மைத்திரி சொன்ன பட்டாம்பூச்சிகள்: பின்னணி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 8, 2018

மைத்திரி சொன்ன பட்டாம்பூச்சிகள்: பின்னணி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில், அரசாங்கத்தில் தீர்மானங்கள் ''பட்டாம்பூச்சி'' கூட்டத்தினால் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாண்டு கால ஆட்சியில் முக்கிய முடிவுகளை அமைச்சரவை எடுக்கவில்லை. ஜனாதிபதியாக நான் எடுக்கவில்லை. அமைச்சர்கள் எடுக்கவில்லை. ''பட்டாம்பூச்சிக்''கூட்டத்தினாலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

சர்ச்சையான இந்தப் பேச்சு குறித்து புதன்கிழமை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து ''எந்தவொரு பாலியல்சார் சமூகத்தையும் சுட்டிக்காட்டவில்லை'' என புதிய அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

எந்த சமூகத்தையும் மையப்படுத்தி ஜனாதிபதி இதனைக் குறிப்பிடவில்லை. இதில் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். ஓரினச்சேர்க்கையாளர்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி அதனைக் கூறிவில்லை'' என்று மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

''பட்டாம்பூச்சி என்பது ஒரு மென்மையான பூச்சி. பட்டாம்பூச்சி என்று குறிப்பிட்டதை பிழையாக அர்த்தப்படுத்துகின்றனர்.'' என்று அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலெிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினரை சுட்டிக்காட்டியே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஜனாதிபதியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க

இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ''எல்லா முடிவுகளுமே ஜனாதிபதியாலோ, அமைச்சரவையாலோ, என்னாலோதான் எடுக்கப்பட்டன. என்னைச் சுற்றியிருந்தவர்கள் முடிவெடுக்க முடியாது. அமைச்சர்கள் முடிவெடுத்தார்கள். அல்லது கேபினட் குழுக்கள் முடிவெடுத்தன. அல்லது ஜனாதிபதி முடிவெடுத்தார். நானாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.'' என்று பதிலளித்திருந்தார்.

''அட்டையாக இருப்பதைவிட பட்டாம்பூச்சியாக இருப்பது சிறந்தது'' என ஜனாதிபதியின் பேச்சுக்கு நிதி மற்றும் ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் பதிலளித்திருந்தார்.

இதேவேளை, ஓரினச் சேர்க்கையாளர் சமூகத்தை இழிப்படுத்தும் விதமாக ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன பகிரங்கமாக கருத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக ஓரினச் சேர்க்கையாளர் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது

அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்டு, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி தனது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை தீர்த்துக்கொள்ள ஒரு தரப்பினரை பகடயாக பயன்படுத்துவது பாரதூதரமான விடயம் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் நாகரீகமற்ற முறையில் நாட்டுத் தலைவர் செயற்பட்டதை திருத்திக் கொள்ள வேண்டும். இந்த கருத்து தொடர்பில் அவர் மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஓரீனச் சேர்க்கையாளர் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாட்டின் 'முதல் குடிமகன்' மக்களின் கருத்திற்கு துரோகம் செய்து, தனது அரசியல் எதிரிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையார் சமூகத்தை ஒட்டுமொத்தமாக காயப்படுத்தி, அவமானபடுத்தி, அவமதிக்கும் நோக்குடன் 'பட்டாம்பூச்சி'' எனும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக கொள்ளுப்பிட்டி லிப்டன் சுற்றுவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்திவரும் சிவில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் ''பட்டாம்பூச்சி'' பேச்சினால் நாங்கள் புண்படவில்லை. மேலும் பலமடைந்துள்ளோம். பட்டாம்பூச்சியானது சமூக மாற்றம், நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் வேறுபாட்டிற்கான ஒரு சின்னம் ஆகும். ஆனால், அவரால் நடத்தபடும் 'தற்போதைய அரசாங்கத்தில்' உள்ளஅரசியல்வாதிகளால் ஜனநாயகத்தின் மதிப்பை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

நாம், 'பட்டாம்பூச்சி'' சமூகம் என்ற வகையில், இந்த ஜனநாயக விரோத, அதிகாரப் பசிக்கான சதித்திட்டத்தை கடுமையாக கண்டிக்கிறோம். மனித உரிமைகள், ஒரு ஜனநாயக சமூகத்தில் பாதுகாக்கப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். நாம் 'பட்டாம்பூச்சிகளாக'' அதைப் பாதுகாப்பதற்காக போராடுவோம். எவ்வித வன்முறையும் இன்றி, சமத்துவம், சமாதானம், மரியாதை ஆகியவற்றிற்கான பட்டாம்பூச்சிகளின் சிறகுகளின் சத்தத்தின் மூலம் இவ்வுலகை மாற்றலாம். எனவே, ஜனநாயகத்திற்கான பட்டாம்பூச்சிகளாக நாம் இருப்போம். இது சம்பந்தமாக, எமக்கு எதிரான ஒவ்வொரு அவமதிப்பும்தாக்குதலும் எம் போராட்டத்தை தொடர்வதற்கான ஒரு ஊக்குவிப்பு ஆகும். என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பட்டாம்பூச்சிக் கூட்டம் என ஜனாதிபதி கூறிய விவகாரம் ஏன் இவ்வளவு சர்சையானது என்பது குறித்தும், அதன் அர்த்தம் என்ன என்பது குறித்தும் அறிய, LGBT சமூக செயற்பாட்டாளர் ஒருவரைத் தொடர்புகொண்டு பிபிசி செய்தியாளர் விளக்கம் கேட்டார். இதற்குப் பதிலளித்த அவர், பட்டாம்பூச்சி என்பது சிங்கள சமூகத்தில் ஓரினபால் உணர்வாளர்களைக் குறிப்பிடும் குறியீடு என அவர் விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad