வித்தியாதரனின் மாத சம்பளத்தை வெளியிட்ட மணிவண்ணன்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 25, 2021

வித்தியாதரனின் மாத சம்பளத்தை வெளியிட்ட மணிவண்ணன்!

யாழ் மாநகரசபை ஊடாக விளம்பர பதாகைகள் அமைக்கும் விடயத்தில் ஊழல் நடைபெற்றதாக பல தடவைகள் காலைக்கதிர் பத்திரிகையில் சுட்டிக்காட்டி வந்த பின்னணியில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பை ஒன்றை ஏற்பாடு செய்து கருத்துவெளியிட்ட அவர் "நான் காசடித்து விட்டதாக கூறுகின்றவர்களுடைய வருட வருமானம் நான் என்னுடைய கனிஷ்ட சட்டத்தரணிக்கு கொடுக்கும் மாத சம்பளம். யாழ்ப்பாணத்தில் பெயர் கூறும் அளவுக்கு நான் சட்டத்தரணியாக இருக்கின்றேன். எனக்கு காசடிக்கும் தேவையில்லை." என தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிலரால் விஷமத்தனமாக செய்யப்படுகின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிமிக்கதான நடவடிக்கை. அது மாநகர சபையினுடைய பூரண அனுமதியுடனே முன்னெடுக்கப்பட்டது. 

நான் மாநகர முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த முதலாம் மாதம் 13ஆம் திகதி நடந்த முதல் கூட்டத்தில் இது தொடர்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் பகிரங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகளில் செய்தி பிரசுரிக்க கோரப்பட்டதுடன் இரண்டாம் மாதம் 13ஆம் திகதி பத்திரிகைகளில் பகிரங்கமாக வீதிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்த விளம்பரதாரர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பப்பட்டது.

யாழ் மாநகர எல்லைக்குள் இருக்கின்ற வரலாற்று புகழ்பெற்ற இடங்களை காட்சிப்படுத்துவதற்கும்  அதனூடாக சுற்றுலாப்பயணிகளை தூண்டுவதற்கும் மாநகர எல்லைகளை அடையாளப்படுத்துவதற்கும், நாங்கள் வீதியிலே விளம்பரபலகைகளை அமைக்க அனுமதி தாருங்களென வீதி அபிவிருத்தி அதிகாரி சபைக்கு  ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

மாநகரசபைக்கு இந்த வருட கணக்காய்வின்படி கொரோனா காரணமாக 239 மில்லியன் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் எங்களுடைய வட்டார அபிவிருத்திகள் பாதிக்கப்படுதல் , ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை, குப்பைகளை அகற்றும் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்படுமென்பதால் நாங்கள் வருமானத்தை அதிகரிக்க புதுப் புது வழிகளை  யோசிக்க வேண்டியுள்ளது.

இந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம் ஒரு வருடத்துக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்து 90 ஆயிரம் வருமானம் கிடைக்கும். மொத்தமாக 20லட்சம் வரை எதிர்பாராத ஒரு வருமானம் கிடைக்கவுள்ளது. அதே போல் ஒவ்வொரு வருடமும் இந்த தொகை மாநகர சபைக்கு கிடைக்கும்.

நாங்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் பலதடவை இந்த செயற்பாடுகள் தொடர்பில் மாநகரசபை கூட்டங்களின் போது தெரிவித்திருந்தோம். அப்போது இவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா?

சிங்கள நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளார் , ஒழித்து செய்கின்றாரெனக்  கூறுகின்றனர். அதிகளவு தொகையை விளம்பரபலகைக்கு வழங்க  நிறுவனங்கள்  தயாரில்லை.

இரண்டு இடத்துக்கு மாத்திரமே தற்போது விளம்பரதாரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் நிறுவனங்கள் இதற்காக முன்வந்தால் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

எதற்காக இனவாதம் பேச வேண்டுமென நாங்கள் யோசிக்க வேண்டும் இங்கு உள்ள தமிழ் நிறுவனங்கள் முன்வந்தால் எட்டு வீதிகள் உள்ளன அவற்றை அவர்களுக்கு வழங்கமுடியும்.

இது தொடர்பாக அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி கேட்டபோது வீதியை பயன்படுத்துவதற்கான அபிவிருத்தி கட்டணமாக 8 லட்சம் ரூபாவை செலுத்தவேண்டுமென கோரப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிய 8 லட்சம் ரூபா அதிகமெனக்கூறி எந்த விளம்பர நிறுவனங்களும் முன்வராத நிலையில் "மாநகரம் அன்புடன்
வரவேற்கின்றது" என்ற விளம்பர பலகையை அமைக்கமுடியாமல் போய்விடும் என்பதற்காக நான் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 50 வீதம் குறைக்க சிபாரிசு செய்தேன். அதை குறைப்பதும் குறைக்காமல் விடுவதும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடைய தீர்மானத்திற்குட்பட்டது.

இதனை ஏன் குழப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் இவற்றில் காசடித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். அதேபோல அந்த பணத்தின் இரு மடங்கை நான் வழங்க தயார். 

என்னுடைய சம்பள பணத்தை நான் இன்னொருவருக்கு வழங்குகிறேன். முன்னாள் முதல்வர் 2 லட்சம் மேலே எடுத்ததாக ஒரு கருத்து ஒன்று இருக்கிறது. என்னுடைய சொந்த பணத்திலேயே மக்கள் பணிகளை செய்து கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட நான் சவால் விடுகிறேன். நான் ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

நான் காசடித்து விட்டதாக கூறுகின்றவர்களுடைய வருட வருமானம் நான் என்னுடைய கனிஷ்ட சட்டத்தரணிக்கு கொடுக்கும் மாத சம்பளம். யாழ்ப்பாணத்தில் பெயர் கூறும் அளவுக்கு நான் சட்டத்தரணியாக இருக்கின்றேன். எனக்கு காசடிக்கும் தேவையில்லை.

நாடு முடக்கப்பட்ட இந்த நிலையிலும் இவ்வளவு வேக அபிவிருத்திப்பணிகள் இடம்பெறும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.  கடந்த  இரண்டு வருடமும் 10 மாதங்களும் மாநகர ஆட்சியில் இருந்தவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

மாநகர அபிவிருத்தியை குழப்பி சாக்கடைக்கு தொடர்ந்தும் இருப்பதற்கா அவர்கள் விரும்புகிறார்களா? தங்களுடைய அரசியல் எதிர்காலம் அழியப் போகின்றது என்பதே இதற்கு பின்னணியில் உள்ளவர்களின் பிரச்சினை. அடுத்த முதல்வராகலாம் என்ற நப்பாசை கொண்டவர்களுக்கு என்னுடைய செயற்பாடு பயத்தை ஏற்படுத்தும்.

கதிரையை சூடாக்குவதற்கு நான் முதல்வராக வரவில்லை. நான் ஏற்றுக்கொண்ட பதவியை திறம்பட செயல்படுத்த வேண்டும் இவ்வாறு இவர்கள் செய்யத்தான் நான் இன்னும் வேகமாக செயற்படுவேன்.

2016 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட
மாகாண சபை உப விதிகளின்படி மாநகர முதல்வர் தான் விளம்பரத்தை அனுமதிப்பதா இல்லையோ என்பதை தீர்மானிப்பதென தெளிவாக உள்ளது.   முதல்வரிடம் அல்லது மாநகர ஆணையாளருக்கு இந்த அதிகாரம் காணப்படுகின்றது. இதில் மாநகரசபைக்கு எந்த  அதிகாரமும் கிடையாது. ஆனாலும் நான் ஒவ்வொரு விடயங்களையும் சபையினுடைய அனுமதியுடனே செய்கிறேன்.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். நான் ஒரு சட்டத்தரணியாக வழக்கு தொடரவும் நான் தயார் .

மாநகர சபை உறுப்பினர்கள், மக்களுக்கு வருகின்ற காசில் இழப்பை ஏற்படுத்துபவர்களாக இருந்தால் நான் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுடைய சம்பளத்திலிருந்து அதனை அவர்கள் வழங்குவதற்கும் சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad