மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறஸ்தவ மத விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலாத் தினம் இன்று யாழ் மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை காலையில் நடத்த மத்திய சுற்றுலா திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்த போதும், தியாகி திலீபனின் நினைவேந்தலின் பின்னரே நிகழ்வை ஆரம்பிக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தியதையடுத்து, நிகழ்வு தாமதமாக ஆரம்பித்திருந்தது.
அந்த நிகழ்வில் முதலமைச்சர், வடக்கு சுற்றுலாதுறையை மேம்படுத்த விசேட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றும்போது- "இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால் தியாகி திலீபன் 31 வருடங்களுக்கு முன் இந் நாளில் உயிர் நீத்த காலை நேரம் 10.48 ஐ நினைவு கூர்ந்து இக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. ஜனநாயக முறையில் அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒருவரின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருந்தது. ஆகவே தான் அவர் நினைவுக்கு மதிப்பளித்து இக் கூட்டத்தைச் சற்று தாமதித்துத் தொடங்குகின்றோம்.
மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் அனுசரணையுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், வடமாகாண சுற்றுலாப் பணியகமும் இணைந்து இவ் ஆண்டிற்கான உலக சுற்றுலாத் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத்; தேடித் தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் அவ்வாறான வளர்ச்சியை இதுவரை காணவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு சிறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவேயன்றி எமது சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பூச்சிய நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது. வட பகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்பட்டுள்ள போதும் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளரச்சியானது மிகவும் மந்தமான கதியில் நகர்வது வருத்தத்திற்குரியது.
நீண்டகால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மேம்பாடு, போக்குவரத்துக்கான தெருப் பாதைகளின் புனரமைப்பு, புகையிரத சேவையின் மீள் அறிமுகம் ஆகிய செயற்பாடுகளின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் அனுபவங்களைப் பெற்றுள்ள முதலீட்டாளர்களை இப் பகுதிக்கு வரவழைத்து சுற்றுலாத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு இத் துறையை வளர்ச்சியடையச் செய்வதற்காக வடமாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் சுற்றுலாத் துறைக்கென தனியான ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு பேராசிரியர் தேவராஜா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடமாகாணத்திற்கென 2017 – 2020 காலப்பகுதிக்கான ஒரு தந்திரோபாயத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதம் 01ம் திகதியில் இருந்து சுற்றுலாப்பணியகம் என்ற ஒரு அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கான பொறுப்புகளையும், நடவடிக்கைகளையும் அதனிடம் கையளித்துள்ளோம்.
வடபகுதிக்கான இந்த சுற்றுலாப் பணியகத்தின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமான அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை நான் அவதானித்துள்ளேன். இன்று நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சி நிகழ்வுகள் மற்றும் உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் எமது அமைச்சின் செயலாளருடன் சேர்ந்து இந்த சுற்றுலா பணியகமும் அதன் இதர உத்தியோகத்தர்களும் அக்கறையும் ஊக்கமும் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!
இன்று திறந்து வைக்கப்படுகின்ற இந்த சுற்றுலாக் கண்காட்சியில் எமது பிரதேசத்தின் கைத்தொழில் உற்பத்திகள், எமது பாரம்பரிய உணவு உற்பத்திகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எமது பிரதேச கலாச்சார நிகழ்வுகளும் இங்கே இடம்பெற இருக்கின்றன.
எமது பாரம்பரிய உணவுப் பொருட்களும், எமது உணவக விடுதிகளால் வழங்கப்படுகின்ற நவீன உணவுப் பொருட்களும் இங்கே பெருமளவில் விற்பனை செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீங்கள் உணவுத் திருவிழாவில் பங்குபற்றியவாறே இங்கு நடைபெற இருக்கின்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிகின்றேன்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களும் காணப்படுகின்றன. அவற்றை முறையாக வரிசைப்படுத்தி எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும். சரித்திரம் சில இடங்களில் பிறழ்வாக எடுத்துரைத்து வரப்படும் இக்கால கட்டத்தில் எமது பாரம்பரியத்தின் உண்மை நிலை உலகிற்கு எடுத்துக் காட்டப்படுவது அத்தியாவசியமாகின்றது.
மேலும் வடபகுதியை சுற்றிவரவுள்ள மணற்பாங்கான கடற்கரைகள் சிறந்த சுற்றுலாத்தலங்களாக மாற்றப்படலாம். வடபகுதியில் உள்ள சப்த தீவுக் கூட்டங்களில் நெடுந்தீவு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படலாம். மதரீதியான சுற்றுலா, வைத்திய சிகிற்சை சார்பான சுற்றுலா, சூழல் சார்ந்த சுற்றுலா, கலாசாரச் சுற்றுலா, இயற்கைக் காட்சிச் சுற்றுலா என்று பலவிதமான சுற்றுலாச் சாத்தியங்கள் வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை பற்றியெல்லாம் எமது சுற்றுலாப்பணியகம் கருத்தில் எடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த உலக சுற்றுலாத்தின கொண்டாட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் நாளைய தினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற இருக்கின்ற 2018ம் ஆண்டிற்கான உலக சுற்றுலாத்தின நிகழ்வில் கலந்து கொண்டு வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் இப் பகுதிகளில் காணப்படும் சுற்றுலா மையங்கள் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவதற்கான அனுகூல காரணிகள் ஆகியன பற்றி எல்லாம் ஆராயலாம்"
No comments:
Post a Comment