முல்லையில் சிங்களவர்களுக்கு காணி: மைத்திரி சந்திக்க மறுத்ததாக சார்ல்சு குற்றசாட்டு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 24, 2018

முல்லையில் சிங்களவர்களுக்கு காணி: மைத்திரி சந்திக்க மறுத்ததாக சார்ல்சு குற்றசாட்டு!!

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு நேரமொன்றை பெற்றுத்தருமாறு கோரிய போதும் ஜனாதிபதி எமக்கு நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அடுத்து வரும் தேர்தல்களின் போதும் தமிழ் மக்களே தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதனை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாவலி திட்டத்தின் ஊடாக ஒரு சொட்டு நீர் கூட 1988ஆம் ஆண்டும் முதல் இன்று வரைக்கும் முல்லைதீவு , வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு வரவில்லை.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை. எனினும் மகாவலி திட்டத்தை வைத்து இவ்விரு மாவட்டங்களில் புதிய குடியேற்றங்களையே மகாவலி அவிருத்தி அதிகாரம் கொண்டு வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் காணி உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படவில்லை. ஆனால் சிங்களவர்களுக்கு மாத்திரம் தாராளமாக வழங்கப்படுகின்றன.
ஆகவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை சிங்களவர்களுக்கு மாத்திரம் உரியதா? முல்லைதீவு பிரதேச செயலக பிரிவொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறுமாறு கூறிய போதும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அந்த சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரத்தை வழங்கியுள்ளது.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் மீதே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றது.
இந்த நிலையில் நான் நேற்று (நேற்று முன்தினம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்தேன்.

இதன்போது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் அட்டூழியங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எடுத்துரைப்பதற்கு நேரமொன்றை பெற்றுதருமாறு கோரிய போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.

மகாவலி அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் என்ற வகையிலேயே அவரிடம் நான் அனுமதி கோரியிருந்தேன். ஆனால் இராஜாங்க அமைச்சருடன் இது தொடர்பாக பேசுமாறு தன்னிடம் கூறினார்.
இந்த விடயத்தில் சிங்களவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தனது வாக்கு வங்கி குறைந்து விடும் என்று ஜனாதிபதி நினைக்கின்றார் போலவே உள்ளது.

அரச வேலைவாய்ப்புகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட செய்யாத அநீதிகளையே இந்த அரசாங்கம் செய்கின்றது.
முன்னைய ஆட்சி காலத்தில் அவர்களது கட்சிக்கார்களுக்கு வழங்கப்பட்டாலும் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கே வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது வன்னி மாவட்ட அரச நியமனங்களுக்கு குருநாகல், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அடுத்து வரும் தேர்தல்களின் போதும் தமிழ் மக்களே தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதனை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறவில்லை.

தமிழ் மக்களே தீர்மானம் எடுத்து வாக்களித்தனர். ஆனால் தற்போது தமிழ் மக்கள் விரக்தியில் உள்ளதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad