விகாரைகளுக்குச் சென்று வழிபட்டாலும் மைத்திரியின் துரோகத்துக்கு
பொதுமன்னிப்பே கிடையாது!
மாதுளுவாவே சோபித தேரரின் நினைவேந்தலில்
பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கடும் சீற்றம்
"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். அவரின் துரோகத்தன செயற்பாடுகளுக்கு பொதுமன்னிப்பே கிடையாது. நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி இப்போது அனைத்தையும் மறந்து, நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றார்."
- இவ்வாறு இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தெரிவித்தார்.
"நாட்டின் சகல துறைகளிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடுசெய்ய முன்வரவேண்டும். அத்தகைய தலையீட்டினால் மாத்திரமே நாட்டை இன்றைய சகதிக்குள் இருந்து மீட்டெடுக்க முடியும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று மாலை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சகல குழுக்களினதும் 'தார்மீகத் தலையீடு ' ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது. வண.மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். அதேபோன்ற அணுகுமுறையே இன்று முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகின்றது. அத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கின்றது.
எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகின்றது.இணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் போய் முடியலாம்.
நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பலப்பரீட்சை பரந்தளவிலான பாதக விளைவுகளைக் கொண்டுவரக் கூடும். சகலரும் ஒன்றிணைந்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த உதவவேண்டியது எமது பொறுப்பாகும்" - என்றார்.
அதேவேளை, அந்த நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, "சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்காகவும் போராடிய வண.மாதுளுவாவே சோபித தேரோ இன்று உயிருடன் இருந்திருந்தால் தான் ஆதரித்துப் பிரசாரம் செய்த பொதுவேட்பாளரின் நடத்தையைக் கண்டு பெரும் விரக்தியடைந்திருப்பார்.
தனது ஆலோசகராக சிறிலால் லக்திலகவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த தினத்தில் அவரின் அநாகரிகமான நடத்தையின் முதல் அறிகுறிகளை சோபித தேரர் அவதானித்தார். என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சோபித தேரர் ஜனாதிபதியின் செயலை நன்றிகெட்டவேலை என்று வர்ணித்தார்.
2015 ஜனவரிக்குப் பிறகு இந்த நன்றிகெட்ட குணத்தின் வெளிப்பாடுகளைப் பல தடவைகள் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. கடந்த மாதம் 26 ஜனாதிபதி செய்த காரியம் திடுதிப்பென நடந்தேறியதல்ல. அது நன்கு திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டுவருவார் எனற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் தனக்கு வாக்களித்த சகலரினதும் அபிலாஷைகளுக்கு முரணாக அமைந்த இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கான சூழ்நிலையை மைத்திரி மிகவும் ஆறுதலாக தயார் செய்தார் என்பதை இப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
முன்னைய ஆட்சியுடன் தொடர்புடைய ஊழல்காரரகளுக்கும் கொலைகாரர்களுக்கும் கிறிமினல் பேர்வழிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முயற்சித்தபோது அதற்கு குறுக்கே நின்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. நிதிக்குற்றங்கள் விசாரணைப்பிரிவின் சட்டபூர்வத்தன்மை குறித்து முதலில் சவால் விட்ட நபர் சுசில் பிரேமஜயந்தவே. அவருக்கு எதிரான ஊழல் விசாரணையொன்றை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்தார். இன்று அதே சுசில் பிரேமஜயந்த நாட்டின் நீதி அமைச்சராக மைத்திரி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருக்கின்றார்.
2005 ஜனவரி 8 வாக்குறுதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளர்ந்தெழுந்த ஒவ்வொரு தருணத்திலும் அதற்குப் பின்னணியில் மைத்தியே இருந்தார். அவர் துரோகத்தனமான முறையிலும் பண்பற்ற முறையிலும் செயற்பட்டு தன்னை நாகரிகமற்ற ஒருவராக நிரூபித்திருக்கின்றார்" - என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட அரசியல்வாதிகள், சிவில் அமைப்பினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment