தீருவில் தூபி: சிவாஜியின் நடிப்பு! சதீஸ் கலைப்பு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, September 10, 2018

தீருவில் தூபி: சிவாஜியின் நடிப்பு! சதீஸ் கலைப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸை கட்சி அங்கத்துவத்தில் இருந்தும், நகரசபை அங்கத்துவத்திலிருந்தும் நீக்கும் கடிதத்தை தமிழரசுக்கட்சி செயலாளர் கி.துரைராசசிங்கம் அனுப்பி வைத்துள்ளார்.


வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் அண்மைக்காலமாக கட்சியுடன் முரண்பட்டு, ரெலோவிலிருந்து பிரிந்த கணேஸ் வேலாயுதத்தின் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

ஒரு காலத்தில் சிவாஜிலிங்கத்தின் வலது கையாக இருந்தவர் சதீஸ். எனினும், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட தீருவில் பன்னிரண்டு வேங்கைகள் நினைவிடத்திற்கு அருகில், அனைத்து இயக்கத்தை சேர்ந்தவர்களிற்குமான பொது நினைவிடத்தை அமைக்க சிவாஜிலிங்கம் தரப்பு முயற்சித்தது. அந்த இடத்தில் பொது நினைவிடம் அமைக்காமல், குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரண்டு வேங்கைகளின் நினைவிடத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்திய தரப்பில் சதீசும் அங்கம் வகித்தார். எனினும், ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் பொதுநினைவிடத் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றியிருந்தது. சதீஸ் மற்றும் இன்னொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் ஆகியோர் அந்த தீர்மானத்தை எதிர்த்திருந்தனர்.

இதன் எதிரொலியாக வல்வெட்டித்துறை நகரசபை தலைவரில் நம்பிக்கையில்லையென உறுப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று உள்ளூராட்சி உதவி ஆணையாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சதீஸ், மற்றும் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் சதீஸை கட்சியிலிருந்து நீக்கும் கடிதத்தை தமிழரசுக்கட்சி செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

"இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதன் பின்னணியில் சிவாஜிலிங்கமே இருக்கிறார். தீருவிலில் பொது நினைவுத்தூபி அமைப்பதை நான் எதிர்த்தேன். அங்கு விடுதலைப்புலிகளின் தூபி உள்ளது. அதை புனரமைக்க வேண்டும், பக்கத்தில் வேறு தூபிகள் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தினேன். ஆனால் சிவாஜிலிங்கம் அதை எதிர்த்தார்.

விடுதலைப்புலிகளின் நினைவிடத்தை புனரமைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை நான் எடுத்தது, கட்சியின் நிலைப்பாட்டை மீறியதாகத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு படுகிறதா?" என சதீஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

செய்தி - தமிழ்பக்கம்

No comments:

Post a Comment

Post Bottom Ad