13 ஐ படித்த விக்கியரின் வரலாறு மறைந்த கதை - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, January 27, 2022

13 ஐ படித்த விக்கியரின் வரலாறு மறைந்த கதை

 


நீதியரசர் விக்கினேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட போது தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் இவ்வாறு தெரிவித்தார்.

"எமக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை ஆனால் 2/3 பெரும்பான்மையை மக்கள் வழங்கினால் அதனை பயன்படுத்தி ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி அவரை பதவி விலக்க முடியும்"
உண்மையில் விக்கினேஸ்வரனுக்கு மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களை பற்றி தெரியாமல்தான் அப்படி கூறினாரா ? அல்லது தெரிந்து கொண்டும் தேர்தல் நோக்கில் மக்களை ஏமாற்றினாரா என்பது அவருக்கே வெளிச்சம். பின்னர் பதவிக்கு வந்தபின் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை.
மாகாணசபைக்கு உரிய ஆளுனர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். மாகாணத்தை பொறுத்தவரை அவரே பரம்பொருள்.
ஆளுனரை பதவி விலக்க முடியும் என்று பதவிக்கு வந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் வடமாகாண பிரதமசெயலாளரைக்கூட கட்டுப்படுத்த முடியாது போனது பரிதாபம்
வட மாகாண பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கை க்கு எதிராக பிரதம செயலர் விஜயலட்சுமியால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சார்பில் சுமந்திரனே ஆஜரானார். குறித்த வழக்கில் முதலமைச்சருக்கு பிரதம செயலரை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்றே பிரதம செயலர் விஜயலட்சுமி தரப்பு வாதிட்டது. மாகாணசபை சட்டங்களின் பிரகாரம் வழக்கின் தீர்ப்பும் அவ்வாறே அமையவுள்ளது என உணர்ந்து கொண்ட சுமந்திரன் , குறித்த தீர்ப்பு வெளியானால் மக்கள் மத்தியில் மாகாணசபை முறைமை எந்தவொரு அதிகாரமும் அற்றது என்பது வெளிப்பட்டுவிடும் என கருதி முதலமைச்சர் அனுப்பிய சுற்றறிக்கையை மீளப்பெறுவதாக தெரிவித்து வழக்கை முடித்துக்கொண்டார்.
இது மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்டு மாகாணசபையில் பெரும்பான்மையை நிருபித்து முதலமைச்சர் பதவியை பெற்றவரால் அம்மாகாண பிரதம செயலரை கூட கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மை , மாகாணசபையின் கையாலாகாத தன்மை புலப்பட்ட முதல் சம்பவம்.
இதனை தவிர முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் உள்நாட்டு வெளிநாட்டு தமிழர்களிடம் நிதியை பெற்று வறிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வேலைவாய்ப்புகள் , உதவிகளை வழங்க திட்டமிட்டார்.
இதற்காக முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு மாகாணசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவினால் இது நிராகரிக்கப்பட்டது.
பின்னர் ரணில் மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசு உருவானதும் மீண்டும் அதே நியதிச் சட்டம் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டு மைத்திரியிடம் அனுமதிக்காக அனுப்ப்பட அவரும் அதனை கிடப்பில் போட்டுவிட்டார். இதனால் இறுதிவரை முதலமைச்சர நிதியம் உருவாக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஒத்திசைவின்றி மாகாணசபை யால் எதனையும் செய்ய முடியாது என்பது இதன்மூலம் புலப்பட்டது.
இது தவிர முல்லைத்தீவு கொக்கிளாயில் அரச நிலத்தை ஆக்கிரமித்து குடியேறிய இரு பெரும்பான்மையின மீனவர்களை அதிகாரிகள் நீதிமன்றின் மூலம் வெளியேற்றினர். அம் மீனவர்கள் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தபோது விசாரணைக்கே எடுக்கப்படாமல் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் அம் மீனவர்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மூலம் (மாகாணசபையின் இசைவைப்பெறாமல்)குறித்த அரசகாணிகள் வழங்கப்பட்டு மீண்டும் அவர்கள் வந்து குடியேறிய போது மாகாணசபையால் ஒன்றையும் செய்யமுடியவில்லை.
அதாவது மகாவலி அதிகார சபையின் அதிகாரத்தின் முன் மாகாணசபையால் எதையுமே செய்யமுடியவில்லை
இவை எல்லாவற்றையும் விட எளிமையான ஒரு உதாரணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தின் பெயர்ப்பலகை விவகாரம்.
குறித்த உணவகத்திற்கு அம்மாச்சி உணவகம் என பெயரிட வடமாகாணசபை விரும்பியபோதும் மத்திய விவசாய அமைச்சரால் அதற்கு சிங்கள பெயரை வைக்குமாறு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த உணவகம் பெயர்ப்பலகை எதுவுமின்றி மே திறக்கப்பட்டு இன்றுவரை இயங்கி வருகின்றது. அதாவது ஒரு பெயர்ப்பலகையை கூட தமது விருப்பத்திற்கு ஏற்ப வைக்க முடியாத பலவீனமான நிலையிலேயே மாகாணசபை உள்ளது.
இத்தகைய மாகாணசபையை அடிப்படையாக வைத்து எமது அரசியல் அதிகாரங்களை பெற முடியும் என மக்களை நம்பவைப்பது அபத்தம்.
ஆனால் தமிழ் தேசியப் பரப்பில் இயங்குவதாக கூறிக்கொள்ளும் கட்சிகள் சில இணைந்து 13 ஐ அமுல் படுத்த கோரி இந்தியாவிற்கு கடிதமும் அனுப்பியுள்ளன.
உண்மையில் கட்சிகள் ஒருமித்து 13 இனை கோரி இந்தியாவிற்கு கடிதம் எழுதிய விவகாரத்தின் பின்னால் தூண்டுகோலாகவும் இந்தியாவே உள்ளது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 உருவானது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி இலங்கையின் வெளிவிவகார கொள்கையில் இந்தியாவின் நலன்களுக்கே முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது.
தற்போதய புறச் சூழலில் இலங்கை வெளியுறவு கொள்கையில் சீனாவிற்கே முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்தியாவிற்கு தனது நலன்களை பேணுவதற்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய நிலை அவசியமாகின்றது.
கடந்த வருட ஆரம்பத்தில் ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த இந்தியா தனது கருத்தாக 13 இனை அமுல்படுத்துமாறே கோரியது.
இதனையே தற்போது தனது கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளை வைத்து தனக்கே கடிதம் எழுத வைத்து சாதிக்கவும் இந்தியா முயல்கின்றது.
தமிழ் கட்சிகளின் கடிதத்தை சாட்டாக வைத்து மீண்டும் ஒருமுறை 13 இனை அமுல்படுத்துமாறு சர்வதேச அரங்கின் முன் இந்தியா இலங்கையை கோரி தனது நலன்களை காப்பாற்ற முயல்கின்றது.
ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்த போது இந்தியா வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்தது. பாராளுமன்றில் மூலம் மீண்டும் வடக்கு கிழக்கை இணைக்குமாறு எந்தவொரு அழுத்தமும் இந்தியா கொடுக்கவில்லை. அது இலங்கையின் உள்விவகாரம் என கூறிவிட்டு அமைதியாகவே இருந்து விட்டது.
இந்தியா, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தனது நலன்களை மட்டுமே பேணவிரும்புகின்றது தமிழரின் அரசியல் உரிமையை அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.
இத்தகைய நிலைப்பாட்டில் உள்ள இந்தியாவிடம் கடிதம் எழுதி இந்திய நலன்களுக்காக தமிழரின் அரசியல் உரிமையை அடகு வைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்.


வந்தியதேவன் வல்லவராயன்

No comments:

Post a Comment

Post Bottom Ad