பற்ற வாழ்க்கை ஒன்றிலிருக்கக் கூடிய அச்சங்களையும் நிச்சயமின்மைகளையும் குறித்து தமிழ் மக்களை யோசிக்க வைக்கலாம். சில வாரங்களுக்கு முன்பு இரண்டு குற்றச் செயல்கள் நிகழ்ந்த ஒரு பொலிஸ்பிரிவு அது. அக்குற்றச் செயல்களை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட விஜயகலா புலிகளை மீள உருவாக்குவது பற்றிப் பேசினார். எனவே அதே பிரதேசத்தில் புலிகளை மீள உருவாக்கினால் வரக்கூடிய அச்சங்களை நினைவூட்டுவதற்கு குள்ள மனிதர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருக்கலாம் என்ற ஒரு தர்க்கம் இது. ஓரளவுக்குப் பலமான ஒரு தர்க்கம்தான். அதாவது தமிழ் மக்களை இடைக்கிடை பயக்கெடுதிக்குள் வைத்திருக்கும் ஓர் உளவியல் யுத்த உத்தி.
இந்த இரண்டு தர்க்கங்களும் ஊகங்கள் அல்லது அனுமானங்கள் தான். இவற்றுக்கு துல்லியமான ஆதாரங்கள் இதுவரை கிடையாது. ஆனால் கிறீஸ் மனிதன் என்ற ஒரு முன்னைய அனுபவத்தின் பின்னணியில் சாதாரண தமிழ் மனம் குள்ள மனிதனை அப்படித்தான் விளங்கிக் கொள்கிறது. இதில் இருக்கக்கூடிய உண்மைத் தன்மைகளைச் சோதிப்பதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு பொறிமுறையும் இல்லை. படைப் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் வாழும் ஒரு மக்கள் அவ்வாறான சுய புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கட்டியெழுப்புவது கடினம். கிறீஸ் மனிதனைப் போலவே இதுவும் ஒரு மாயாவிக் கதையாக முடியக்கூடும்.
ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சுமார் மூன்றரை ஆண்டுகளின் பின்னரும் குறிப்பாக தமிழ்த் தலைவர்களால் முண்டு கொடுக்கப்படுகின்றதும் நல்லாட்சி என்று சொல்லப்படுவதுமாகிய. ஓர் ஆட்சியின் கீழும் யாழ்ப்பாணத்து ஊர்கள் சிலவற்றில் தமிழ் மக்கள் அச்சத்துடன் உறங்க வேண்டியிருப்பது எதைக் காட்டுகிறது?
முதலாவது -தமிழ்க்கிராமங்கள் தமது இயல்பான தனத்தை இழந்து விட்டன. போரினாலும், போரின் விளைவுகளாலும் தமிழ்க் கிராமங்கள் அவற்றின் இயல்பையும் அவற்றுக்கேயான கட்டுக்கோப்பையும், அப்பாவித்தனத்தையும் இழந்து விட்டன. கிராமம் என்றால் அங்கே ஒளிவு மறைவு குறைவு. யாராவது வெளியாள் வந்தால் அது முழு ஊருக்கும் தெரிய வரும். ஆனால் இப்பொழுதுள்ள தமிழ்க் கிராமங்கள் அப்படியல்ல. வன்னியில் பல கிராமங்களுக்குப் போகும் வழிகாட்டிப் பலகையே படையணிகளின் பெயர்களாகத்தான் காணப்படுகின்றது. தமிழ்க் கிராமங்கள் பல படைஅணிகளின் பெயர்களால்த்தான் வழிகாட்டப்படுகின்றன. அதாவது அவை வழமையான சிவில் கிராமங்களாக இல்லை.அவை வெளியாருக்காகத் திறக்கப்பட்ட கிராமங்கள்.
இரண்டாவது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்க் கிராமங்களில் சிவில் கட்டமைப்பு பலமாக இல்லை. ஒரு சிவில் சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் தரப்பை தமிழ் மக்கள் தங்களுக்குப் புறத்தியாகவே பார்க்கிறார்கள். குள்ள மனிதர்களின் விடயத்தில் பொலிஸ் அக்கறையற்றிருப்பதாக ஓர் அபிப்பிராயம் அப்பகுதி மக்கள் மத்தியில் உண்டு. குள்ள மனிதனைப் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டுவரும் ஊர் மக்கள் ஓரிடத்தில் கூடும்போது போலீஸ் அவர்கள் அவ்வாறு கூடுவதை தடுப்பதாகவும் முறைப்பாடு உண்டு. சமூகத்தைத் தொடர்ந்தும் பயக்கெடுதிக்குள் வைத்திருப்பது கட்டமைப்பு சார் இனப்படுகொலையின் நிகழ்ச்சிநிரல்தான் என்று கூறும் விமர்சகர்களும் உண்டு.
மூன்றாவது கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலோடு உள்ளுர்த் தலைமைத்துவங்கள் ஓரளவுக்குக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இத் தலைமைத்துவங்கள் உள்ளுர்ப் பிரச்சினைகளுக்கு முதலில் உள்ளுர்த் தீர்வைக் கண்டு பிடிக்க வேண்டும். குள்ள மனிதர்கள் விடயத்தில் ஊர் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது முதலில் உள்ளுர்த் தலைவர்கள்தான். ஊர்கள் தோறும் சுயபாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டியதும் அவர்கள் தான். ஆனால் குள்ள மனிதர்களின் விடயத்தில் அப்படிப்பட்ட உள்ளுர் விழிப்புக்குழுக்கள் எவையும் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே ரெஜினா என்ற சிறுமி கொல்லப்பட்டதும் ஒரு முதிய பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் அப்பகுதியில் தான். அதற்குப் பின்னரும் உள்ளுர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டுமென்று உள்ளுர் தலைமைத்துவங்கள் சிந்தித்திருக்கவில்லை.
எனவே கீழிருந்து மேல்நோக்கிக் கட்டியெழுப்பப்பட வேண்டிய சுய பாதுகாப்பு மற்றும் சுயவிழிப்புக் கட்டமைப்புக்களும் இல்லை. அதே சமயம் மேலிருந்து கீழ் நோக்கி வெளியாருக்காகத் திறக்கப்பட்ட கிராமங்கள். இதனால் தமது இயல்பையும் அப்பாவித்தனத்தையும் கட்டுக்கோப்பையும் இழந்த கிராமங்களுக்குள் இரும்பு வியாபாரிகள் வருகிறார்கள் ; பிளாஸ்ரிக் வியாபாரிகள் வருகிறார்கள் ; பினான்ஸ் கொம்பனிகள் வருகின்றன ; லீசிங் கொம்பனிகள் வருகின்றன் ; நுண்கடன் நிதிநிறுவனங்கள் வருகின்றன ; நிலைமாறுகால நீதி பற்றி வகுப்பெடுக்கும் என்.ஜி.ஓக்கள் வருகின்றன ; படைப் புலனாய்வாளர்கள் வருகிறார்கள் ; கிறீஸ் மனிதர்கள் வருகிறார்கள் ; குள்ள மனிதர்கள் வருகிறார்கள். இனியும் யார் யாரெல்லாம் வரப் போகிறார்கள்?

No comments:

Post a Comment

Post Bottom Ad