முந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, October 20, 2018

முந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்!

வணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா
ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள்
உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம்
அதைபற்றியெல்லாம் தனியே ஒரு அரங்கமைத்து
நுரைக்கநுரைக்க பேசலாம்
இப்போது உங்கள் வரவில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை
அரசியல் பற்றி எதுவும் பேசமுடியாதென்று
பத்திரிகையாளர்களோடு அடம்பிடித்ததை பார்த்தேன்

எங்களுக்கு அது பேராச்சரியமல்ல
முந்தானை முடிச்சை பத்துத்தடவை பார்த்து
முறுக்கேறி கரண்ட் அடிச்ச கதைகேட்க
இத்தனை தொலைவிருந்து ஏறிவந்தீர்களா
சில காலத்திற்கு முன் குண்டுகள் விழுந்துகொண்டிருந்த
புரட்சி பூமிக்கு புலிகளின் அழைப்பில் வந்தீர்கள்

படங்கள் பார்த்து தங்கள் மீது வைத்த மரியாதையோடு
இன்னும் பலமடங்கு எகிறிற்று
மகேந்திரனும் ஜானும் சீமானும் மணிவண்ணனும் கூட வந்தார்கள்
இனத்திற்காய் வெடித்துப்பொடியான இளவல்கள் கூட
பார்க்கத்துடித்து
துரதிஸ்ட வசமாய் பார்க்க முடியாமல்போன
பிரபாகரனை பாத்தீர்கள் கதைத்தீர்கள்
அப்பெருவீரன் படைத்ததை விருந்துண்டீர்கள்

பத்திரமாய் உங்களுக்கு ஒரு பசுங்காம்பும் கீறாமல்
உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு அனுப்பிவைத்தனர்
நல்ல நினைவுகள் இவை
இந்த யுகத்தில் உங்களுக்கு கிடைத்த பெரும்பேறு அது
இப்போது வந்திருப்பதில்
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும்
வரலாற்று பெருமைக்கு கறைகளை அள்ளி பூசுகின்றீர்கள்
எப்படி முள்ளிவாய்க்காலில் தமிழரை கொன்றொழித்தவர்களோடு
கூட்டுச்சேர்ந்திருக்கும்
எங்கள் ஊர் எம் எல் ஏ யோடு இணைந்து உலாவருகின்றீர்கள்
பணத்தை கொட்டி அழைக்கின்றார்கள் என்பதற்காக
தமிழினத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள்

என்ன செய்கிறார்கள் என்பதை
ஒன்றுக்கு பத்துமுறை கண்க்கிட்டு ஈழத்தில் கால் வைத்தால்
பொக்கிசமாய் இருக்கும் அந்த நாள் புல்லரிப்பு
இனியும் தொடருமல்லவா
பாசமிக்க பாரதிராஜா பாக்கியராஜா
நீங்கள் உங்கள் துறைகளில் சிகரங்கள்
அதற்காய் நூறுமுறையும் தலைசாய்க்கலாம்

ஆயினும் நீங்கள் அரச அடிவருடிகளால்
விளம்பர முகவர் ஆக்கப்பட்டுள்ளீர்கள்
நீங்கள் நன்கறிந்து சேரலாதன் சாகும் போதும்
இசைப்பிரியா படைகளால் சிதைக்கப்படும்போதும்
படப்பிடிப்புக்கருவியோடு முன் உங்களை சந்தித்த
நண்பர்கள் வீழும்போதும்
இப்போது முந்தானை முடிச்சை நினைவூட்டும்
வேடதாரிகள் போர் நடக்கும் மண்ணில் இல்லை

பிரபாகரனை நம்பாமல் எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து
அண்ணன் எப்ப போவான்
திண்ணை எப்ப காலியாகுமென காத்திருந்தவர்கள்
ஈழத்தின் தெருவில் இப்போது
பைத்தியகாரர் போல பல பேர் போய்கொண்டிருக்கின்றார்கள்
இறங்கி அவர்களோடு பேசுங்கள்
அவர்கள் அத்தனையும் வரலாற்றுப்பொக்கிசங்கள்
அந்த வரலாற்று பொக்கிசங்கள்
நம்பி ஏற்றியதற்காய்
இனத்தின் எதிரிகளோடு கூட்டுச்சேர்ந்த
குள்ள நரிகளோடுதான் நீங்கள் மேடையில் அமர்ந்துள்ளீர்கள்

நல்லது தமிழகத்தின் பெரியவர்களே
கலைச்சிருஸ்டிகளோ
இது எனது நகமும் தசையுமான உங்கள் மீதான ஊடல்
உங்கள் கண்களில் படாத ஒரு கவிஞனின் கருத்து
உங்களுக்கு என்றோர் கொள்கையுண்டு
அதில் என்னுடைய கருத்துக்களையும் முடிந்தால்
வைத்து சரிபிழை பாருங்கள்

முருங்கைக்காயுண்டு முன்னிராவில் மோகனத்தில்
கன்னங்களில் முத்தமிட்டு
சொர்க்க வாசலை திறக்கவேண்டிய
எத்தனையோ வாலிபங்களை
மண்ணுக்கென்றபேரால் மரணத்திடம் கொடுத்துவிட்டோம்
அதனால்தான் இப்படி கொதிக்கிறது மனது வேறொன்றுமில்லை-பொன்காந்தன்-

தொடர்பு செய்தி

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனிடையே இன்று யாழில் ஊடகவியலாளர்களை சந்திப்பதுடன் அங்கும் நிகழ்வொன்றில் அவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad