தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்! இடைக்கால தடைபெற்றார் மணிவண்ணன்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 11, 2018

தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்! இடைக்கால தடைபெற்றார் மணிவண்ணன்!!

தமிழரசுக்கட்சியின் வலி தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் ஜி.பிரகாஷை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இன்று இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.பிரகாஷ் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.

வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி ஜி.பிரகாஷ் நடந்து கொண்டிருந்தார். கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார். இதையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட தீர்மானிக்கப்பட்டது. அவரிடம் விளக்கமும் கோரப்பட்டது. எனினும், அவர் போதிய விளக்கமளிக்கவில்லையென கூறி, கடந்த வாரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கான கடிதம் கட்சி செயலாளரால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையகத்தால், உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

தன்னை கட்சியிலிருந்து  நீக்கியதற்கு எதிராக, ஜி.பிரகாஷ் இன்று யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். அவர் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகினார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

உதவித் தேர்தல் ஆணையாளரால் பிரகாஷிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் திகதி குறிப்பிடப்படாமல் அனுப்பப்பட்டதையும் மன்றில் மணிவண்ணன் சுட்டிக்காட்டினார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், வரும் 25ம் திகதி வழக்கை தவணையிட்டதுடன், அதுவரை பிரகாஷின் உறுப்புரிமை நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

வரும் 25ம் திகதி மாவை சேனாதிராசா உள்ளிட்ட பிரதிவாதிகளை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad