மறத்தமிழன் சுமந்திரன்: ஒரு சிரிப்பு பதிவு 😀 - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, November 6, 2018

மறத்தமிழன் சுமந்திரன்: ஒரு சிரிப்பு பதிவு 😀

கம்பன்வழிவந்த மறத்தமிழன் சுமந்திரன்!

ஒரு சமயம் சோழ அரசனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், "கம்பரே இந்த நாடே எனக்கடிமை" என்று. கம்பரோ வாய்துடுக்காக "அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே" என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியமையை நினைவுபடுத்த மன்னனுக்கு சுருக்கென்றது. பல நாள்கள் இது பற்றி எண்ணி எண்ணி அவன் மனம் புழுங்கினான். அதை எப்படியோ அறிந்து கொண்டனர் அரசவையில் இருந்த மற்ற ஜால்ரா புலவர்கள்.


அவர்களுக்கும் சோழனுடைய அரசவையில் கம்பர் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டு பொறாமைதான். நேரடியாகக் கம்பனை அவமதிக்கவோ வேறெதனையும் கெடுதலாகச் செய்யவோ முடியவில்லை. ஆகவே கம்பனுடைய பெயருக்கு இழுக்கைக் கொடுத்து, அரசனால் இன்னும் அதிகமாக வெறுத்து ஒதுக்கப்படச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர்.

அரசவையில் மிகச்சிறந்த நாட்டியக்காரி ஒருத்தி இருந்தாள். பொன்னி என்பதே அவள் பெயர். பொறாமைக்காரர்கள் அவளிடம் சென்று ஒரு சிறு திட்டத்தைக்கூறி அதற்காகக் கையூட்டும் கொடுத்தனர். அத்திட்டத்தின்படி, பொன்னி கம்பனைத் தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தெல்லாம் செய்வித்து மகிழ்வித்தாள்.  அத்தருணத்தில் பொன்னி அவனிடம் ஒரு வரம் கேட்டாள். தப்பாமல் தருவதாகக் கம்பனும் வாக்குக்கொடுத்தான்.

ஓர் ஓலை நறுக்கை எடுத்துவந்து கம்பனிடம் கொடுத்து, அதில் கம்பனுடைய கையாலேயே 'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை' என்றெழுதிக் கையெழுத்திடச் செய்தாள். அந்த ஓலை, பொறாமைக் குழுவின் கைக்குச் சென்றது.

அடுத்தநாள் அரசவையில் பலரும் கூடியிருக்கும்போது, அந்த ஓலை அரசனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசன் அதனைப் பார்த்து அதிர்ந்துபோனான். மனதில் சற்று மகிழ்ச்சியும் வந்தது.

'கம்பரே! இது உம் கையெழுத்துதானா, பாரும்?'

'ஆமாம். அதில் என்ன சந்தேகம்?'

'இப்படியெல்லாம் நீர் செய்வீர் என்று யாம் கனவிலும் நினைத்ததில்லை. உம்மை இந்த அரசவையில் வைத்திருப்பதேகூட எமக்குக்கேவலம்'.

'இருங்கள் அரசே! அதில் உண்மையைத்தானே எழுதியிருக்கிறேன்.'

'என்ன உண்மை?"

'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை என்பது உண்மை. தாயாகிய ஸ்ரீ அதாவது தாசி என்னும் பொன்னி - அதாவது பொன்மகள் - லட்சுமிக்குக்
கம்பன் அடிமை என்று எழுதியிருக்கிறேன். சாத்திரவிரோதமாய் நான் என்னத்தை இங்கு செய்தேன்?'

இதைக் கேட்ட அரசனுக்கு கோபம் தலைக்கேறியது. கம்பரை நாடுகடத்துவதாக சொன்னான். கம்பருக்கோ ஒரே கோபம். "நீ யாரடா ஜாட்டான் என்னைக் கடத்துவது, நானே உன் அண்மையை விட்டு செல்கிறேன்" எனக்கூறி விட்டு கீழ்க்கண்ட பாடலைச் சொன்னார்:

அவர் பாடியது:
`மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்-- என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு' -  என்று கம்பன் சோழ மன்னனை ஏசியமை போன்றுதான், நேற்று வவுனியாவில் தன் இன மக்கள் முன் கம்பன் வழிவந்த மறத்தமிழின் எம்.ஏ.சுமந்திரன், நாட்டின் முதற்பிரஜை எனப் போற்றப்படும் மேன்மைதங்கிய ஜனாதிபதியை ''நீ'', ''உனக்கு'' என்று நெஞ்சுரத்தோடு பேசியமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

''நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே'' என்றார் நக்கீரர். அது இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் என்றாலும் பொருந்தும். அதேபோன்றுதான் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தாலும், அறம், தர்மம், நீதி, நேர்மை சார்ந்து அவர் ஒழுகுவாராகில் மட்டும்தான் அவருக்கு அதற்குரிய மதிப்பும், கௌரவமும் அளிக்கப்படும். அவர் ஒழுக்கம் பிறழ்வாராகில் தன்மரியாதையைத் தானே இழந்தவராகுவார். அதுதான் சுமந்திரன் பொங்கி எழக் காரணம் ஆயிற்று.

மஹிந்தவின் வீட்டில் இரவு அப்பம் சாப்பிட்டுவிட்டு, பகல் அவருக்கே ஆப்பு வைத்துவிட்டு, தேர்தல் முடிவு வெளியாகும் வரை தென்னந்தோட்டத்தில் ஒளிந்திருந்த கோழை ஜனாதிபதி மைத்திரி.

தன்னை ஒரு நீதிமானாக உரையொன்றை மைத்திரி ஆற்றியிருந்தார். அதில் அவர் மற்றவர்கள் நம்பும்படி ரணில் மீது குற்றங்களை அடுக்கியிருந்தார். அவர் மஹிந்தவுக்கு மட்டும் துரோகி அன்று, தனக்குத் தெரிந்தது துரோகமிழைப்பது மட்டுமே என்று அவரது செயற்பாட்டால் காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டமை போன்று, எங்கள் வீட்டு உப்பைத் தின்று, அஃறினைகள்தான் திண்பது. உயர்திணையுடைத்தோர் உண்பதுதான் பொருந்தும். ஆனால், மனிதம் இறந்தவன் அஃறிணையாகின்றான். அந்தவகையில்தான் மைத்திரியை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அஃறிணையில் 'தின்று' என்றார். எமது உறுப்பினரையே விலைக்கு வாக்கிய துரோகி நீ!. என்றார்.

மைத்திரி ஜனாதிபதியாக வருவதற்குக் கூறியவை. ரணிலைப் பிரதமர் ஆக்குவேன். தற்போது அதுவும் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன். அது இந்த 3 வருடத்தில் நடத்தப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வழிப்பேன். அது ''வெண்ணெய் திரண்டுவர தாழியை உடைத்த'' மாதிரி அவர் செயற்பட்டுள்ளார். எ|துவுமே ஆற்றாத தமிழ் மக்களின் துரோகியாக மைத்திரி இன்று உள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் எமது உப்பைத் தின்று எமது மக்கள் வாக்கால் அரியாசனம் ஏறிய மைத்திரி, வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை, சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. இவை ஏதும் நடந்தால் தனது பிணத்தின்மேலேதான் நடக்கும் என்று உரைத்துள்ளார். இதற்குப் பின்னர் இவர்சாந்த அரசை அமைப்பதற்கும் இவருக்கு உரிய கௌரவத்தைக் கொடுப்பதற்கும் தமிழ் மக்கள் என்ன முட்டாள்களா?

அண்மையில் கூட மயிலிட்டி மீன்பிடி துறைமுக அமைப்புக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு உரையாற்றிய ஜனாதிபதி, தமிழரசுத் தலைவர் மாவை முன்னிலையில், தான் ஜனாதிபதியாக வருவதற்கு எதிர்கொண்ட பாரிய சவாலை மீட்டு உரையாற்றினார். ''கரணம் தப்பினால் மரணம்'' என்ற நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டார். தான் தோற்றிருந்தால் ஆறடி மண்ணில் புதைக்கப்பட்டிருப்பேன் தமிழ் மக்களின் வாக்குகளே தன்னைக் காப்பாற்றின என்றார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியமைபோன்று அவரது அரசியல் வாழ்வு ஆறடி மண்ணுக்குள் புதைபடப்போவது உறுதி.

தெல்லியூர் சி.ஹரிகரன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad